பாகிஸ்தான் ஒருநாள் அணியின் புதிய தலைவராக அஸார் அலி தெரிவு

azar ali (2)லாஹூர்: பாகிஸ்தான் ஒருநாள் அணியின் புதிய தலைவராக அஸார் அலியை நியமிக்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை தலைவர் ஷஹர்யார் கான் குறிப்பிட்டுள்ளார். இதன்படி இம்முறை உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணியில் இடம்பிடிக்காதவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாகிஸ்தான் ஒருநாள் அணியில் விளையாடதவருமான அஸார் அலி, ஓய்வுபெற்ற மிஸ்பா உல் ஹக்கிற்கு பதில் பாக். அணித் தலைமை பொறுப்பை ஏற்கவுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் தலைவர் ஹாரூன் ரஷீத் தலைமையில் நான்கு பேர் கொண்ட புதிய தேர்வுக் குழுவையும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அமைத்துள்ளது. இதன்படி மொயின் கான் தலைமையிலான பாக். தேர்வுக் குழு நீக்கப்பட்டுள்ளது. உலகக் கிண்ண போட்டிகளுக்கு சென்றிருந்த மொயின் கான் பாக். அணி தோற்ற ஆட்டத்திற்கு அடுத்த தினமே சூதாட்ட விடுதிக்கு சென்றதை அடுத்து நாட்டிற்கு உடன் திருப்பி அழைக்கப்பட்டார். இந்நிலையில் பாக். கிரிக்கெட்டில் மேற்கொள்ளவிருக்கும் முக்கிய மாற்றங்கள் குறித்து கிரிக்கெட் சபை இன்று அறிவிப்பை வெளியிட எதிர்பார்த்துள்ளது.

azar ali

30 வயதான அஸார் அலி, இதுவரை 14 ஒருநாள் போட்டிகளிலேயே பாகிஸ்தான் அணிக்கு விளையாடியுள்ளார். கடைசியாக அவர் 2013 ஜனவரி மாதமே ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடினார். எனினும் அவரது ஓட்ட சராசரி 41.09 ஆகும். அவர் பாக். டெஸ்ட் அணியில் நிரந்தர இடத்தை தக்கவைத்துக் கொண்ட வீரராவார். அதேபோன்று பாகிஸ்தான் அணியின் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான சப்ராஸ் அஹமட் உப தலைவராக நியமிக்கப்படவுள்ளார்.

பாக். அணியின் தலைமை பொறுப்பை அஸார் அலியிடம் வழங்க ஆலோசிக்கப்படுவது இது முதல் முறையல்ல. 2010 ஆம் ஆண்டு பாக். அணியில் ‘ஸ்பொட் பிக்ஸி’ன் சர்ச்சை எழுந்ததை அடுத்து அந்த ஆண்டு கன்னி சர்வதேச போட்டியில் களமிறங்கிய அஸார் அலியை தலைவராக நியமிக்க ஆலோசிக்கப்பட்டது. அனுபவ அடிப்படையில் தலைமை பதவியை மிஸ்பா உல் ஹக்கிற்கு வழங்க அப்போதைய பாக். சபை தலைவர் இஜாஸ் பட் முடிவு செய்தார்.

azar ali (2)

அஸார் அலி தலைமைப் பொறுப்புக்கு சர்ச்சை அற்ற சரியான தேர்வாக இருக்கும் என்று மிஸ்பா மற்றும் பயிற்சியாளர் வக்கார் யூனுஸும் கருதுகின்றனர். விவேகமான துடுப்பாட்ட வீரரும் அணியின் ஏனைய வீரர்களுடன் சுமுகமான உறவை பேணுபவருமான அஸார் அலி பாகிஸ்தானில் பல்வேறு நிலைகளிலும் தலைமை பொறுப்பேற்ற அனுபவம் கொண்டவராவார்.

Published by

Leave a comment