கொழும்பு: கோடாரியால் வெட்டப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேன உயிரிழந்தார். பொலநறுவை நகரில் வசித்துவந்த பிரியந்த சிறிசேன, வியாழக்கிழமையன்று கோடாரியால் தலையில் தாக்கப்பட்டார்.
ஜனாதிபதி சிறிசேனவின் தம்பியான பிரியந்த, தொழிலதிபராக இருந்துவந்தார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். அவருக்கு வயது 42.
பிரியந்தவுக்கும் அவரது நண்பருக்கும் இடையில் இரு நாட்களாக வாக்குவாதங்கள் நடந்துவந்த நிலையில், சந்தேக நபரின் பெற்றோரை சந்திக்க அவர்களது வீட்டிற்கு வியாழக்கிழமையன்று பிரியந்த சென்றிருந்தபோதே இந்த தாக்குதல் நடந்ததாக காவல்துறை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைக்காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, உடனடியாக பிரியந்த கொழும்பு நகருக்குக் கொண்டுவரப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இருந்தபோதும், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமையன்று அதிகாலை அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக அவரது நண்பரொருவர் காவல்துறையில் சரணடைந்தார். எதிர்வரும் 8ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க பொலநறுவ மஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையின் பிற ஜனாதிபதிகள் தங்களுடைய சகோதரர்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். ஆனால், சிறிசேனே அதனைப் பின்பற்றவில்லை.


Leave a comment