இறுதி மூச்சுடன் ஒரு முன்னால் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்

mailபின்வரும் விடயம் யாரையும் புன்படுத்துவதற்கோ அல்லது புதிய அரசை கேவலப்படுத்துவதற்கோ அல்ல இதன் பிறகு என்னால் எந்தவிதமான முயற்சிகளும் செய்ய முடியாத நிலையில் மக்கள் எனக்கு உதவுவார்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகின்றேன்.

திருகோணமலை: திருகோணமலை மாவட்ட செயலகத்தின் கீழ் உள்ள ஒரு பிரபல்யமான பிரதேச செயலகத்தில் முன்னர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினதும் தற்போது வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சினதும் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும்

(பெயர் குறிப்பிடாத) ஆகிய நான் பலத்த மன உளைச்சலுடன் கடமையாற்றி வருகின்ற வேலையில் தான் எமது இலங்கை ஜனநாயக சோஷலிஸக் குடியரசின் தற்போதைய புதிய ஜனாதிபதி  மைத்திரிபால சிரிசேன அவர்களின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தின் 100 நாட்களில் நடைமுறைக்கு வரும் உத்தேச நலன்சார் 100 வேலைத்திட்டங்களில் உள்ள ‘ அரசியல் வேலைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரிகளை அவர்களின் கல்வித் தகைமைக்கு ஏற்றவாறு அரச நியமனங்களில் உள்வாங்கி அவர்களுக்கான சேவையின் உயர்ச்சியை வழங்கல்’ என்ற விடயத்துக்கமைவாக எனது கல்வித் துறையின் அடிப்படையில் என்னை விடுவிப்பு செய்வதற்கான முயற்சிகள் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சின் MHS/GEN/EDO/Trans/2015 ஆம் இலக்க 03.03.2015 ஆம் திகதி இடப்பட்ட சுற்றுநிருபத்தின் 05 ஆம் பந்தியின் திருத்தத்திற்கமைவாக ‘ வேறு அமைச்சொன்றின் வெற்றிடத்திற்காக உத்தியோகத்தர் ஒருவர் இடமாற்ற மொன்றைப் பெற்றுக்கொள்ளும் போது அவ்வமைச்சு அங்கீகாரம் வழங்குமாயின் பதிலாளின்றி விடுவித்தல் ‘ என்ற விடயத்தின் அடிப்படையில் பல முயற்சிகள் மேற் கொண்டு வேறு அமைச்சொன்றின் அங்கீகாரம் பெற்றிருத்தும் தற்போது பதிலாளின்றி விடுவிக்க முடியாது என அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே புதிய அரசில் எமது கல்வித் தகைமைக்கும், கல்வி துறைக்கும் ஏற்ற பதவிகளில் நாம் அமர்த்தப்படுவோம் என்ற கனவு கனவாகவே உள்ளதுடன் மீதம் இருப்பது மன உளைச்சலும் அவமானமும் தான்.

ஆனாலும் இது வரை என்னால் செய்யப்பட்ட முயற்சிகளும் செலவளிக்கப்பட்ட உடல் உழைப்பும் பயணத்துக்கும், தங்கமிடத்திற்கு செலவளித்த பணவிரையங்களும் வீணாகவே கழிந்துள்ளது. இதன் பிறகு என்னால் இழப்பதற்கு உள்ள ஒன்று உயிர் மாத்திரம்தான். இதற்கு நிச்சயம் பொறுப்பானவர்கள் சம்பந்தப்பட்ட அமைச்சும், அதிகாரிகளும், உத்தியோகத்தர்களும்தான் என்பதை மிக மனவேதனையுடன் அறியத்தருகின்றேன்.

இதனை தயவு செய்து பிரசுரித்து என்னைப் போன்று பாதிக்கப்பட்டு மனவேதனையுடன் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு விடிவு கிட்ட வழியமைத்துத்தருமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றேன்.

– ஊழியன், திருமலை

Published by

Leave a comment