மெல்போன்: ‘உலகக் கிண்ணக் கிரிக்கட் 2015’ இறுதிப்போட்டிக்கு இருப்பது இன்னும் சில மணி நேரங்களே. இந்நிலையில் இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகள் எதிலும் தோல்வியைத் தழுவாமல், 40 வருட உலகக் கிண்ணக் கிரிக்கட் வரலாற்றில் நியுசிலாந்து முதன் முறையாக இறுதிப் போட்டியில் நுழைந்திருக்கின்றது.
1975, 1979, 1992, 1999, 2007, 2011 ஆகிய உலகக் கிண்ணப்போட்டிகளில் அரை இறுதிவரை வந்து பரிதாபகமாக தோல்வியைத் தழுவி வெளியேறும் அணியாகவே இதுவரை நியுசிலாந்து அணி காணப்பட்டது.
ஆனால் அந்த சரித்திரம் இம்முறை மிகப் போராட்டத்தின் பின்னர் முறியடிக்கப்பட்டிருக்கிறது. ஆம். தென்னாபிரிக்கா அணியுடனான அரை இறுதிப்போட்டியில் இரு அணிகளும் இறுதிவரை போராடின. நியுசிலாந்தும் தனது சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவக்கூடாது என்றே இறுதிவரை நிதானமாக விளையாடி வந்தது.
1992 பாகிஸ்தான் அணியுடனான அரையிறுதித் தோல்வி இன்றும் நியுசிலாந்து மக்களின் இதயங்களில் இருந்து அகழமுடியாமல் இருக்கின்றது.
கென் ரதபோர்ட், அண்ரூ ஜோன்ஸ், கிரேட் பெட்ச், மார்டின்குரோ, கிறிஸ் ஹரிஸ், ஜோன்ரைட், மொரிசன், லார்ஸன் என அசைக்க முடியாத சிறந்த அணியாக அன்று களமிறங்கி இருந்தபோதும்கூட, நியுசிலாந்தை பாகிஸ்தான் நிதானமாக ஆடி, தோற்கடித்திருந்தது.
1992 இற்குப் பின்னர் இம்முறை இடம்பெற்றுவரும் உலகக் கிண்ணப்போட்டியில் மிகச் சிறந்த துடுப்பாட்ட வரிசை நியுசிலாந்து கொண்டிருப்பதுடன், அபாரமான களத்தடுப்பும், மோசமற்ற பந்துவீச்சும் நியுசிலாந்துக்கு இருக்கின்றது.
உலகில் எந்த நாட்டின் அரசியல், மதப் பிரச்சினைக்கும் மூக்கை நுழைக்காமல், தான் உண்டு தன்பாடு என்று உலகின் எங்கோ ஓர் மூலையில் ஒதுங்கியிருக்கும் நாடுபோல் அமைதியாக இருந்துவருகிறது நியுசிலாந்து.
ஒரு இலட்சம் பார்வையாளர்களைக் கொண்டமைந்த புகழ்பெற்ற மெல்போன் மைதானத்தில் நாளை (ஞாயிறு) பகல் இரவுப் போட்டியாக 2015 உலகக் கிண்ணத்தின் இறுதிப்போட்டி இடம்பெற இருக்கின்றது.
ஓர் பலிக்கடா தங்களது மைதானத்துக்குள் நுழைந்திருப்பது போல் அவுஸ்திரேலியா வீரர்களும் அவுஸ்திரேலிய மீடியாக்களும் நியுசிலாந்தை விமர்சித்து வருகின்றனர்.
அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்களின் மோசமான வாய்ச் சண்டைகளையும், வாய்ச் சைகைகளையும் நியுசிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் பொறுமையாக எதிர்நோக்கி துடுப்பால் மாத்திரம் அவுஸ்திரேலியாவுக்கு பதில்கொடுக்க வேண்டும்.
ஒரு இலட்சம் பார்வையாளர்களுள் அதிகமானவர்கள் இந்திய இரசிகர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா இறுதிப்போட்டிக்குள் நுழையும் என்ற எதிர்பார்ப்பில் இந்திய இரசிகர்கள் இறுதிப்போட்டிக்கான நுழைவுச்சீட்டுக்களை ஏற்கனவே கொள்வனவு செய்துவிட்டனர். எப்படி இருந்த போதிலும், அவுஸ்திரேலிய அணிக்கான ஆதரவுகளே மைதானத்தில் ஓங்கி ஒழிக்கும்.
1992 உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானுடன் சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவி விடைபெறும் நியுசிலாந்து வீரர்கள்
விளையாட்டு என்றாலும், அரசியல் என்றாலும் எவருடனும் முட்டி மோதாமல் தன்பாட்டிற்கு வாழ்ந்துவரும் நியுசிலாந்து மக்களுக்கு நியுசிலாந்தின் உலகக் கிண்ண வெற்றி(பெற்றால்) நெஞ்சில் நீங்காத ஒன்றாக அமையும்.
தற்போதய நியுசிலாந்து அணி, சுமார் ஒருவருடத்திற்குள் இவ்வளவு ஸ்திரமான நிலைக்கு மாறியிருப்பது அவ்வணிக்குரிய வீரர்களின் ஊக்கத்தையும் திறமையையும் வெளிக்காட்டி வருகிறது.
ரக்பி விளையாட்டுக்குப் பெயர்போன நியுசிலாந்து தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக கிரிக்கட்டிற்கு மாறிவருகிறது. இதன்காரணமாக ரக்பி விளையாட்டு மைதானங்கள் பல கிரிக்கட் மைதானங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன.
கடந்த 2011 உலகக் கிண்ண இறுதிப்போட்டியில், உலகக் கிண்ணத்தை நடாத்திய அயல் நாடுகளான இந்தியாவும் இலங்கையும் மோதிக்கொண்டதுபோல், 2015 உலககக் கிண்ணத்தை நடாத்தும் அயல்நாடுகளான அவுஸ்திரேலியா-நியுசிலாந்து மோதிக்கொள்கின்றன.
1975 இல் இருந்து 2015 வரை நியுசிலாந்து மக்கள் உலகக் கிண்ணக் கனவில் காத்திருக்கின்றனர். அவுஸ்திரேலியாவின் வாய்ச்சவால்களையும் ஊடக விமர்சனங்களையும் பொருந்திக்கொண்டு பொறுமையாக நாணயச்சுழற்சிக்கு காத்திருக்கிறது நியுசிலாந்து. நிச்சயமாக நியுசிலாந்து வெல்லவேண்டும் உலகக் கிண்ணத்தை!
Leave a comment