ஜனநாயகக் கட்சியின் முதலாவது காரியாலயம் செங்கலடி பிரதேசத்தில் திறக்கப்பட்டது

democratic partyபுவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்

செங்கலடி: முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜெனரல் சரத் பொன்சேகா அவர்கள், ‘ஃபீல்ட் மார்ஷல்’ எனத் தரமுயர்த்தப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நாளான 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்புத் தேர்தல் தொகுதியில் ஜனநாயகக் கட்சிக்கான முதலாவது காரியாலயம், செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வேப்பவெட்டுவான், காரைக்காடு கிராமத்தில் எளிமையான முறையில் திறந்து வைக்கப்பட்டது.

ஜனநாயகக் கட்சியின் மட்டக்களப்புத் தொகுதி அமைப்பாளர் ஜனாப். எம்.எஸ்.எம். ஷாபி ஜே.பி இக்காரியாலயத்தினை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து கருத்து வெளியிடுகையில், கடந்த கால பயங்கரவாத நடவடிக்கைளால் மிகவும் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் இக்கிராமத்தில் ‘ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தொழிற்பயிற்சி நிலையம்’ எனும் பெயரில் பல்துறைத் தொழிற் பயிற்சி நிலையமொன்றை விரைவில் நிறுவ உள்ளதாகத் தெரிவித்தார்.

‘நாட்டில் பயங்கரவாதம் நிலவிய காலப்பகுதியில் பல்வேறு காரணங்களாலும் தமது பாடசாலைக் கல்வியைச் சீராக மேற்கொள்ள முடியாமல் இடைநடுவில் கைவிட்டு கூலி வேலைகளில் ஈடுபட்டு வருகின்ற திறமைமிக்க இளைஞர் யுவதிகள் நூற்றுக்கணக்கானோர் இப்பிரதேசத்தில் காணப்படுகின்றனர்.’

‘இவர்களுக்கு தச்சுத் தொழில், கட்டுமானத்துறை, தையல் தொழில், வெல்டிங் போன்ற பல்வேறு துறைகளிலும் பயிற்சி அளிக்கப்பட்டால் அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் வெளிநாட்டுத் தொழிற்சந்தையில் மிகவும் கிராக்கி உடையதாகக் காணப்படுகின்றன.’

‘இத்தகைய பல்துறைப் பயிற்சி நிலையம் ஒன்றை அமைப்பதற்கு போதியளவு இடவசதியும், மூலதன முதலீட்டு வசதிகளும் எம்மிடமுள்ளதால் இத்திட்டத்திற்கான அங்கீகாரத்தை மிக விரைவில் பெற்று இப்பகுதி இளைஞர் யுவதிகளின் வாழ்வில் சுபீட்சத்தையும், அவர்களை எதிர்பார்த்துள்ள பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் கனவுகளையும் எமது கட்சியால் நிறைவேற்ற முடியும்’ என்றும் அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.

democratic party

Published by

Leave a comment