சர்வதேச பிராந்திய மேலாதிக்க சக்திகளின் சதுரங்க ஆட்டத்தில் பகடைக் காய் ஆகிவிட்ட இலங்கை இனப்பிரச்சினை!

inamullah– மஸிஹுதீன் இனாமுல்லாஹ்

கொழும்பு: இலங்கைத் தமிழரின் சுய நிர்ணயப் போராட்டம் பற்றியும், போராட்ட வடிவங்கள் பற்றியும் பல கோணங்களில் பேசப்படுகின்றது, அவற்றை பல்வேறு பரிமாணங்களிலும் மீள் வாசிப்பு செய்வதன் மூலமே தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி இந்த நாட்டில்ஏனைய சமூகங்களுக்கும் நிரந்தர சமாதானமும் சுபீட்சமும் கிடைக்கப்பெறும் என்பது வே உண்மையாகும்.

சுதந்திரத்திற்கு முன்னரும், சுதந்திரத்திற்குப் பின்னரும் எவ்வாறு தென்னிலங்கை பேரின சிங்களத் தலைமைகள் சிறுபான்மை இனங்கள் மீது பாகுபாடு காட்டி அவர்களது மேலாண்மையை அடுத்த சமூகங்கள் மீது திணிக்க முனைந்து பாரிய வரலாற்றுத் தவறுகளை இழைத்தார்களோ அதே போன்றே தமிழினத் தலைமைகளும், ஆயுதக் குழுக்களும் பாரிய வரலாற்றுத் தவறுகளை இழைத்துள்ளார்கள்.

உதாரணத்திற்காக பண்டா செல்வா ஒப்பந்தம் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம், இந்திய இலங்கை ஒப்பந்தம், சந்திரிக்கா அம்மையார் முனவைத்த தீர்வுத் திட்டம், ரணில் விக்ரமசின்ஹா முன்வைத்த மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் போன்றவற்றை மாறி மாறி ஆட்சிக்கு வந்த தென்னிலங்கை பேரினக் கட்சிகள் நிர்கரித்தது போன்று இந்திய இலங்கை உடன்பாட்டை விடுதலைப் புலிகள் நிராகரித்தமை பாரிய வரலாற்றுத் தவறாகும்.

தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகளை உள்வாங்காத அவர்கள் எதிர்பார்க்கின்ற பூரண சுயாட்சியை உறுதி செய்யாத இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நிராகரித்தமையை நியாயப் படுத்த முடியுமான வாதப் பிரதிவாதங்களுக்கு அப்பால் அதன் பின்னரான கால் நூற்றாண்டு காலமும் தமிழ் மக்களை எங்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது என்பதில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே இருக்கின்றன.

உடன்படிக்கையை நிராகரித்தல் அல்லது மாகாண சபை அதிகாரப் பரவலாக்கல் தீர்வை நிராகரித்தல் என்பதற்கு அப்பால் இந்தியாவை தமது எதிரியாக பார்த்தமை, இந்தியப்படைகளுக்கு எதிராக போராடியமை, ராஜீவ் காந்தியின் படுகொலையுடன் தொடர்பு பட்டமை மாத்திரமன்றி இந்திய நலன்களுக்கு எதிரான சர்வதேச மேலாதிக்க சக்திகளின் தயவை நாடியமை என பல்வேறு அரசியல் இராஜ தந்திர வரலாற்றுத் தவறுகளை தமிழ் தலைமைகள் செய்துள்ளன.

தமது உரிமைக்குரலை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்வதும் சர்வதேச சக்திகளுடன் ஒத்துழைப்பதுவும் பிழையென எடுத்த எடுப்பில் கூறிவிட முடியாது, ஆனால் தமிழ் மக்களுக்கு இருந்த மிகப்பெரிய பின்புலத்தை விலையாகக் கொடுத்து மேலைத்தேய அடிவருடிகளின் ஆலோசனைகளின் பெயரில் தமிழ் மக்களின் பிரச்சினையை சர்வதேச மற்றும் பிராந்திய மேலாதிக்க சக்திகளின் போட்ட போட்டியிற்கு இரையாக்கியமை அனுகூலங்களை விடவும் பிரதிகூலங்களையே கொண்டு வந்தன, இந்த விடயம் மிகவும் நுணுக்கமாக அராயப்படல் வேண்டும்.

சரவதேச பிராந்திய மேலாதிக்க சக்திகளின் நலன்களுக்கான பூகோல அரசியல் இராஜ தந்திர சதுரங்க விளையாட்டில் தமிழினப் போராட்டத்தை பகடைக்காயாக மாற்றிவிட்டவர்கள் பாரிய வரலாற்றுத் தவறினை இழைத்தமையே தமிலினப் பேரழிவுக்கு பிரதானமான காரணமாகும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

மூத்த முதிர்ந்த தமிழ்த் தலைமைகளை படுகொலை செய்தமை, போட்டிக் குழுக்களாக பிளவுண்டமை என்பவற்றிற்கு அப்பால் இலங்கை முஸ்லிம்களின் தனித்துவத்தை அங்கீகரிக்க மறுத்து அவர்களை இனச் சுத்திகரிப்பு செய்ய முயன்றமை, வட புலத்திலிருந்து வெறுங்கையுடன் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் விரட்டியடித்தமை, கிழக்கெங்கும் முஸ்லிம் கிராமங்கள் மீது ஆயுத காடைத்தனங்களை கட்டவிழ்த்தமை தமிழ் போராளிகள் இழைத்த மாபெரும் வரலாற்றுத் தவறாகும்.

தென்னிலங்கை இராணுவம் விடுதலைபுலிகளுடன் போராடியதனை விடவும் கடிமான ஒரு போராட்டத்தை சர்வதேச அரங்கில் மேற்கொண்டமை உலகறிந்த விடயமாகும், பிரந்திய வல்லரசுகளான இந்திய, பாகிஸ்தான் சர்வதேச வல்லரசுகளான அமெரிக்க, ரஷ்யா, சீனா ஐரோப்பிய சமூகங்கள் என்பவற்றுடன் இலங்கை அரசு மேற்கொண்ட இராஜ தந்திர மற்றும் அரசியல் நகர்வுகளின் முன்னால் புலம் பெயர் இராஜதந்திரம் கண்ட பின்னடைவே வெள்ளிமுல்லை வாய்க்காலில் தமிழின அவலத்தினை அலங்கோலமாக அரங்கேற்றியது.

தமிழின போராட்டம் முழுதாக முற்றுப் பெற்றுவிட்டது என்று நாம் ஒருபொழுதும் கூறவில்லை, மாறாக கடந்த காலங்களில் நாம் விட்ட தவறுகளில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்களை எடுத்தே அரசியல் தீர்வொன்றிற்கான அடுத்த கட்ட அரசியல் இராஜதந்திர நகர்வுகளை தமிழ்த் தலைமைகள்மேற்கொள்ள வேண்டும்.

முதலாவதாக இலங்கை முஸ்லிம்களின் தனித்துவத்தை அவர்கள் அங்கீகரித்து அரசியல் தீர்வில் அவர்கள் இன்றியமையாத தரப்பினர் என்பதனை உலகறிய அவர்கள் ஏற்றுக் கொள்ளல் வேண்டும், வடபுல முஸ்லிம்களின் மீள்வரவை அவர்கள் ஊர்ஜிதம் செய்து பிராயச்சித்தம் செய்தல் வேண்டும், ஆக்கிரமிக்கப்பட்ட முஸ்லிம்களது நிலங்களை அவர்களிடம் கையளிப்பதனை உறுதி செய்வதோடு, வடகிழக்கில் முஸ்லிம்களது சனத்தொகைக்கு உரித்துடைய நிலங்களை அடியாளம் காண வேண்டும், எதிர்கால அபிவிருத்திப் பணிகளில் முஸ்லிம்களை அரவணைத்துச் செல்ல வேண்டும்.

அடுத்தகட்டமாக அண்டை நாடான இந்தியாவுடனான உறவுகளை புதுப்பித்துக் கொள்வதோடு சினிமாத்தனமான தமிழ் நாட்டு அரசியலுக்கு அப்பால் மத்திய அரசுடனான இராஜதந்திர அரசியல் நகர்வுகளில் ஒத்துழைப்புடன் செயற்படல் வேண்டும், இன்றேல் இன்னும்பல தசாப்தங்களுக்கு இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுகளை சர்வதேச பிராந்திய மேலாதிக்க சக்திகளின் நலன்காக்கும் பலிக்கடாவாகவே முன் கொண்டு செல்ல முடியும் என்பதில் சந்தேகமில்லை.

முஸ்லிம் தனித்துவ அரசியலும் முஸ்லிம் சமூகத்தை இன்று முச்சந்தியில் கொண்டு வந்து நிறுத்தியிருப்பதன் பின்புலன்களும் பல்வேறு பரிமாணங்களிலும் ஆராயப்படுதல் அவசியமாகும்.

Published by

Leave a comment