வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பாக முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனுக்கு மகஜர்

viknesvaranஹாசிப் யாஸீன்

யாழ்ப்பாணம்: வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது ‘இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை’ என்பதை ஏற்று வட மாகாண சபையில் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றுமாறு கோரி வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனுக்கு மகஜரினை அகில இலங்கை இஸ்லாமிய இளைஞர் முன்னணி அனுப்பி வைத்துள்ளது. 

இம்மஜரினை முன்னணியின் தலைவர் றியாத் ஏ. மஜீத், செயலாளர் இஸட். அப்துர் றகுமான் ஒப்பமிட்டு அனுப்பி வைத்துள்ளனர். இம்மகஜர் வருமாறு,

சீ.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்,
வட மாகாண சபை,
யாழ்ப்பாணம்.
2015.03.17

ஐயா,

வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பாக

வடக்கு மக்கள் யுத்தம் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டார்கள் என்பது மறைக்க முடியாத உண்மையாகும். இதற்காக தாங்கள் முதலமைச்சராக வந்த பின்பு கூடுதலான அக்கறை செலுத்தி இம்மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒருவர் என்ற வகையில் தங்களைப் பாராட்டுகின்றோம்.

இதற்காக அண்மையில் தங்களது வட மாகாண சபையில் இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது ‘வடக்கு தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள்’ என ஒரு தீர்மானத்தை மிகத் தைரியாக உங்களது தலைமையில் நிறைவேற்றியுள்ளீர்கள். இதனை முஸ்லிம் மக்கள் எதிர்க்கவில்லை என்பதை தெரியப்படுத்துகின்றோம்.

வட மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு முதலமைச்சர் போன்றே முஸ்லிம் மக்களுக்கும் நீங்கள் முதலமைச்சர் என்பது யதார்த்தம். அதனால் வட முஸ்லிம் மக்களுக்காகவும் தாங்கள் சாணக்கியமான செயற்பாடுகளை மேற்கொள்வீர்கள் என எதிர்பார்க்கின்றோம். இதற்காக 1990ம் ஆண்டு வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது ஒரு பிழையான நடவடிக்கை என்பதையும் அது ஒரு ‘இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை என்பதையும் ஏற்று தாங்கள் ஒரு தீர்மானத்தினை வட மாகாண சபையில் நிறைவேற்றுவீர்களாயின் அனைத்து மக்களுக்குமான நீதியான, நேர்மையான மற்றும் பக்கச்சார்பற்ற முதலமைச்சர் எனும் நன்மதிப்பை முஸ்லிம்களிடமிருந்து மட்டுமன்றி உலகிலிருந்தும் பெற்றுக்கொள்வீர்கள் என்பது உண்மை.

தங்களது ஆட்சிக் காலத்திற்குள் யுத்தத்திற்கு முன்னர் தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் ஒன்றிணைந்து ஒரே சமூகமாக வாழ்ந்தது போன்று மீண்டும் வாழவேண்டிய சூழலை ஏற்படுத்தும் தூரநோக்கமான செயற்பாடுகளை மேற்கொள்வீர்கள் என எதிர்பார்ப்பதுடன் உங்களது வட மாகாண ஆட்சி எல்லா இனங்களுக்குமான நல்லாட்சியாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

மேற்படி கோரிக்கையினை தங்களின் மேலான கவனத்திற்கு வடக்கு முஸ்லிம்கள் சார்பாக எமது முன்னணி விடுக்கின்றது எனவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by

Leave a comment