கொழும்பு: இந்திய மீனவர்கள் தொடர்பாக ‘தந்தி’ தொலைக்காட்சிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய பேட்டியினை இந்தியாவைச் சேர்ந்த சில ஊடகங்கள் தவறாக சித்தரிப்பதாக மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
ஐ.தே.கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இக்கருத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லை தாண்டி மீன்பிடிப்பது சம்பந்தமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறிய கருத்தை ஒரு சில இந்திய ஊடகங்கள் தவறான கருத்தைப் பரப்பி வருகின்றன. இந்தியாவைச் சேர்ந்த ஒரு சில சுயநல அரசியல் கட்சிகளும் இதற்கு துணைபோகின்றன. பிரதமர் இந்திய மீனவர்கள் சம்பந்தமாக தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் என்ன சொல்லி இருக்கின்றார் என்பதை முதலில் கவனிக்க வேண்டும். ‘எல்லை தாண்டும் மீனவர்களை சுட முடியும்’ என்ற வார்த்தைப் பிரயோகத்தையே அவர் பாவித்துள்ளார். சுட முடியும் என்பதற்கும், சுடவும் என்பதற்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும். சுடு என்பது கட்டளை, சுட முடியும் என்பது இரண்டு நாட்டிற்கும் போதுவான நியதி.
எல்லை மீறுபவர்களை இரு நாட்டு இராணுவத்தினருக்கும் சுட முடியும். இதனையே பிரதமர் சுட்டிக் காட்டினார். இந்திய இராணுவத்தினருக்கும் எல்லை மீறும் இலங்கை மீனவர்களை சுட முடியும், அதேபோன்று இலங்கை இராணுவத்தினருக்கும் எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை சுட முடியும். இதனையே அவர் குறிப்பிட்டார். இந்திய டோலர்கள் இலங்கைக் கடலில் வந்து மீன் பிடிப்பதனால் இலங்கையர்களின் மீன்பிடித் தொழில் பாதிப்படைகின்றது. எல்லை மீற வேண்டாம், சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிங்கள் என்று இரு நாட்டு மீனவர்களையும் பார்த்தே இக்கருத்தை தெரிவித்தார். சர்வதேச சட்ட நியதியையே அவர் கூறினார்.
இதனை அறியாத சில ஊடகங்கள் பிரதமரின் கருத்தை திரிவுபடுத்தியுள்ளன. அவ்வாறு திரிவுபடுத்துவது இந்திய ஊடகங்களுக்கே களங்கத்தை ஏற்படுத்தும். பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் கருத்தில் ஏதேனும் தவறுகள் இருந்திருப்பின் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தந்தபோது அது சம்பந்தமாக வினவி இருப்பாரே? வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இது சம்பந்தமாக தனது கவலையை தெரிவிரித்துப்பாரே. எமது பிரதமர் எதைக் கூறினார் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் இராஜதந்திரத்தை எவராலும் குறைத்து மதிப்பிட முடியாது. இதனை உலகத் தலைவர்கள் நன்கு அறிந்துள்ளனர். கண்மூடித்தனமான வார்த்தைகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரயோகிக்க மாட்டார் என்பதும் அவர்களுக்குத் தெரியும். வங்குரோத்து நிலை அடைந்துள்ள இந்தியாவைச் சேர்ந்த ஒரு சில கட்சிகள் தமது சுயநல அரசியலுக்காக மக்களையும் ஊடகங்களையும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றன. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையேயான நல்லுறவில் ஒரு விரிசலை ஏற்படுத்துவதே இவர்களின் நோக்கம் என்பது தெளிவான விடயம்.
குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதே இவர்களின் தொழிலாக இருந்து வருகின்றது. இவ்வாறான வங்குரோத்து நிலையைக் கொண்டுள்ள அரசியல் கட்சிகளுக்கு துனைபோக வேண்டாம் என நான் இந்திய ஊடகங்களிடமும் மக்களிடமும் மிகத் தாழ்மையாக வேண்டிக் கொள்கின்றேன். இந்திய இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வைக் காணுவோம் என்று இலங்கை, இந்திய தலைவர்கள் கூறிய கருத்துக்கு வலு சேர்ப்போம்.
கடந்த காலங்களைப் போன்று இலங்கை – இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகங்கள் மேற்கொண்டு இரு நாடுகளுக்குமிடையேயான உரவில் பாதிப்பை ஏற்படுத்தாது. சகோதர மனப்பான்மையுடன் செயற்படுவோம். கடந்தகால கசப்பான அனுபவங்கள் இலங்கை மீனவர்களுக்கும் இந்திய மீனவர்களுக்கு மீண்டும் ஏற்படக் கூடாது என்பதனையே பிரதமர் சுட்டிக்காட்டினார்.
மேலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியை ஒருமுறை கவனமாக பார்க்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஏ.எல்.எம். தாஹிர்
ஊடகப் பிரிவு
Published by

Leave a comment