சிட்னி: அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பரபரப்பாக நடைபெற்ற உலக கோப்பை காலிறுதி போட்டியில் இலங்கை அணி தென் ஆபிரிக்காவிடம் தோல்வியடைந்தது. சங்கக்கார, மஹேல ஜயவர்தன இருவரும் உலக கோப்பை போட்டியுடன் சர்வதேச ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் போட்டி குறித்து இலங்கை அணியின் தலைவர் மெத்யுஸ் கூறுகையில்,
நாங்கள் 250 ஓட்டங்கள் எடுத்திருந்தால், அது எங்கள் பந்து வீச்சாளர்கள் அணியை வெற்றி பெற வைக்க ஒரு வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்திருக்கும். ஆனால் நாங்கள் முதல் பந்திலிருந்தே ஆட்டத்தை தக்க வைக்க தவறி விட்டோம். தென் ஆபிரிக்க அணி மிகவும் சிறப்பாக விளையாடியது.
உலக கோப்பை போட்டியில் எங்கள் மோசமான ஆட்டம் இது. குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன இருவருக்கும் என்றும் நினைவில் நிற்கும் போட்டியாக இப்போட்டி அமையாதது வருத்தமளிக்கிறது. இருவரும் 16-17 வருடங்கள் அணிக்காக விளையாடியவர்கள். அவர்களை இறுதி போட்டி வரை விளையாட வைத்திருப்பதே அவர்களின் பங்களிப்பிற்கு நன்றி செலுத்தும் விதமாக இருந்திருக்கும். ஆனால் எதிர்பாராத விதமாக அது எங்களால் முடியவில்லை என்றார்.
தென் ஆபிரிக்க அணித்தலைவர் டி வில்லியர்ஸ் கூறுகையில்,
பேசுவதற்கு என்னிடம் அதிகமாக ஒன்றும் இல்லை. இப்போட்டிக்கு மிகவும் தயாரிப்போடு நாங்கள் இருந்தோம். எங்கள் வீரர்கள் சிறப்பாக ஆடினர். குறிப்பாக எங்கள் பந்துவீச்சார்கள் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளி ப்படுத்தினர். நான் மிகவும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறேன். எங்கள் அணி இன்னும் பல வெற்றிகளைக் குவிக்கும் என்றார்.
Published by



Leave a comment