சிட்னி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் முதலாவது காலிறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி அபார வெற்றிபெற்றுள்ளது. சிட்னியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தது.
ஆனால், 37.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த இலங்கை அணி 133 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக சங்ககாரா 45 ஓட்டங்களும் திரிமன்னே 41 ஓட்டங்களும் சேர்த்தனர். மேத்யூஸ் 19 ஓட்டங்களை எடுத்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கங்களில் மட்டுமே ஓட்டங்களை எடுத்தனர்.
இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் பந்து வீச்சாளர் துமினி 3 விக்கெட்களையும் இம்ரான் தஹிர் நான்கு விக்கெட்களையும் வீழ்த்தினர்.
134 என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 18 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றிபெற்றது. அந்த அணியின் டி காக் 78 ஓட்டங்களை எடுத்தார். தென்னாப்பிரிக்க அணியில் வீழ்ந்த ஒரே விக்கெட்டான அம்லாவை மலிங்கா வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளது.
அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியையோ, நியூசிலாந்து அணியையோ தென்னாப்பிரிக்கா எதிர்கொள்ளும்.
4 விக்கெட்களை வீழ்த்திய தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தஹீர் ஆட்ட நாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.
Published by


Leave a comment