டமஸ்கஸ்: அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்றை லடாகியா நகருக்கு அருகே சுட்டு வீழ்த்தியிருப்பதாக சிரிய ராணுவம் தெரிவித்துள்ளது. சிரியாவின் வட மேற்குப் பகுதியில் அதிபர் பஷர் அல் – அஸாத் வலுவாக உள்ள பிராந்தியத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அந்த ஆளில்லா விமானத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் ஆனால், அது சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பது தெரியவில்லையென அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது உறுதிப்படுத்தப்பட்டால், ஐஎஸ் இயக்கத்திற்கு எதிராக கூட்டுப்படையினர் தாக்குதலைத் துவங்கிய பிறகு சிரியப் படைகள் அமெரிக்க விமானத்தைத் தாக்கியது இதுவே முதல் முறையாக இருக்கும். ஐஎஸ் இயக்கம் மீதான தாக்குதலில் சிரியா பங்கேற்கவில்லை.சிரியாவின் அரச செய்தி நிறுவனமான சனா நியூஸ் ஏஜென்சி, ஆளில்லா விமானக் கண்காணிப்பை, ‘விரோத நடவடிக்கை’ என்று குறிப்பிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து ஆராய்ந்து வருவதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது. கடந்த வருடம், கூட்டுப்படையினரோடு இணைந்து தாக்குதலில் ஈடுபட்டுவந்த ஜோடர்ன் விமானம் ஒன்று வடக்கு சிரியாவில் நொறுங்கி விழுந்தது. அந்த விமானத்தின் விமானி, ஐஎஸ் இயக்கத்தினரால் பிடிக்கப்பட்டு உயிருடன் கொளுத்தப்பட்டார்.
இதற்கிடையில் திங்கட்கிழமையன்று ஐட்லிப் மாகாணத்தில் நடந்த தாக்குதலில் அரச படைகள் குளோரினைப் பயன்படுத்தியதாக சிரியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சர்மின் என்ற பகுதியின் மீது நச்சு ரசாயனம் நிரம்பிய பேரல் குண்டுகள் விமானம் மூலம் வீசப்பட்டதில் மூன்று குழந்தைகள் உள்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். ஆனால், இது வெறும் பொய்ப் பிரச்சாரம் என்று கூறி சிரிய ராணுவம் இதனை மறுத்துள்ளது.
தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய சாதாரண ரசாயனமான குளோரினை ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடாது என கெமிக்கல் வெப்பன்ஸ் கன்வென்ஷன் தடைசெய்துள்ளது.2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டமஸ்கஸ் நகரின் புறநகர்ப் பகுதிகளில் நரம்புகளைப் பாதிக்கக்கூடிய சரின் என்ற ரசாயனம் பயன்படுத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, ரசாயன ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் சிரியா கையெழுத்திட்டது.
இந்தத் தாக்குதலை அரச படையினர்தான் நடத்தியிருக்க வேண்டுமென மேலை நாடுகள் கூறுகின்றன. ஆனால், போராளிகள்தான் தாக்குதல் நடத்தினார்கள் என சிரியா கூறிவருகிறது.குளோரின் போன்ற நச்சு ரசாயனங்களை சிரியாவில் பயன்படுத்துவதை இம்மாதத் துவக்கத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கண்டித்துள்ளது. இது தொடர்ந்தால், ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கூறியுள்ளது.
Published by
![130109135836_drone_304x171__nocredit[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/02/130109135836_drone_304x171__nocredit1.jpg?w=150&h=84)
Leave a comment