லாஹூர்: ஸ்பொட்-பிக்சிங் சூதாட்ட குற்றச்சாட்டில் போட்டித் தடைக்கு உள்ளான பாகிஸ்தான் இளம் வேகப்பந்து வீச்சாளர் முஹமது அமீர் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்பியுள்ளார். நான்கு ஆண்டு போட்டித் தடைக்கு முகம் கொடுத்த அமீர் செப்டெம்பர் மாதத்திலேயே சர்வதேச போட்டிகளுக்கு திரும்ப அனுமதிக்கப் பட்டுள்ளார்.
எனினும் 22 வயது வீரர் கடந்த வெள்ளிக்கிழமை ராவல்பிண்டியில் நடந்த இரண்டாம் தர கழக போட்டியில் பங்கேற்று மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
“நான் இழந்த நான்கரை ஆண்டுகளை மீண்டும் கொண்டுவர முடியாது. ஆனால் எனது நல்ல நாட்கள் இன்னமும் இருப்பதாக நான் நம்புகிறேன்” என்று அமீர் நம்பிக்கை தெரிவித்தார். 2010 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் 18 வயதாக இருந்த அமீர் முன்கூட்டிய ஏற்பாட்டில் ‘நோபோல்’ களை வீசியதாக குற்றம்சாட்டப்பட்டார்.
அவர் சக வீரர்களான மொஹ மட் ஆசிப் மற்றும் சல்மான் பட் ஆகியோருடன் சேர்ந்து ஆறு மாதங்கள் சிறை அனுபவித்தார். இந்த சர்ச்சையில் சிக்கிய ஆசிப் மற்றும் பட்டுக்கும் போட்டித் தடை விதிக்கப்பட்டது.
அமீருக்கு ஐந்து ஆண்டு போட்டித் தடை விதிக்கப்பட்டபோதும் அவர் கிரிக்கெட் ஊழல் தடுப்பு குழுவுக்கு வழங்கிய ஒத்துழைப்பால் அவரது தடைக்காலம் குறைக்கப்பட்டது. “நடந்தது நடந்ததுதான் வருந்துவதற்கு வழியில்லை” என்று அமீர் குறிப்பிட்டார்.
போட்டித் தடைக்கு முன்னர் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அமீர் 41 விக்கெட்டுகளையும் 15 ஒருநாள் போட்டிகளில் 25 விக்கெட்டு களையும் வீழ்த்தி இருந்தார். “எனது பந்துவீச்சு திறனில் உச்சத்தில் இருந்தபோதே ஐ.சி.சி. எனக்கு தடை விதித்தது. மீண்டும் திரும்பியதும் இருந்த இடத்தை பெற முயற்சிப்பேன்” என்று அமீர் மேற்படி முதல்தர போட்டிக்குப் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
Published by
![Mohammad Amir[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/03/mohammad-amir1.jpg?w=113&h=150)

Leave a comment