மஹிந்தவின் பிடியிலிருந்து இந்த நாட்டை முஸ்லிம்கள் மீட்டார்களா….?

Marzookகாத்தான்குடி: கடந்த மகிந்த ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் முஸ்லிம்கள் இந்த நாட்டில் சொல்லொண்ணா துயரத்தில் சிக்கியிருந்தார்கள். முஸ்லிம்கள் வர்தக பொருட்களை இறக்குமதி செய்கின்ற போது சுங்கவரி அதிகமாக விதிக்கப்பட்டு பழிவாங்கப்பட்டார்கள். இதனால் முஸ்லிம்கள் சிங்களவர்களின் பெயரிலேயே பொருட்களை இறக்குமதி செய்யவேண்டிய நிலமைக்கு தள்ளப்படார்கள். முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதற்கு எதிராக பல துன்பங்கள் பொதுபல சேனாவினரால் ஏற்படுத்தப்பட்டது.

இந்த நாட்டிலே யாரும் தான் விரும்புகின்ற ஆடையை அணிய உரிமை இருக்கின்றது. ஆடை எதுவும் அணியாமல் திரிவதுதான் இந்த நாட்டிலே குற்றம். இவ்வாறு இருக்க முஸ்லிம்கள் விரும்பும் ஆடை அணிவதற்கு பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டன. முஸ்லிம் கோடிஸ்வரர்கள் வெள்ளை வேனில் கடத்தப்பட்டு தலா 2 கோடி ரூபா கப்பம் பெறப்பட்டது. ஹலாலான உணவு சாப்பிடுதல், ஹலால் சின்னம் பொறிப்பது என்பதில் பாரிய பிரச்சினைகள் உருவாக்கப்பட்டன. முஸ்லிம்களுக்கு சொந்தமான முக்கிய சொத்துக்கள், ஹோட்டல்கள் அரச சகோதரர்களால் அடிமட்ட விலைக்கு அபகரிக்கப்பட்டன. புறக்கோட்யானது இலங்கை வர்த்தகத்தின் கேந்திர மையமாகும்.

இந்த புறக்கோட்டை வர்த்தகமானது சிறுபான்மையினரின் கைகளிலேயே பெரும்பாலும் இருந்து வருகின்றது. இதனை உடைப்பதற்கு மகிந்த சகோதரர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியும் பெற்றிருந்தனர்.
பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டன, பள்ளிவாயல்கள் மூடப்பட்டன, பள்ளிவாயல்கள் முன் பன்றியின் தலை, பன்றியின் கழிவுகள் வீசப்பட்டன. பன்றியில் அல்லாஹ்வின் திருநாமம் எழுதப்பட்டு ஊர்வலம் நடாத்தப்பட்டது. இறுதியில் உச்சகட்டமாக அழுத்கம, தர்ஹா நகர் கலவரங்கள் உருவாக்கப்பட்டு முஸ்லிம்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன. சொத்துக்கள் சூறையாடப்பட்டன. சொத்துக்கள் எரிக்கப்பட்டன. பாணந்துறையிலும் நோலிமிட் நிறுவனம் எரிக்கப்பட்டது.

இந்த பிரச்சினைகளை முஸ்லிம் அமைச்சர்கள் அமைச்சரவையில் பேச முற்பட்டார்கள் என்றால் ‘பொத்து வாயை’ என்று சொல்லி அவர்களின் குரலும் சர்வாதிகாரமான முறையில் அடக்கப்படன. முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களிடம் நிலைமையை சொன்னாலும் அமைச்சர்கள் எச்சரிக்கப்பட்டார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் இரகசியமான முறையில் அறிக்கைகளை சமர்பித்தாலும் முஸ்லிம் அமைச்சர்கள் நையப்புடைக்கப்பட்டார்கள்.

இவ்வாறு முஸ்லிம்களின் அடிமட்டத்திலிருந்து அமைச்சர்கள் வரைக்கும் கடந்த மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் கடும் கஷ்டத்திற்குள்ளாக்கப்பட்டனர். இவற்றுக்கெல்லாம் முடிவு கட்ட முஸ்லிம்கள் தர்ணம் பார்த்திருந்தார்கள். இதற்கு அருமையான வாய்ப்பு கடந்த ஜனவரி மாதம் 08 ஆம் திகதி கிடைக்கப்பெற்றது. ஆம். ஜனாதிபதி தேர்தல்தான் அது.

இந்த தேர்தலிலே முஸ்லிம்கள் 98% ஒற்றுமைப்பட்டு பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனாவுக்கு வாக்களித்திருந்தார்கள். பெரும்பாலும் முஸ்லிம்கள் எல்லாம் மைத்திரியை ஆதரிக்க தொடங்கிய பின்னர்தான் முஸ்லிம் தலமைகள் மைத்திரியை ஆதரிப்பது சம்பந்தமாக சிந்திக்க தொடங்கினர். முஸ்லிம் கட்சி ரீதியாக பார்க்கப் போனால் முதலாவது மைத்திரியை ஆதரிப்பது என தீர்மானித்தவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீனாகும். இவர் எடுத்த முடிவை முஸ்லிம் சமூகம் ஒரு துணிச்சலான முடிவாகவே பார்த்தது ஏன் என்றால் இவ்வாறான ஒரு தீர்மானத்தை ரிசாத் பதியுதீன் எடுப்பார் என முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கவில்லை. ஏன் என்றால் பின்னர் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் அமைச்சர் றஊப் ஹக்கீம் மைத்திரியை ஆதரிப்பது என முடிவெடுத்திருந்தார். இவ்வாறு ஒரு முடிவை றஊப் ஹக்கீம் எடுப்பார் என 50% முஸ்லிம் சமூகத்திடம் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

ஏனெனில் கடந்த காலங்களில் மகிந்த ராஜக்ஷ அரசாங்கத்தோடு றஊப் ஹக்கீம் நடந்து கொண்ட விதத்தை அவதானித்தால் அவர் எந்த முடிவையும் எடுக்கக்கூடும். அதாவது மகிந்தவை ஆதரிப்பது அல்லது மைத்திரியை ஆதரிப்பது என்ற எந்த முடிவையும் எடுக்கலாமென முஸ்லிம் சமூகம் எதிர்பார்த்திருந்தது. றஊப் ஹக்கீம் அரசாங்கத்திற்கு தொடர்ந்து அடிபணிந்து செல்வார் என எதிர்பார்க்க முடியாது என்பதையும் முஸ்லிம் சமூகம் புரிந்திருந்தது. ஆனார் ரிசாத் பதியுதீனின் நிலமை அவ்வாறு இல்லை. அவர் முழுக்க முழுக்க அரசாங்கத்தோடு இருந்து அனுபவித்து விட்டு வடக்கு அபிவிருத்தியிலே அரசாங்கத்தோடு தோளோடு தோள் நின்று பாடுபட்டுவிட்டு இறுதி நேரத்திலே அரசாங்கத்திலிருந்து பிரிவார் என முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கவில்லை. எனவேதான் ரிசாத் பதியுதீனின் மைத்திரியை ஆதரிப்பது என்ற அதிரடி முடிவானது முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ரிசாத் பதியுதீனை ஒரு ஹீரோவாக பார்க்க வைத்தது.

இவரோடு சேர்ந்து பிரதி அமைச்சர் அமீர் அலியும் மைத்திரியை ஆதரிப்பது என தீர்மானித்தார். இவருடைய அரசியல் நிலமையோ சற்று வித்தியாசமாக இருந்தது. அவர் ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவை ஆதரிக்க வேண்டும் என்பதற்காகவே மகிந்தவினால் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினார் வழங்கப்பட்டது. ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்ற கையோடு பால் மணம் மாறாத கையோடு இவர் மைத்திரியை ஆதரிப்பது என தீர்மானித்திருந்தார். இது சிலரால் ஒரு துரோகமான நடவடிக்கையாக பார்க்கப்பட்டது. ஆனால் இவ்வாறான கோல்மால் வேலைகளை மகிந்தவும் தனது ஆட்சி காலத்தில் செய்திருந்தார். ‘ லாங்கா முஸ்லிம் கோங்கிரஸின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஹுஸைன் பைலாவை நியமிக்கப்பட்ட கையோடு அதாவது பால் மணம் மாறாத கையோடு அவரை மகிந்த ராஜபக்ஸ தனது பக்கம் இழுத்துக்கொண்டார். இது ஒரு மோசமான நடவடிக்கையாகும். இதனால் ‘ லாங்கா முஸ்லிம் கோங்கிரஸின் தேசிய தலைவர் றஊப் ஹக்கீம் எவ்வளவு வலியை அனுபவித்திருப்பார். அந்த வலியை மகிந்த ராஜபக்ஸவும் அனுபவிக்க வேண்டாமா?.

பொதுவாக அமீர் அலி செய்தது பிழை என்றாலும் மகிந்த ராஜபக்ஸவை பொறுத்தவரைக்கும் அமீர் அலி செய்தது சரி. மகிந்தவுக்கு அந்த வலியை அமீர் அலி உணர்த்தியிருக்கின்றார். ஜனாதிபதி தேர்தலில் மைத்திரயை ஆதரிப்பது என்ற அமீர் அலியின் முடிவானது உயிர் ஆபத்துமிக்க ஒரு துணிச்சலான முடிவாக பார்க்கப்பட்டது.
ஒருவாறு தேர்தல் முடிந்தது. தோற்கடிக்கப்பட முடியாத தலைவர் என்ற மாயையை உருவாக்கியிருந்த மகிந்த ராஜபக்ஸ தோற்கடிக்கப்பட்டார். அதிகார வெறி, பதவி மோகம், குடும்ப ஆட்சி, ஊழல் மோசடி, வீண்விரயம், என்பவற்றினால் மகிந்த ராஜபக்ஸ இந்த நாட்டையும் அழித்து தானும் அழிந்துபோனார்.

ஒரு மனிதன் தேர்தலிலே வெல்லுவதோ தோற்பதோ சாதாரண விடயம். ஆனால் மகிந்தவின் தோல்வியனாது உள்நாடுகளிலும், வெளிநாடுகளிலும் (உலகமெங்கும்) கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. மோசமாகவும் கேவலமாகவும் சாத்திரத்தை நம்பிய ஏமாளியாகவும் நக்கலும் நையாண்டி கொண்டதாவும் இவரின் தோல்வி சித்தரிக்கப்பட்டது. என்னுடைய அனுபவத்திலே தேர்தலிலே தோல்வி அடைந்தமைக்காக இவ்வளவு மோசமான விமர்சனத்தை சந்தித்தவர் மகிந்த ராஜபக்ஸவே.
ஜனாதிபதி தேர்தல் காலத்திலும் அதற்கு முன்னரும் ‘ லாங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் றஊப் ஹக்கீம் ’18 வது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு தாங்கள் ஆதரவு தெரிவித்த பாவத்திற்கு பரிகாரம் தேடுகின்றோம். அவ்வாறு ஆதரவு அளித்தது நாங்கள் செய்த பெரிய தவறு. இதனால்தான் மகிந்த மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் கிடைத்தது’. எனக் கருத்து தெரிவித்து வந்தார். ஆனால் ஜனாதிபதி தேர்தல் முடிவை பார்த்ததும் 18வது திருத்தத்திற்கு ஆதரவு அளித்தமைக்காக றஊப் ஹக்கீம் வருந்தவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அவ்வாறு ஆதரவு அளித்து 18 வது திருத்தம் அமுலுக்கு வந்தமையினால் இரண்டு நன்மைகள் நடைபெற்றுள்ளன.

1. மூன்றாவது முறையாகவும் போட்டியிட்டு தோல்வியடைந்து உலகளாவிய ரீதியில் இவ்வளவு கேவலமான விமர்சனத்திற்கு மகிந்த உள்ளாகினார்.

2. ஆறு வருடம் பதவிக்காலம் இருக்கத்தக்க மூன்றாவது தடவையாகவும் தேர்தல் கேட்கலாம் என்றபடியால்தான் நாலாவது வருடத்திலேயே தேர்தலை நடத்த முன்வந்தார். இரண்டு முறைதான் தேர்தல் கேட்கலாம் என்றிருந்தால் ஆறு வருடம் இந்நாட்டை ஆண்டு இந்நாட்டை இன்னும் மோசமாக அழித்திருப்பார். எனவே 18 வது திருத்தம் அமுலுக்கு வந்ததால்தான் இரண்டு வருடம் நாடு தப்பியது.

எனவே றஊப் ஹக்கீம் 18 வது திருத்தத்திற்கு ஆதரவு வழங்கியமைக்காக கவலைப்பட தேவையில்லை. அவர் நாட்டிற்கு நன்மையை செய்திருக்கின்றார். மகிந்தவை வழிநடத்திய சாத்திரகாரரும் ‘மகிந்தவிடம் இருந்து நாட்டை பாதுகாக்கவே நான்கு வருடம் முடிந்த கையோடு தேர்தலை நடாத்த நல்ல நாள் குறித்துக் கொடுத்தேன் இதனால் இரண்டு வருடம் நாடு தப்பியது’. என்று பின்னர் பத்திரிகைகளுக்கு சாத்திரகாரர் கூறியது இங்கு நினைவு கூறத்தக்கது.

மகிந்த ராஜபக்ஸவின் தோல்வியில் மற்றும்மொரு சிறப்பம்சம் என்னவென்றால் இவர் தோற்றதன் பின்பு இவருக்கு வாக்களித்தவர்களே இவரது தோல்வியால் சந்தோசப்பட்டதுதான். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தவிர்க்க முடியாத காரணத்தினால் அல்லது பைல்களுக்கு பயந்து இவரை விட்டு பிரியமுடியாது இருந்த பல அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மனதுக்குள்ளே இவரின் தோல்வியை விரும்பிக்கொண்டிருந்தார்கள். தூய்மையான மனதுடன் இவரின் தேர்தலிலே வேலை செய்யவில்லை ஜனாதிபதி தேர்தலின் பின்பு பாராளுமன்றம் கூடிய போது மைத்திரிக்கு வேலை செய்த பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தோசத்தோடு மகிந்தவுக்கு தேர்தல் வேலை செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆரத்தழுவியதை காணக்கூடியதாக இருந்தது. மகிந்தவுக்கு மேடை போட்டு பேசியவர்கள் கூட மகிந்தவின் தோல்வியால் சந்தோசமடைந்திருந்தார்கள். இது ‘வேண்டாப்பிள்ளையை பெற்று காண்டாமிருகம் என்று பெயர் வைத்தானாம்’ என்ற கதைபோல் இருக்கிறது.

முன்னாள் பிரதி அமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ்வும் மகிந்தவுக்கு முழு வீச்சிலே தேர்தல் வேலைகளை மேற்கொண்டிருந்தபோதிலும் தேர்தலின் பின்னர் அவர் ‘தான் முஸ்லிம்களை பாதுகாக்கக்கூய ஒரு ஜனாதிபதியை வெற்றிபெற செய்யென அல்லாஹ்வை தேர்தல் காலத்தில் தினந்தோறும் பிரார்தித்ததாக’ ஹிஸ்புழ்ழாஹ் குறிப்பிட்டிருந்தார். ஹிஸ்புழ்ழாஹ்வுடைய இந்த கருத்தை நாம் உற்று நோக்கினார் இவர் தேர்தல் வேலைகளை முழுக்க முழுக்க மகிந்தவுக்காக செய்திருந்த போதிலும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்ற போது மகிந்தவுக்கு தேர்தல் வெற்றியை கொடு என்று இவர் பிரார்த்திக்கவில்லை. மாறாக முஸ்லிம்களை பாதுகாக்கின்ற ஒரு ஜனாதிபதியைத் தா என்றுதான் பிரார்தித்திருக்கின்றார். ஹிஸ்புழ்ழாஹ்வுடைய 27 வருட அரசியல் அனுபவித்திலே முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்த ஜனாதிபதி யார் என்பது தெரியாமலா இருந்திருக்கும்? எனவே இவரும் கடமைக்காக மகிந்தவுக்கு வேலை செய்திருந்தாலும் மகிந்தவுடைய தோல்வியிலே இவரும் சந்தோசம் அடைத்திருப்பார் என்றே ஊகிக்க முடிகிறது.

மகிந்த ஆதரித்தவர்கள் அவரின் கொள்கைக்காக ஆதரிக்கவில்லை. எப்படியாவது மகிந்த வென்றுவிடுவார் அல்லது கொம்பியூட்டர் மஜ்பார்ட் பன்னியாவது மகிந்த வென்றுவிடுவார் என்ற பயத்தில் அவரை ஆதரித்தவர்கள்தான் அதிகம்.

சந்திரிக்க அம்மையார், ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன, ராஜித சேனாரத்ண போன்றவர்கள் இந்த ஆட்சி மாற்றத்தில் முக்கிய பங்கு வகித்தாலும் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேச பிரிய தான் இதன் தகாநாயகன். அவர் எடுத்த துணிச்சலான நடவடிக்கைதான் இந்த வெற்றிக்கனியை மக்களை உண்ண வைத்தது. குறிப்பாக தேர்தலுக்கு முதல் நாள் தேர்தலன்று யாராவது வன்முறையில் ஈடுபட்டால் அவர்களுடைய தலையில் வெடி வைக்கப்படும் என்று அவர் எச்சரித்தனால்தான் தேர்தல் காலங்களில் நடந்த வன்முறைகள் கூட தேர்தல் அன்று நடைபெறவில்லை. இவ்வாறு அரசாங்க ஊழியர்கள் துணியாமல் இந்த வெற்றியை பெற்றிருக்க முடியாது. தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய வரலாறு படைத்துவிட்டார். மகிந்த தேசப்பிரியவுக்கு ஒரு சல்யூட்.

நிலமை இவ்வாறு இருக்க மகிந்த மீண்டும் அரசியலுக்கு வர முயற்சி எடுப்பதாக தகவல்கள் வருகின்றன. நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பஸ் பிடித்து கதிர்காம கடவுளை தரிசிக்க செல்பவர்கள் கடவுளை தரிசித்துவிட்டு திரும்பும் வழியில் மகிந்தவின் வீட்டிற்கு சென்று மகிந்தவையும் பார்த்துவிட்டு திரும்புவதனால் தினமும் பக்தர்கள் கூட்டத்தினால் மகிந்தவின் வீடு நிரம்பி வழிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மகிந்த அண்மையில் ‘தான் எந்த பாத்திரமும் வகிக்க தயார்’ என கூறியுள்ளார். மகிந்த அரசியலுக்கு வராமல் கதிர்காம கடவுளுக்கு அடுத்தபடியாக மக்கள் மகிந்தவை தற்போது வைத்திருக்கின்றபடியால் இந்த கடவுளுக்கு அடுத்த படியான இந்த பாத்திரத்தை வகிப்பதுதான் சிறந்தது.

தனித்து நிற்கும் சொந்த தொகுதிகளிலேயே வெற்றிபெற முடியாத நுகேகொட குழுவினரை நம்பி மகிந்த அரசியலில் இறங்க வேண்டாம். மகிந்த அரசியலில் இறங்குவதற்கு தனது தம்பிமார்களுடைய பலமும் தற்போது அவர் இடத்தில் இல்லை. முன்னாள் அமைச்சர் பசீல் ராஜபக்ஸ நாட்டில் சூறையாடிய திரவியங்களை கொண்டு கலிபோர்னியாவில் வசித்து வருகின்றார். அவர் அரசியலுக்கு மீளப்போவது இல்லையென அறிவித்துவிட்டார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவுக்கும் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்படுவதற்கு முதற்கட்டமாகத்தான் வெளிநாட்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தம்பிமார்களின் பலம் இல்லாமல் மகிந்தவுக்கு அரசியலில் நிலைத்திருக்க முடியாது.

18 வது அரசியல் அமைப்பு திருத்தம் வந்து மூன்றாவது தடவையாகவும் மகிந்த ஜனாதிபதி தேர்தல் கேட்கலாம் என்ற நிலமை வந்த போது மகிந்த சொன்னார் ‘மூன்றாவது தடவையாக தான் ஜனாதிபதியாக இருக்க முடியுமா? இல்லையா? என்று மக்கள்தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர சட்டம் தன்னை தடுக்கக்கூடாது. அதற்காக வேண்டித்தான் சட்டத்தை திருத்தினேன்’ என்றார். இப்போது அவர் விரும்பியது போல் மக்களே மிகத்தெளிவாக தீர்ப்பை அவருக்கு வழங்கி விட்டார்கள். அதாவது முன்றாவது முறையாக அவர் ஜனாதிபதியாக வரமுடியாது என்று. எனவே மக்கள் தீர்ப்பை ஏற்று அரசியலில் இருந்து அவர் ஒதுங்க வேண்டியதுதான்.

நுகேகொட குழுவிற்கு பின்னால் செல்லத்தேவையில்லை. அது மாத்திரமல்ல இந்த ஜனாதிபதி தேர்தலிலே மகிந்த பெருமளவு பணத்தை செலவு செய்திருக்கிறார். நாடளாவிய ரீதியிலே அவருடைய விலை உயர்ந்த கட்டவுட்கள் வைக்கப்பட்டன. அரச ஊடகங்கள் அவரை கண்மூடித்தனமாக ஆதரித்தன. ஒவ்வொரு கூட்டத்திற்கும் நூற்றுக்கணக்கான பஸ்களிலே ஆட்கள் ஏற்றப்பட்டு மக்கள் திறள் தானாக சேர்ந்ததாக செயற்கையாக காட்டப்பட்டது. 400 பில்லியன் ரூபா அரச பணம் மகிந்தவின் தேர்தல் வெற்றிக்கு செலவிடப்பட்டிருந்தது. இவ்வாறு பகீரத பிரயத்தணம் எடுத்தும் அவர் தேர்தலிலே வெல்லவில்லையென்றால் இனி ஒரு போதும் அவர் வெல்லப்போவது இல்லை.

தேர்தல் நேரத்திலே மகிந்த ஒவ்வொரு மேடையிலும் மக்களை பார்த்து ‘நான் மின்சார கதிரையில் வைக்கப்பட்டு கொல்லப்படுவதை நீங்கள் விரும்புகின்றீர்களா?’ என்று கேட்டுவந்தார். இதற்கு ‘ஐ’ படத்தில் விக்ரம் பாணியில் பதில் அளிப்பதாக இருந்தால் ‘இல்லை. அதற்கு மேலே’ என்றுதான் சொல்ல வேண்டும். ஐக்கியநாடுகளின் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணையில் தீர்ப்பு அறிக்கையில் ஆறு மாதத்திற்கு பிற்போட வைத்ததன் மூலம் மகிந்தவை மின்சார கதிரையில் உட்கார வைக்கின்ற சந்தர்ப்பத்தை ஆறு மாதத்திற்கு பிற்போட வைத்து ஜனாதிபதி மைத்திரி மகிந்தவை பாதுகாத்திருக்கின்றார் என்றே சொல்லவேண்டும்.

இன்று ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேனவின் வெற்றியை தொடர்ந்து முஸ்லிம்களுடைய நிலமை வெகுவாக உயர்ந்துள்ளது. மகிந்தவின் ஆட்சியின் கீழ் அவமானங்கள் பலவற்றை சந்தித்த முஸ்லிம் சமூகம் இன்று உயர்ந்த இடத்திலே இருக்கின்றது. முஸ்லிம் விவகாரங்களை கவனிக்க தனியாக ஒரு முஸ்லிம் அமைச்சரும் நாட்டின் புனித பூமிகளுக்கு பொறுப்பாக ஒரு முஸ்லிம் அமைச்சரும் நியமிக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு மத ரீதியாக இருந்த நிந்தனைகள், பொருளாதார நெருக்கடிகள் இன்று கழையப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரியின் உள்ளத்திலே முஸ்லிம்கள் உயர்ந்த இடத்திலே இருக்கின்றார்கள். 98% முஸ்லிம்கள் ஜனாதிபதி மைத்திரியை ஆதரித்திருந்தார்கள். ஒரு சந்தர்பத்திலே மைத்திரி ‘இவ்வளவு தூரம் முஸ்லிம்கள் தனக்கு வாக்களித்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது’ என்றார்.

மைத்திரியின் கடைசி தேர்தல் பிரச்சார கூட்டம் கொழும்பு மருதானையில் இடம்பெற்றது. 4 கிலோமீற்றர் தூரத்திற்கு முஸ்லிம்கள் தொப்பி அனிந்து பெரும் திரளாக அக்கூட்டத்திற்கு சமூகம் அளித்திருந்ததை பார்த்த மைத்திரி ‘தனது வாழ் நாளிலேயே இவ்வாறான ஜனத்திரளை நான் பார்த்ததில்லை’ எனக்கூறி அழுதுவிட்டார். ஜனாதிபதி மைத்திரி முஸ்லிம் சமூகத்திற்கு பெரிதும் நன்றிகடன் பட்டுள்ளார்.

அண்மையில் முன்னால் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் கூறிய கூற்றையும் நாம் கவனிக்க வேண்டும். அதாவது ‘ முஸ்லிம்களை பொதுபல சேனா தாக்கினால் பொதுபல சேனாவை நாய் அடைக்கின்ற கூட்டிலே அடைப்பேன்’ எனக்கூறியுள்ளார்.. அவ்வாறு கூறியது மாத்திரமல்லாது அந்த நிலைப்பாட்டிலே தொட்ர்ந்து இருக்கும் சந்திரிகா அம்மையாரை அல்லாஹ்வுக்கு அடுத்த ஸ்தானத்தில் வைத்தாலும் பரவாயில்லை. இவ்வாறு இல்லாமல் முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்த மகிந்தவை அல்லாஹ்வுக்கு அடுத்த இடத்தில் எமது முஸ்லிம் தலைவர்கள் சிலர் வைத்து பார்த்தார்கள் என்பதை நினைக்க மனவேதனையாக இருக்கின்றது.

1915 ஆம் ஆண்டில் சிங்கள முஸ்லிம் கலவரம் இந்த நாட்டிலே இடம்பெற்றது. அந்த கலவரத்தை அடக்க பஞ்சாப்பில் இருந்து இராணுவம் அழைத்துவரப்பட்டு கலவரம் அடக்கப்பட்டது. அவ்வாறு கலவரத்தை அடக்க வந்த பஞ்சாக் இராணுவத்தால் பாதிக்கப்பட்ட சில சிங்கள சகோதரர்களது பரம்பரையில் வந்த தற்போது பொதுபலசேனாவில் இருக்கும் முக்கியஸ்தர்கள் சிலர் இந்த நாட்டிலே 2015 ஆம் ஆண்டு, 1915 ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின் நூற்றாண்டுவிழா கொண்டாடுவதற்கு மீண்டும் சிங்கள முஸ்லிம் கலவரத்தை இந்த ஆண்டு அரங்கேற்ற திட்டமிட்டிருந்தார்கள். இத்திட்டம் ஜனாதிபதி மைத்திரியின் வெற்றியால் தவிடுபொடியாக்கப்பட்டு முஸ்லிம்கள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறு பல காரணங்களினால் முஸ்லிம்களின்; நிலமை இந்த நாட்டிலே உயர்ந்துள்ளது.

இந்த சந்தர்பத்திலே முன்னாள் பிரதி அமைச்சர் சேகு இஸ்ஸதீனின் தேர்தல் காலத்தில் வெளியிட்ட ஒரு கூற்றை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். ‘முஸ்லிம் சமூகமானது 100% ஒற்றுமைப்பட்டு மைத்திரியை ஆதரிக்ககூடாது. 50% மைத்திரியையும் 50% மகிந்தவையும் ஆதரிக்க வேண்டும்’ என்று முஸ்லிம் சமூகத்தை நோக்கி சேகு இஸ்ஸதீன் அறை கூவல் விடுத்திருந்தார். இவ்வாறு இவர் கூறியது போல் முஸ்லிம் சமூகம் இரண்டுபட்டு வாக்களித்திருந்தால் இங்கு நிச்சியமாக மகிந்த வெற்றிபெற்று இருப்பார். இன்று முஸ்லீம்களுக்கு இருக்கின்ற அந்தஸ்த்து தலைகீழாக மாறியிருக்கும். 1915 ஆம் ஆண்டய சிங்கள முஸ்லிம் கலவரத்தின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு (2015) கொண்டாடியிருப்பார்கள் இதுதான் சேகு இஸ்ஸதீனின் தீர்க்க தரிசனம். அல்லாஹ் முஸ்லீம்களை பாதுகாத்தான்.

அண்மையிலே முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா பேசிய பேச்சை இங்கு நான் சுட்டிக்காட்ட வேண்டும். ‘முஸ்லீம்கள் எங்களுக்கு பாடம் படிப்பிக்க தருணம் பார்த்திருந்தார்கள். நாங்கள் அவர்களிடமிருந்து பாடம் படித்துக் கொண்டோம்’ என்றார் அவர்.

முஸ்லீம்கள் தங்களுக்கு மத ரீதியாக நடந்த நிந்தனைகள், பொருளாதார ரீதியாக ஏற்படுத்தப்பட்ட தாக்கங்களுக்காக மாத்திரம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தார்கள் என்றால் அதை ஒரு சுயநலமாகத்தான் பார்க்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல் மகிந்த ராஜபக்ஸவின் ஊழல் நிறைந்த, பதவி மோகம் கொண்ட குடும்ப ஆதிக்கம் நிறைந்த, சர்வாதிகாரமான, வீண்விரயம் நிறைந்த ஆட்சியில் இருந்து இந்த நாட்டை மீட்டெடுக்க வேண்டும். அதன் மூலம் இந்த நாட்டில் வாழ்கின்ற மூவின மக்களுக்கும் சுபீட்சம் உண்டாக வேண்டும் என்பதற்காகவும்தான் முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக மகிந்தவுக்கு எதிராக வாக்களித்தார்கள்.

இன்று அதன் பலனை நாட்டு மக்கள் அனைவரும் அனுபவிக்கின்றனர். பொருட்களின் விலைகள் குறைந்து, வீண்விரயம் குறைந்து, பத்திரியை சுதந்திரம் மலர்ந்து அதன் மூலம் ஜனநாயக சுவாச காற்றை மக்கள் சுவாசிக்கின்றனர். எப்போது எல்லாம் இந்த நாட்டிற்கு ஆபத்து வருகின்றதோ அப்போதெல்லாம் இந்த நாட்டை காப்பாற்ற முஸ்லம்கள் தங்கள் பங்களிப்பை செய்திருக்கின்றனர். அந்நியர்கள் படையெடுத்து வரும் போதெல்லாம் இந்நாட்டு முஸ்லிம்கள் இந்நாட்டு சிங்கள மன்னர்களோடு சேர்ந்து நாட்டை காப்பாற்றியிருக்கின்றார்கள். வரலாற்றில் எப்போதுமே முஸ்லிம்களுடைய பங்கு கனிஷமானதாக இருந்து வந்துள்ளது.

பிரபாகரனின் பிடியில் இருந்து இந்த நாட்டை மகிந்த ராஜபக்ஸ மீட்டெடுத்தார். மகிந்த ராஜபக்ஸவின் பிடியில் இருந்து இந்த நாட்டை முஸ்லிம்கள் மீட்டெடுத்தார்கள் என்று நாங்கள் சொல்லலாமா?.
இப்படிக்கு,

மர்சூக் அகமட் லெப்பை,
முன்னாள் நகர பிதா, காத்தான்குடி.

Published by

Leave a comment