கொழும்பு: இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தடைந்த இந்தியப் பிரதமர் மோடிக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள முதலாவது இந்தியப் பிரதமராக மோடி திகழ்கிறார். அதாவது, 28 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கிறார்.
இந்தியாவின் 12 ஆவது பிரதமரான நரேந்திர மோடியின் இலங்கை வருகை இங்குள்ள சகல மக்களினாலும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கப்பட்டிருந்தது. நீண்டகாலமாக தளர்வு நிலையில் இருந்த இரு நாட்டு உறவுகளும் பலமடைவதற்கு இவரது வருகை வழிவகுத்துள்ளது.
கொழும்பு, காலி முகத்திடலுக்கு முன்னால் இருக்கும் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முற்பகல் 9.30 அளவில் பிரதமர் மோடிக்கு மகத்தான உத்தியோகபூர்வ வரவேற்பளிக்கப்பட்ட பின்னர் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இதன் பின்னர் நரேந்திரமோடி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் முன்னிலையில் நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. இரு நாடுகளுக்கிடையிலான விசா நடைமுறை சுங்கம் தொடர்பான பரபஸ்பர உதவி, இரு நாட்டு இளைஞர் விவகாரம் தொடர்பான ஒத்துழைப்பு, மாத்தறை, ருஹுணு பல்கலைக் கழகத்தில் ரவீந்திரநாத் தாஹுர் ஞாபகார்த்த மண்டபம் நிர்மாணித்தல் ஆகிய 4 விடயங்களிலும் ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டன.
இந்த 4 ஒப்பந்தங்களிலுள்ள முக்கியத்துவங்களை விடவும், பிரதமர் இங்கு ஆற்றிய மிகக் கச்சிதமான உரை தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. சரளமான ஆங்கிலத்தில் பேசிய அவர், தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பும், விருந்துபசாரமும் பெருமகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார்.
சீன அரசாங்கத்தோடு முன்னைய அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பில் இந்தியா பெரும் அதிருப்தி கொண்டிருக்கிறது என்பது உண்மை. குறிப்பாக கொழும்பு துறைமுக நகரத்திட்டம் சீன நீர்மூழ்கிக் கப்பலின் இரகசிய வருகை ஆகியவை தொடர்பில் இந்தியா கடும் ஆட்சேபனை தெரிவித்திருந்தது. என்றாலும் இலங்கையுடனான உறவு மேலும் பலப்படுத்துவதன் மூலமே சர்ச்சைகளுக்கும் சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியுமென்ற உறுதியான நம்பிக்கை கொண்டிருப்பவர் நரேந்திர மோடி, ‘மோடி சுனாமி’ என்பார்கள். அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுப் பிரதமர் ஆன இவர், பதவியேற்பு வைபவத்திற்கு சார்க் நாடுகளின் தலைவர்களை அழைத்திருந்தது இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
நரேந்திர மோடியின் உரை சீனாவை நேரடியாகச் சுட்டிக்காட்டாத வகையில் இலங்கை, இந்திய உறவுக்கு ஒரு சுற்று வரைபைக் காட்டியிருக்கிறதென்றே கூறலாம். இந்தியா, இலங்கை இடையிலான நட்புறவுக்கு பொருளாதார ரீதியிலான உறவு முக்கிய காரணியாக சுட்டிக்காட்டிய மோடி, இருநாடுகளின் உறவின் இதயம் மக்கள்தான் என்றும் தெளிவுபடுத்தினார். திருகோணமலை துறைமுகப் பிரதேசம் எரிசக்தி கேந்திரமாக மாற்றுவதற்கு இந்தியா தன்னாலான உதவிகளை வழங்கும் என்று கூறியுள்ள அவர், சம்பூர் அனல் மின் நிலையத்திட்டம் இலங்கையின் பாரிய அபிவிருத்திக்கு தேவையானதாகும். இதற்கும் இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் என அவர் அழுத்தமாகத் தெரிவித்தார்.
வடமாகாண கடற்றொழிலாளர்கள் இந்திய மீனவர்களால் கடுமையான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இது இரு நாட்டு மீனவர்களதும் வாழ்வாதாரப் பிரச்சினை யென்றாலும் இருதரப்பு மீனவர்களும் நேருக்கு நேர் மோதும் மோசமான நிலை ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தான் நேரடியாகப் பேசியிருப்பதாக மோடி, கூறினாலும், தனது உரையில் ஓர் அழுத்தம் கொடுத்ததாகத் தெரியவில்லை. மீனவப் பிரதி நிதிகள் மிக விரைவில் சந்தித்துப் பேசி முடிவு காண்பார்கள் என்று மட்டுமே கூறினார். மீனவர் பிரச்சினை தொடர் கதையாக இருந்தாலும் இரு நாட்டு உறவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இது மீனவர்களது வாழ்வாதாரத்தோடு சேர்ந்த பொருளாதாரப் பிரச்சினை என்பதை இந்தியாவும் இலங் கையும் புரிந்திருந்தும் ஏன் இதற்கோர் தீர்வை எட்ட முடியாமல் இருக்கிறதென்பது புரியாத புதிராக இருக்கிறது.
இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியா மிகவும் அக்கறையுடன் இருக்கிறதென்பதை மோடி தனது உரையில் கூறினார். “ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்கள், சம உரிமை, ஜனநாயகம் பெற்று வாழ வேண்டும். அதற்கு 13ஆவது திருத்தச் சட்டத் திற்கும் அப்பால் சென்று திருத்தச் சட்டம் அமுல்படுத்த ப்படுமென இந்தியா எதிர்பார்க்கிறது” என அழுத்தம் கொடுத்தார் இந்தியப்பிரதமர்.
இந்தியாவின் இந்த அறிவிப்பும் வேண்டுகோளும் இலங்கைத் தமிழ் பேசும் சிறுபான்மை மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க அளவு வரவேற்பைப் பெற்றிருக்கும் என்றுதான் கூற முடியும். 13ஆவது திருத்தம் என்பது இந்தியாவின் செல்லக் குழந் தையாகும். இதேபோன்று இந்தியா தொடர்ச்சியாக இலங் கைக்கு அழுத்தம் கொடுத்து வந்த போதும், கடந்த கால அர சாங்கம் அதனை உதறித்தள்ளியே நடந்து கொண்டது என் பதை நாம் மறுப்பதற்கில்லை. தமிழ் மக்களின் ஆதங்கம் அபி லாஷைகள் நிராகரிக்கப்பட்டே வந்திருக்கின்றன. இந்த நிலை யில் மோடியின் உரை தமிழ் பேசும் சமூகங்களுக்கு புதுத் தெம்பை ஏற்படுத்தியிருக்கிறதாகவே நாம் கருத முடிகிறது.
சுருக்கமாகச் சொன்னால் மோடியின் வருகை இரு நாட்டு உறவில் நெருக்கத்தை ஏற்படுத்தியிருப்பதோடு பொருளா தாரத்தினை வளம்படுத்த ஒருவாய்ப்பாகவும் அமைந்தி ருக்கிறது. எடுத்ததற்கெல்லாம் ஆர்ப்பாட்டம் நடத்தும் தமிழக அரசியல் வாதிகள் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இரு நாட்டு பொருளதார உறவு பலமடைந்தால் கூடுதல் நன்மை கிடைக்கப்போவது தமிழ் நாடு என்பதை மறந்து விடக்கூடாது.
Published by


Leave a comment