‘புதிய தேர்தல் முறை தொடர்பில் சிறுபான்மைக் கட்சிகள் ஒன்றிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள முன்வரவேண்டும்’: NFGG வேண்டுகோள் விடுக்கின்றது

MM.Abdur Rahman @ May DayNFGG ஊடகப்பிரிவு

காத்தான்குடி: ‘புதிய தேர்தல் முறை, சிறுபான்மை சமூகங்களின் நியாயமான அரசியல் பிரதிநிதித்துவங்களை உத்தரவாதப்படுத்த வேண்டும். இதனை உறுதி செய்வதற்காக சகல சிறுபான்மைக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து செயற்படவேண்டும்’ என NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் விளக்கமளிக்கும் விஷேட சந்திப்பு ஒன்று கடந்த 07.03.2015 அன்று காத்தான்குடியில் இடம்பெற்றது.

NFGGயின் பிராந்திய தலைமைச் செயலகத்தில் இடம்பெற்ற இந்த விஷேட சந்திப்பில் தொடந்தும் அவர் உரையாற்றும்போது தெரிவித்ததாவது,

‘அரசியல் யாப்புத் திருத்தம் என்பது புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் முக்கிய அம்சமாக அமைந்திருக்கின்றது. இதில் தேர்தல் முறை மாற்றம் என்கின்ற விடயம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த அதிமுக்கிய விடயமாக மாறியிருக்கின்றது. தற்போது நடைமுறையிலிருக்கும் விகிதாசார முறை ஏற்படுத்தியிருக்கும் பல மோசமான விளைவுகளுக்கான தீர்வாகவே புதிய தேர்தல் முறை கொண்டு வரபடவுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. விகிதாசார முறையும் தொகுதிவாரி முறையும் ஒன்றிணைந்த ஒரு கலப்புத் தேர்தல் முறை குறித்தே இங்கு பேசப்படுகின்றது.

சில வருடங்களுக்கு முன்னால் பாராளுமன்றத் தெரிவுக் குழு மூலம் கொண்டுவரப்பட்ட யோசனைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த புதிய தேர்தல் முறை முன் மொழியப்பட்டிருக்கின்றதாகத் தெரிவிக்கிப்படுகின்றது. இருந்தபோதும் முன் மொழியப்பட்டிருக்கும் தேர்தல் முறையின் முழுமையான வடிவமும் தெளிவும் இதுவரை அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக மக்களுக்குச் சொல்லப்படவில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சொல்லப்பட்ட தகவல்களின் படி பாராளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 225 தாகவே தொடர்ந்தும் பேணப்படும், தற்போது இலங்கையில் காணப்படும் 160 தேர்தல் தொகுதிகளில் இருந்தும் தலா ஒருவர் என்ற வீதம் 160 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

அத்தோடு 60 உறுப்பினர்கள் மாவட்ட ரீதியாக விகிதாசார முறையில் தெரிவு செய்யப்படுவதோடு மேலும் 15 பேர் உறுப்பினர்கள் தேசியப்பட்டியல் மூலம் தேரிவு செய்யப்படுவார்கள். ஒவ்வொரு மாவட்டங்களிலும் வாக்காளர்கள் தொகைக்கு ஏற்ப அம்மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும் என்றும் ஒவ்வொரு மாவட்டமும் ஆகக் குறைந்தது ஒரு உறுப்பினரையாவது விகிதாசார முறையில் பெற்றுக்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அத்தோடு சிறிய அல்லது சிறுபான்மைக் கட்சிகளும் ஆசனங்களைப் பெற்றுக்கொள்வதனை உறுதி செய்து கொள்ளும் முகமாகவே மாவட்ட விகிதாசார பிரதிநிதித்துவம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தவகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொகுதி வாரியாகப் போட்டியிடும் கட்சிகளில் ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள முடியாத கட்சிகளுக்கே மாவட்ட விகிதாசார பிரதிநிதித்துவம் கிடைக்கும் என அறிய வருகின்றது.

இந்தத் தகவல்களின் அடிப்படையில் நோக்கும்போது சிறும்பான்மை சமூகங்களைப் பொறுத்தவகையில் இரண்டு விடயங்கள் மிகத் கவனமாக நோக்கப்பட வேண்டும். முதலாவதாக, ஏற்கனவே நடைமுறையில் இருந்த பல் அங்கத்துவத் தொகுதி அல்லது இரட்டை அங்கத்தவர் தொகுதி முறை இப்புதிய முறையில் உள்வாங்கப்படவில்லை என்றே ஊகிக்க முடிகின்றது. இது சமூகங்கள் கலந்து வாழும் பல தொகுதிகளில் சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநிதித்துவத்தினை இழக்கச்செய்யும் நிலையினை ஏற்படுத்தும்.

அடுத்ததாக, மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையிலும் குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உதாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவகையில் மூன்று தொகுதிகளில் இருந்தும் மூன்று பேர் தெரிவு செய்யப்படுவர். விகிதாசார அடிப்படையில் தேர்வுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 60 பேரில் மாவட்ட வாக்காளர்கள் தொகை அடிப்படையில் பார்க்கும்போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விகிதாசார முறையில் ஒரு உறுப்பினரையே பெற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கின்றது. இந்த அடிப்படையில் நோக்கும்போது தற்போதைய விகிதாசார முறையின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவாகும் ஐந்து உறுப்பினர்களுக்குப் பதிலாக புதிய தேர்தல் முறையின்கீழ் நான்கு உறுப்பினர்களே தெரிவு செய்யப்பட வாய்ப்பு இருக்கின்றது.

இந்த இரண்டு விடயங்கள் பற்றியும் நாம் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். புதிய தேர்தல் முறையினைத் தயாரிக்கும் சட்ட வல்லுனர்குளோடும் ஏனைய அரசியல் தரப்பினரோடும் இது பற்றி விரிவாகப் பேசியதோடு புதிய தேர்தல் முறையில் காணப்படும் இது போன்ற பாதகமான அம்சங்கள் நீக்கப்படவேண்டும் என்றும், இது சிறுபான்மை சமூகங்களின் நியாயமான அரசியல் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் எமது நிலைப்பாடுகளை நாம் உறுதியாக முன்வைத்தோம். மேலும் ஜனாதிபதி மைத்ரி மற்றும் பிரதமர் ரணில் ஆகியோரைத் தேர்தலுக்கு முன்னரே சந்தித்து இது தொடர்பான கோரிக்கைகளை எழுத்துமூலம் முன்வைத்தோம்.

ஆனாலும், ஜனாதிபதி மைத்ரிக்கு இறுதி நேரத்தில் ஆதரவளித்த ஏனைய முஸ்லிம் அரசியல் தரப்புக்கள் இது போன்ற பேச்சுவார்த்தைகளையோ அல்லது எழுத்து மூல கோரிக்கைகளையோ முன்வைத்ததாக தெரியவில்லை. தேர்தலின் பின்னர்கூட புதிய அரசாங்கத்தில் பங்காளிகளாக இருக்கும் பலரும் புதிய தேர்தல் முறை குறித்து அதிகம் அக்கறை எடுத்துக்கொண்டதாகவும் தெரியவில்லை. உடனடியாக இத்தேர்தல் முறை நடைமுறைக்கு வராது என்று முன்னிருந்த அனுமானம் இதற்கான காரணமாகவும் இருக்கலாம்.

எனினும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் புதிய தேர்தல் முறை மாற்றம் கொண்டுவரப்படும் என்ற விடயம் தற்போது ஏறத்தாழ உறுதியாகி இருக்கும் நிலையில் அவசரமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டி இருக்கிறது. இதனைக் கட்சிகளின் தனித் தனி நடவடிக்கைகளாக மேற்கொள்ளாது ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகளாக மாற்ற வேண்டும். அந்தவகையில் சிறுபான்மைக் கட்சிகள் ஒன்றிணைந்து தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். புதிய தேர்தல் முறை பாராளுமன்றத்தில் சிறுபான்மை சமூகங்களின் நியாயமான பிரதிநிதித்துவங்களை பாதுக்கக்கும் என்ற உத்தரவாதத்தினை ஏற்படுத்த வேண்டும். இதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் நாம் வழங்கத் தயாராக இருக்கின்றோம்.’

Published by

Leave a comment