வன்னி: அமைச்சர் றிசாத் பதியுதீனின் அரசியல் வரலாற்றில் எந்தக்கட்சிக்காரர்களையும் அச்சுறுத்தியது கிடையாது என தெரிவித்துள்ள வடமாகாண சபை உறுப்பினர் வீ. ஜயதிலக, மக்களுக்கு அமைச்சர் ஆற்றிவரும் சேவையினால் இன்று மக்கள் அவர் பக்கம் நிற்கின்றனர். ஆனால் சில அரசியல்வாதிகள் தமது வங்குரோத்து அரசியலை மறைக்க பொய் கூறுவதாகவும் கூறினார்.
வன்னியிலுள்ள அமைச்சர் ஒருவர் ஐக்கிய தேசிய கட்சிக்காரர்களை அச்சுறுத்துவதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் அவரிடம் கேட்ட போது மேற்கண்டவாறு கூறினார்.
வன்னி மாவட்டத்தின் அபிவிருத்திக் குழு தலைவரான அமைச்சர் றிசாத் பதியுதீன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அவர்களின் ஆட்சி காலத்தில் ஸ்ரீ.ல.சு. கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருக்கின்ற காலம் தொட்டு நானறிவேன். வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட காலம் இந்த மக்களின் தேவைப்பாடுகள் குறித்து அதிக கவனம் செலுத்திய ஒருவர்.
முன்னாள் ஜனாதிபதியிடத்தில் இம்மக்கள் தொடர்பில் அதிகமாக பேசிய ஒருவராக அமைச்சர் றிசாத் பதியுதீன் இருந்துவந்துள்ளார். அரசிலுக்கு பலாத்காரமாக அழைத்துவரப்பட்டவர் தான் இந்த அமைச்சர். வன்னி மாவட்ட மக்களது அதிகப்படியான வாக்குகளை பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவானது முதல் இந்த மாவட்ட மூவீன மக்ளுக்கும் பணியாற்றக் கூடியவராக நான் இவரை கண்டுவந்துள்ளேன். தேர்தல் காலங்களில் பகிரங்கமாக அமைச்சருக்கு எதிராக செயற்பட்டு வந்தவர்களை கூட தேர்தலின் பின்னர் அவர்களது நலன் திட்டங்களுக்கு உதவி செய்யும் ஒருவாக கண்டு வியந்துள்ளேன்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவராக இருக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் அணியில் இன்று ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திர கட்சி உள்ளிட்ட இதர கட்சிகளின் ஆதரவாளர்கள் வந்து இணைந்து கொண்டிருக்கின்ற போது அரசியல் தெரியாதவர்கள் அமைச்சர் தொடர்பில் வவுனியா மாவட்டத்துக்கு வந்து இம்மக்களிடம் அமைச்சர் தொடர்பில் அபாண்டங்களை சுமத்திவருவது நகைப்புக்கிடமானது என்பதாக கூறிய வடமாகாண சபை உறுப்பினர் வீ.ஜயதிலக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அதுவும் அமைச்சர் றிசாத் பதியுதீனின் தயவில் பாராளுமன்றம் சென்று அவரை விமர்சித்து திரிபவர்கள் குறித்து மக்கள் அறியாதவர்கள் அல்ல. சிங்கள மக்கள் மத்தியில் வந்து அமைச்சருக்கு எதிராக பொய்களை கூறுபவர்களுக்கு எதி்ர் வரும் தேர்தலில் தக்க பாடத்தை எமது மக்கள் புகட்டுவார்கள் என்பதை தெரிவிப்பதாகவும் வீ. ஜயதிலக கூறினார்.
அதே வேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆட்சியில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக கொண்டதும், அமைச்சரவை அமைச்சர்களுக்கு தலைமை தாங்கும் நிலையில் வன்னியில் உள்ள அமைச்சர் ஒருவர் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களை அச்சுறுத்துவதாக கூறுவதிலிருந்து பிரஸ்தாப பிரதி நிதி தனிப்பட்டதும், வேறு ஊடக நிறுவனமொன்றின் கொன்த்ராத்துகாரராக செயற்படுகின்றார் என்பது தெளிவானதொன்றாகும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புவதாக அவர் மேலும் கூறினார்.
Published by

Leave a comment