சிங்கள – முஸ்லிம் உறவைக் காக்க கட்டிடத்தை உடைத்த முஸ்லிம்கள்

unnamed3ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்

பொலன்னறுவை: போகஹதம கிராமமானது பொலன்னறுவை மாவட்டத்தில் மின்னேரிய செயலாளர் பிரிவில் இல.40 கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள கிராமமாகும். சுமார் 28குடும்பங்கள் வாழ்ந்து வரும் இக்கிராமத்துக்கு அண்டிய 2 கிலோ மீற்றர் தூரத்தில் ஜும்மா பள்ளிவாயலுடனான அத்தமுன எனும் கிராமமும் அமைந்துள்ளது. ஆனால் போகஹதமன கிராமத்தினை முற்றிலும் சூழ்ந்ததாக சிங்கள குடியிருப்புக்களே காணப்படுகின்றது.

கடந்த பெப்ரவரி மதம் 22ம் திகதி போகஹதமன கிராமத்தில் கட்டப்பட்டிருந்த பள்ளிவாயல் உடைக்கபட்டுள்ளதாக சமூக வளைத்தளங்களிலும், முகநூல்களிலும் பரவலான செய்திகள் பரிபாறப்பட்டு வரும் நிலையில் இதன் உண்மை நிலையினை நவமனி வாசகர்களுக்காக அறிந்து கொள்ளும் பொருட்டு (04.03.2015) புதன் கிழமை அவ்விடத்துக்கு நேரடியாக சென்று குறிப்பிட்ட பிரதேசத்தில் உள்ள மக்களையும், குறிப்பிட்ட பள்ளிவாயல் எனும் கட்டடம் கட்டப்படுவதற்கு காரணமாய் இருந்த அத்தமுனை பள்ளிவாயலின் தலைவர் வஹாப்தீனை சந்தித்து இது சம்பந்தமக வினவிய போது அவர் கூறிய விடயங்கள் கீழ்வருமாறு,

குறிப்பிட்ட கிராமம் வருடாந்தம், வெள்ளத்தினால் பாதிக்கப்படுகின்ற படியினால் தற்காலிகமாக வெள்ளத்தினால் பாதிக்கப்படுகின்ற மக்களை தங்கவைப்பதற்காகவும், கிராமத்தில் உள்ள சிறுவர்களுக்கு குர்ஆன், சமயக் கல்வி ஊட்டுவதற்காகவும் அரசசார்பற்ற நிறுவனத்தின் உதவியுடன் சனசமுக நிலையம் எனும் பெயரில் கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இக்கட்டத்தின் சுவர்கள் சுமார் 8 அடி உயரத்துக்கு கட்டப்பட்டிருந்த நிலையில் சிங்கள மக்கள் குறித்த கிராமத்தில் சட்டதிட்டங்களுக்கு அமைவாக அனுமதி பெறப்படாமல் பள்ளிவாயல் கட்டப்படுவதாக முறைப்பாடு செய்துள்ளதாக இல 40 கிராம சேவையாளர் பிரிவின் கிராம சேவையாளர் கட்டப்பணிகளை இடை நிறுத்துமாறு எமக்கு பணிபுரை விடுத்தார்.

அந்த வகையில் நாங்கள் இதனை நிர்மானிக்க ஆரம்பிக்கும் போது கிராம சேவையாளர் அலுவலகத்திலோ, பிரதேச சபையிலோ அல்லது பிரதேச செயலகத்திலோ அனுமதி பெறவில்லை என்பது உண்மையான விடயமாகும். அதற்குப் பிற்பாடு அனுமதி பெறுவதற்காகன நடவடிக்கைகளை நாங்கள் மெற்கொண்டிருந்த வேலையில் இது சம்பந்தமான விசாரணைக்கு வருமாறு ஹிங்குராக்கொட பொலிசார் எம்மை கேட்டுக் கொண்டதற்கினங்க நாங்கள் அங்கு சென்றிருந்த போது அங்கே பெருந்திரலான சிங்கள சகோதரர்கள் குழுமியிருந்தனர். அவர்கள் இது சனசமூக நிலையம் இல்லை என்றும், இவர்கள் சனசமூக நிலையம் என்ற பெயரில் பள்ளிவாயல் ஒன்றைத்தான் கட்டுகின்றார்கள் எனக் கூறி இதைக்கட்ட விடமாட்டோம் என்றும், நாங்கள் மட்டுமல்ல எமது பரம்பரையினர் கூட இதைக்கட்ட விடமாட்டார்கள் எனக்கூறினர்.

இவர்களுடன் கிரித்தளை விகாரை தேரரும் வருகை தந்திருந்தார். இந்த நிலையில் பொலிசார் இதனை வளர விடாமல் பிரதேச செயலாளரின் கவனத்துக்கு விட்டு அவருடைய அனுமதியைப் பெற்று கட்டப்பனிகளை ஆரம்பிக்குமாறு எமக்கு பணிப்புரை வளங்கினார்கள். இதனை தொடர்ந்து சிங்கள மக்களின் முக்கியஸ்தர்களுக்கும், மதகுருமார்களுக்கும் தாங்கள் கட்டுவது பள்ளிவாயல் அல்ல என பல தடவைகள் கூறியும் அவர்கள் மறுத்து விட்டனர். இதனை அடுத்து இக்கட்டடம் கட்டப்பட்ட காணியின் உரிமையளரையும், நிருவாக சபையினரையும் அச்சுறுத்தி முஸ்லிம்கள் பெரும் சிரமங்களை சந்திக்க வேண்டியேற்றபடலாம் என சூழுரைத்தது மட்டுமல்லாமல் நீங்களாகவே உடைக்காவிட்டால் நாங்கள் ஆண்கள் பெண்கள் எல்லோரும் ஒன்று திரண்டு வந்து கட்டத்தை உடைப்போம் எனக் கூறியதுடன் உடைப்பதற்கான காலக்கெடுவும் விதித்தனர்.

இந்த பிரச்சனை சம்பந்தமாக நாங்கள் எல்லோரும் கலந்தாலோசித்து இதன் மூலம் பாரிய சிங்கள முஸ்லிம் கலவரம் ஏற்படலாம் என்ற அச்சத்தின் காரணமாகவும், எமது மாவட்டத்தை அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதிநித்தித்துவப் படுத்துவதனால் எதிர்காலத்தில் அவருடைய நல்லாட்ச்சிக்கெதிராக எதிர்க்கட்சியினை சேர்ந்தவர்கள் இதனை ஒரு ஆயுதமாக பயண்படுத்தலாம் என்ற எங்கள் தூரநோக்கு சிந்தனையின் பலனாக நாங்களே கட்டிடத்தை உடைதெரிந்தோம். மறுநாள் பெகோ இயந்திரத்துடன் ஆர்ப்பாட்டமாக வந்த சிங்கள சகோதரர்கள் எஞ்சியிருந்த அத்திவாரத்தையும் உடைத்தெரிந்தார்கள்.

இதுதான் போகஹதமன கிராமத்தில் பள்ளிவாயல் உடைக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்ற செய்தியின் உணமை நிலையாகும். இதே கருத்தினையே வட மத்திய மாகாண சபை உறுப்பினர் அன்சார் ஹாஜியும் தெரிவித்தார். மேலும் கட்டடம் அமைக்கப்பட்டு வந்த இடமானது வயல் நிலமாக இருந்ததுடன் பிரதேச நபரிடம் அதனை அன்பளிப்பாக பெற்று வஹாப்தீனின் தலைமையில் நிதி சேகரிக்கப்பட்டு முதற்கட்டமாக கிறவல் மண் நிரப்பப்பட்டு குறிப்பிட்ட இடம் செப்பனிடப்பட்டதனை வஹாப்தீன் சுட்டிக்காட்டினார்.

எது எவ்வாறாக  இருந்தாலும் எமது முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் குறித்து எமது புத்திஜீவிகளும், எம்மை பிரதிநிதித்துவ படுத்துகின்ற அரசியல் பிரமுகர்களும், உலமாக்களும் ஒன்றுகூடி ஒருமித்த குரலுடன் நாட்டில் சுமூகமான உறவுகள் சமூகங்களுக்கிடையில் நிலவுவதற்கு நாட்டின் சட்டதிட்டங்களுக்கு ஏற்றவாறு இஸ்லாமிய மதசார்பான கட்டங்களை நிர்மாணிப்பதற்கு முன்னின்று உழைப்பது அவர்களுடைய தார்மீகப் பொறுப்பாகும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment