காத்தான்குடி: காத்தான்குடியில் ஓலைக்குடிசையில் போடப்பட்ட தீப்பந்தத்தைப் போல் இஸ்லாமிய கொள்கையை எரித்துவருகிறது சிலை விவகாரம். “சிலை என்ன காத்தான்குடிக்குப் புதிதா?” என கேட்கும் அளவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வும் அவரது ஆதரவாளர்களும் துணிந்துவிட்டனர்.
“புடவைக்கடையில் பொம்மைகள் இருக்கின்றனவே, வீடுகளில் விளையாட்டு பொம்மைகள் இருக்கின்றனவே” என சின்னப்பிள்ளத்தனமாக படித்தவர்களை அதிகம்கொண்ட காத்தான்குடி மக்களைப்பார்த்து கேட்கும் அளவுக்கு இன்றைய நிலவரம் காணப்படுகிறது.
ஒருபடி கடந்து, “எகிப்து ஓர் முஸ்லிம் நாடு அங்கு சிலைகள் இல்லையா, எகிப்தை அலங்கரிப்பதே பண்டைய சிலைகள்தானே” எனவும் அதற்குரிய ஃபத்வாக்களும் வீசியெறியப்பட்டாச்சு!
சிலை என்பது முன்னோர்களை ஞாபகப்படுத்தி அவர்களின் நினைவாக கற்களில் அல்லது மெழுகில் வடித்து நிறுத்தப்படுவதாகும். விளையாட்டு பொம்மைகளும், பிடவைக்கடை பொம்மைகளும் முன்னோர்களை நினைவு படுத்துவதற்காக அமைக்கப்பட்ட ஞாபகார்த்த படிவங்களல்ல அவை.
இவைகள் நன்றாகத் தெரிந்தும் எப்போதும் இலாவகமாக ஏமாற்ற நினைக்கும் ஹிஸ்புல்லாஹ் தரப்பு, மீண்டும் காத்தான்குடி சமூகத்தை ஏமாற்றுவதற்கு அதிகப்பிரயத்தனம் எடுத்துவருகிறது.
எகிப்தில் விபச்சார விடுதிகள் இருக்கின்றன. மதுஅருந்தும் பிரமாண்டமான சாலைகளும், விடுதிகளும், சினிமா திரையரங்குகளும் சந்திக்குச் சந்தி காணப்படுகின்றன. ஓர் இஸ்லாமிய நாடாகச் சித்தரிக்கப்படும் எகிப்தில், ஃபத்வாக்கள் வழங்கும் எந்த உலமாவாலும் இத்தகைய இஸ்லாத்திற்கு விரோதமான செயற்பாடுகளை அவர்களது நாடான எகிப்தில் ஒழிக்க, அழிக்க அவர்களுக்கு முடியவில்லை.
எனவே, எகிப்தில் சிலை உள்ளதால், காத்தான்குடி அருங்காட்சியத்தில் சிலை வைப்பதை நியாயப்படுத்தும் ஹிஸ்புல்லாஹ் தரப்பு, அங்குள்ள ஏனைய இஸ்லாத்துக்கு விரோதமான செயற்பாடுகளை ஆதரிக்கப்போகிறார்களா என்ற கேள்வியும் சந்தேகமும் காத்தான்குடி சமூகத்தில் தற்பொழுது எழுகின்றன.
அருங்காட்சியத்தை இஸ்லாம் என்ற பேரில் கோடிக்கணக்கான பணம் பறிமாறப்பட்டு, பல கொமிசன்களுக்கு மத்தியில் இத்திட்டம் முடிவடையும் நிலையில் இருக்கின்றது. பண்டைய காலப் பொருட்களை அற்ப சொற்ப காசிக்கு வாங்கி, அதனை பல மில்லியன் கொடுத்து வாங்கப்பட்டதாக கணக்கறிக்கைகள் தயாரித்து, மென் மேலும் இலாபமீட்டிக்கொள்ள இஸ்லாமிய அருங்காட்சியம் உருவாகிறது.
ஒதுக்கப்பட்ட பணத்தை எப்படியும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் ‘கறந்து’ விட வேண்டும் என்ற அதிகப்பிரயத்தனத்தில் ஹிஸ்புல்லாஹ் தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கடும் தோல்வியையும், அவமானத்தையும் சந்தித்த ஹிஸ்புல்லாஹ்வும் அவரது படையும், இஸ்லாமிய அருங்காட்சியம் என்ற பேரில் மீண்டும் காத்தான்குடியில் தலைதூக்கும் நடடிவக்கையில் இறங்கினாலும், மக்கள் மத்தியில் அவருக்கான அதிருப்திகளை தெளிவாக காண முடிகிறது.
இஸ்லாமிய அருங்காட்சியத்தில் பல மர்மங்கள் புதைந்திருப்பதையும் நன்றாக உணர முடிகிறது.
1. அருங்காட்சியத்தை அமைப்பதானால் ஹிஸ்புல்லா அமைத்துவிட்டுப் போகட்டும். ஆனால் சிலைகளை வைத்தே ஆகவேண்டும் என அடம் பிடிப்பது எதற்காக?
2. சிலைகளை வைக்கலாம் என்பதற்காக எகிப்து ஃபத்வாக்களை அதிரடியாக பெற்றுக் கொண்டது எதற்காக?
3. காத்தான்குடி ‘உலமாக்கள் சபை’யில் சிலை ஃபத்வா விடயத்தில் சலசலப்பும், தாமதமும், மௌனமும் எதற்காக?
குறைந்ததது இந்த 3 கேள்விகளுக்காவது ஹிஸ்புல்லா தரப்பு பதில் தரவேண்டும்.
இஸ்லாமிய அருங்காட்சியம் எமது ஊருக்கு வருவதில் எந்த ஆட்சேபனையும் எனக்கில்லை. சிலை இல்லாமல் அருங்காட்சியத்தை அமைக்கலாமே? ஏன் இந்த வீண் விரண்டாவாதம் இந்த அழிந்துபோகும் சிலைகளுக்காக???
சிந்திப்போம்! செயற்படுவோம்!! அல்லாஹ்வுக்காக!!!
Published by



Leave a reply to சனீர் Cancel reply