மருந்து விலைகளை விரும்பியபடி அதிகரிக்க முடியாது

rajithaகொழும்பு: ஒவ்வொருவரும் தமக்கு விரும்பியபடி மருந்துகளின் விலைகளை நிர்ணயிப்பதற்கு இனிமேலும் அனுமதிக்க முடியாது என சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை தொடர்பான சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாத த்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே சுகாதார அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இலங்கையில் தேசிய ஒளடதக் கொள்கையொன்றைக் கொண்டுவருவதற்கு சேனக பிபிலே மற்றும் டொக்டர் எஸ்.ஏ.விக்ரமசிங்க ஆகியோர் கடுமையாகப் பாடுபட்டிருந்தனர். அவர்களின் கனவு நீண்ட வருடங்களின் பின்னர் நனவாக்கப்பட்டுள்ளது. புதிய ஒளடதக் கொள்கையின் மூலம் நாட்டின் மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யமுடியும் என எதிர்பார்க்கின்றோம்.

எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் இலங்கையில் மருந்துப் பொருட்களையும், மருத்துவ உபகரணங்களையும் உற்பத்தி செய்வதற்கும், இலங்கையிலிருந்து இந்தியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு மருந்துப் பொருட்களை சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் ஊடாக ஏற்றுமதி செய்வதற்கும் எதிர்பார்த்திருப்பதாக அவர் கூறினார். மருந்துகளின் தரத்தை ஆராய்ந்து உறுதிப்படுத்துவதற்கான வசதிகள் தற்பொழுது இலங்கையில் இல்லை.

இருந்தபோதும் ஒளடத சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதும் படிப்படியாக மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் தரங்களை சோதிக்கக் கூடிய ஆய்வுகூடங்களை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய ஓளடத சட்டமூலத்தைக் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் கடும் முயற்சி எடுத்திருந்தார்.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு 13 பேர் நியமிக்கப்படுவர். இந்த அதிகாரசபை மருந்துப் பொருட்களின் இறக்குமதி, விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்த தீர்மானங்களை எடுக்கும். எவருக்கும் தாம் நினைத்தது போன்று மருந்துப் பொருட்களுக்கான விலைகளை இனிமேல் நிர்ணயயிக்க முடியாது. அதிகாரசபை விலை நிர்ணயம் தொடர்பில் குழுவொன்றை அமைத்து எடுக்கும் முடிவுகளுக்கு அமையவே மருந்துப் பொருட்களின் விலை நிர்ணயிக்கப்படும். மருந்துகள் பணம் ஈட்டுவதாக இருந்தாலும் மக்களுக்கு சேவை அளிக்கும் வகையில் இருக்கவேண்டு மென்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும் கூறினார்.

Published by

Leave a comment