காத்தான்குடி: சுனாமியால் முற்றாக அழிவடைந்த காத்தான்குடி தள வைத்தியசாலையானது, நோர்வே செஞ்சிலுவைச் சங்கத்தின் முழுமையான நிதி அனுசரணையில் மிக நவீனமான முறையில் மீளக் கட்யெழுப்பப்பட்டும், கையளிக்கப்பட்டும் பல ஆண்டுகளைக் கடந்து விட்ட போதிலும் இன்று வரை இந்த வைத்தியசாலையை நாடிவரும் பொதுமக்களான நோயாளர்களின் வைத்தியத் தேவைகளை முழுமையாகத் தீர்த்து வைக்க முடியாத கையறு நிலையில் காணப்படுவது வேதனைக்கும், விசனத்திற்கும் உரிய விடயமாகும்.
சுனாமியின்போது மிக மோசமான முறையில் சேதமடைந்த இந்த வைத்தியசாலையை மீளக்கட்டியெழுப்பும் பணியில் அக்காலகட்டத்தில் பல்வேறு இடையூறுகளையும் தனது அரசியல் செல்வாக்கினால் ஏற்படுத்தி வேறோர் இடத்தில் இந்த வைத்தியசாலையை நிர்மாணிக்க முயற்சித்த அன்றைய விமான நிலைய மற்றும் விமான சேவைகள் அதிகாரசபைத் தலைவரும் இன்றைய நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, இன்று இவ்வைத்தியசாலையை தனது ஆதரவாளர்களினதும், அவரது அழைப்பின்பேரில் இவ்வூருக்கு வரும் அரபு நாட்டுப் பிரமுகர்களினதும் கூடாரமாகப் பயன்படுத்தி வருவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்ற போதிலும், இங்கு பொதுமக்களுக்குத் தேவையாகவுள்ள வைத்திய சேவைகளையும், மருந்து மாத்திரைகளின் பற்றாக்குறையையும் போக்குவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ளாதிருந்து வருவது குறித்து பெரும்பாலான பொதுமக்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இவ்வைத்தியசாலையில் இரத்தப்பரிசோதனை செய்வதற்குரிய இயந்திர உபகரணங்களை இவ்வூரிலுள்ள பொது நிறுவனமொன்று அன்பளிப்பாக வழங்கியுள்ள போதிலும், அதற்குத் தேவையான மருந்து வகைகளைக்கூட இவ்வூர்ப்பிறந்தவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா போதிய கவனமெடுத்து பெற்றுக் கொடுக்காதிருந்து வருவதன் காரணமாக கடந்த வாரம் சமூக அக்கறையுள்ள இளைஞர் ஒருவருக்கும், பாரிய நோய் நிவாரண நிதியாக வாராந்தம் பொதுமக்களிடமிருந்து பணம் திரட்டும் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவருக்கும் இடையில் பாரிய முரண்பாடு ஏற்பட்டு அது பொலிஸ் நிலையம் வரை சென்று ஓய்ந்திருப்பதானது, இந்த வைத்தியசாலை தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் விசன எழுச்சிக்கு மிகச்சிறந்ததொரு அண்மைய உதாரணமாகும்.
இந்நிலையில், இந்த வைத்தியசாலையை இப்போதிருக்கும் இடத்திலேயே நிர்மாணிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு அந்த நோக்கத்தை அடையப் பெறுவதில் முன்னணி வகித்தவரும் இதே ஊர்ப் பிறந்தவரான டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் என்பவர் என்பதையும் நாம் மறந்திட முடியாது. அன்றைய கால கட்டத்தில் இந்த வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியாக இருந்து மிக்க சமூகப் பொறுப்புடனும், தனது கடமைப் பொறுப்புடனும் செயற்பட்ட அன்னாரை இப்போதும்கூட பலரும் நன்றியுணர்வுடன் நினைவுபடுத்திப் பேசுவதை அடிக்கடி அவதானிக்கவும் முடிகின்றது.
எனினும், சமீப காலமாக டாக்டர் றிபாஸ் அவர்கள் இந்த வைத்தியசாலை குறித்து எந்தவிதமான அக்கறையுமற்றவர் போல் மௌனமாக இருந்து வருகின்றார். இத்தனைக்கும் அவர் மருத்துவத்துறையில் பல்வேறு பட்டப்பின் படிப்புக்களையும் மேற்கொண்டு சுகாதார அமைச்சில் மருத்துவ சேவை வழங்கல் பிரிவின் மிக உயர்ந்த படித்தரத்திலுள்ள ஒரேயொரு முஸ்லிம் அதிகாரியாகவும் தற்போது இருந்து வருவதாகவும் அறிய முடிகின்றது.
அவரது தொழில்துறையானது தலைநகரமான கொழும்பில் குவிந்துள்ள போதிலும், அவர் பிறந்து, வளர்ந்து, விளையாடி, கல்விகற்று உயர்வடைந்த தாய் மண்ணான காத்தான்குடி, அதனையடுத்துள்ள ஆரையம்பதி மற்றும் பாலமுனை போன்ற கிராமங்களிலுள்ள வைத்தியசாலைகளில் இன்று காணப்படும் வைத்திய சேவைகளை வழங்குவதிலுள்ள குறைபாடுகளைக் களைவதில் கூடிய கவனமெடுக்க வேண்டியது அவசியமும், அவசரமுமாகும் என்பதையே இங்கு நான் அன்னாருக்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.
இன்று காத்தான்குடி வைத்தியசாலையைப் பொறுத்து அரசியல்வாதிகளின் அதிகாரப் பிரயோகமானது பல்வேறு வழிகளில் மூக்கை நுழைத்திருப்பினும் பொதுமக்களுக்குத் தேவையான வைத்திய வசதிகளுக்கும், மருந்து மாத்திரைகளுக்கும் ஏற்பட்டிருக்கக்கூடிய பற்றாக்குறைகளும் அவர்களால் அதே அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்த்து வைக்கப்படுவதில் அசமந்த நிலைமையே காணப்படுகின்றது என்பதுடன், அண்மித்த கிராமமான ஆரையம்பதி வைத்தியசாலையில் அம்பியூலன்ஸ் (நோயாளர் காவு வாகனம்) இல்லாத குறைபாடும், பாலமுனை வைத்தியசாலை சுனாமியின் பின்னர் தரமுயர்த்தப்படாமல் இன்னமும் அதே நிலைமையில் ஒரு ஆரம்ப மருத்துவமனையாகக் காட்சியளிப்பதும் எமது மக்களின் பொதுப்படையான அதிலும் அத்தியாவசிய மருத்துவத் தேவையுடன் தொடர்புடைய விடயமாகும் என்பதனை டாக்டர் றிபாஸ் அவர்கள் தமது கவனத்திற்கு எடுத்துக் கொள்வார் என்றே நம்புகின்றேன்.
எதிர்வரும் 09ம் திகதி சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரி. ஹஸனலி அவர்கள், காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு வருகை தரவுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறியக்கிடைத்துள்ள இவ்வேளையில், டாக்டர். றிபாஸ் அவர்களும் இவ்வூருக்கு வருகைதந்து காத்தான்குடி வைத்தியசாலையின் தேவைப்பாடுகளை இவரும் நேரில் அவதானித்து அமைச்சரிடம் பரிந்துரைத்து தீர்வுகாண முயற்சிப்பது மிகவும் பொருத்தமானதென நினைப்பதுடன், அன்றைய தினத்தில் எத்தகைய வேலைப்பளுக்கள் டாக்டர். றிபாஸ் அவர்களுக்கு இருந்த போதிலும் அவரது பிறந்தக மக்களின் நன்மையைக் கருதி அத்தியாவசிய சுகாதாரத் தேவைகளை அடையாளப்படுத்தி பொருத்தமான செயற்பாட்டு வழிகளைக் கண்டறிந்து தீர்வுகளையடைய இவ்வூர் மக்களின் சார்பில் முன்வைக்கப்படும் இவ்வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளுமாறும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
Published by


Leave a comment