அத்தியவசிய மருந்து தட்டுப்பாடுகளுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை!

12– ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்

வாழைச்சேனை: மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் நிலப்பரப்பு பகுதியையும், ஏறத்தால 95000 வாக்காளர்களையும் கொண்ட கல்குடா தேர்தல் தொகுதியில் பிரதான வைத்தியசாலையாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையே இருந்து வருகின்றது.

நீண்ட வரலாற்றினையும், மக்களுக்கு மிக முக்கிய தேவையாக கருதப்படுகின்ற வைத்திய சேவையினை வழங்கி வரும் இவ் வைத்தியசாலையில் வெளி நோயாளர்களும், குழந்தைகளுக்கும் தேவையாக இருக்கின்ற அத்தியவசிய அடிப்படை மருந்துகள் நீண்ட நாட்களாக தட்டுப்பாட்டில் இருந்து வருதல், வைத்தியர்கள், தாதிமார்கள், சுகாதார சிற்றூழியர்கள் என பரவலான ஆளணி பற்றாக்குறையும், வைத்தியசாலையின் பிண அறையின் (MORTUARY) குளிரூட்டியானது நீண்ட நாட்களாக செயலிழந்து காணப்படுதல், இவ்வாறான குறைபாடுகளுக்கு உடனடி தீர்வினை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேற்கொள்ளாமல் இருத்தல் போன்ற விடயங்கள் சம்பந்தமான விமர்சனங்கள் பொதுமக்களாலும், வைத்தியசலை வட்டாரத்தினாலும் சிதறியடிக்கப்பட்டுக் கொண்டிருப்பதனை பிரதேசத்தில் பரவலாக அவதானிக்கூடியதாக இருக்கின்றது.

மேலும் வெளி நோயாளர்களுக்கும், குழந்தைகளுக்கும் அத்தியவசியமாக தேவைப்படுகின்ற பரசிட்டமோல் மற்றும் பரசிட்டமோல் சிரப் போன்றவைகளுக்குக் கூட பல நாட்களாக தட்டுப்பாடு நிலவுவதாகவும், பிரதேசத்தில் டெங்கு நுளம்புகளின் அதிகரிப்பினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் இந்த காலகட்டத்தில் அவர்களுக்கான மருந்துகளுக்கும் தட்டுப்பாடே இருக்கின்றது. மிக நீண்ட காலமாக பிண அறையின் குளிரூட்டி பழுதடைந்து காணப்படுவதனாலும், வைத்தியசாலைக்கு கட்டாயமாக இருக்க வேண்டிய சட்டவைத்திய அதிகாரி இன்னும் நியமிக்கப்படாமல் இருப்பதனால் இறந்தவர்களின் உடல்கள் 60கிலோமீற்றருக்கு அப்பால் இருக்கும் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு சட்ட வைத்திய அறிக்கையினை பெற்றுக் கொள்வதற்காக கொண்டு செல்லப்படுவதனால் குறைந்தது இரண்டு நாட்களாவது தேவைப்படுகின்றது உறவினர்களிடத்தில் இறந்தவர்களின் உடல்களை கையளிப்பதற்கு.

12

இதற்கு உதாரணமாக அன்மையில் வாழைச்சேனையில் கொலை செய்யப்பட்ட முஸ்லிம் பெண்மனியின் உடலானது பொலன்னறுவைக்கு கொண்டு செல்லப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிற்பாடு பழுதடைந்த நிலையிலேயே உறவினர்களிடத்தில் கையளிக்கப்பட்டிருந்தது. மேலும் கடமையில் இருந்த பெண் மகப்பேற்று நிபுணர் மாறுதல் பெற்று சென்று இரண்டு கிழைமைகள் கடந்தும் இன்னும் அதற்கான வெற்றிடம் நிறப்பப்படாமலே இருந்து வருகின்றது. இதனால் கர்ப்பிணி பெண்கள் பெரும் அசெளகரியங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

அது மட்டுமல்லாமல் 29 வைத்திய அதிகாரிகள் கடமையாற்றிய குறித்த வைத்தியசாலையில் தற்பொழுது 19 வைத்திய அதிகாரிகளே கடமையில் உள்ளதாகவும். இதனால் வெளிநோயளர்கள் உட்பட அனைத்து நோயாளர்களும் மிகவும் கஸ்டத்துக்கு மத்தியில் பாராமரிக்கப்படுவதாகவும். குறித்த வைத்தியசாலையின் தரத்தில் இருக்கும் மாவட்டத்தின் களூவாஞ்சிக்குடி வைத்தியசாலையானது குறைபாடுகள் அற்ற நிலையில் உள்ளது ஒரு புறமிருக்க, இதே தரத்தில் இருக்கும் இன்னுமொறு வைத்தியசாலையான அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் 50க்கும் மேற்பட்ட வைத்திய அதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ஒர் விமர்சனம் இருந்து வருகின்றது.

இவ்வாறான விமர்சனங்களினதும், குற்றச்சாட்டுக்களினதும் உண்மை நிலையினை அறிந்து கொள்ளும் பொருட்டு நேற்று காலை குறித்த வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கான விஜயத்தினை மேற்கொண்ட போது வைத்தியசாலையின் அத்திகட்சகர் நோய்வாய்பட்டு விடுமுறையில் உள்ளதனால் அவருக்குப்பதிலாக தற்காலிகமாக பதவியில் உள்ள பொது சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் சாகிஸ்வரனையும், குழந்தைகளுக்கான வைத்திய நிபுணர் வேலுப்பிள்ளை பிரேமினி ஆகியோரை மிக முக்கியமாக சந்தித்து இது சம்பந்தமான கேள்விகளை தொடுத்ததுடன், மருந்தகம், மருந்தக களஞ்சியம், வெளி நோயாளர் பிரிவில் கடமையாற்றும் வைத்தியர்கள், அவசர சிகிச்சை பிரிவு, வைத்திய சாலையின் நிருவாகப் பிரிவு போன்ற இடங்களுக்கும் சென்று பார்வையிட்டு கலந்துரையாடியதன் அடிப்படையில் உண்மையில் பல குறைபாடுகள் உள்ளதனை அவர்களுடைய விடைகளில் இருந்து பெற்றுக் கொள்ள முடிந்தது.

இவ்வறான விமர்சனங்கள் இருக்கின்ற நிலையில் குறித்த வைத்தியசாலையின் மருந்தக களஞ்சியத்தில் முக்கிய அத்தியவசிய மருந்துகள் இருக்கும் இடங்கள் வெற்றிடமாக இருந்ததனையும் அவதானிக்க கூடியதாக இருந்தது. இவ்வாறான நிலைமை தொடர்வதற்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சதுர்முகம்(RDHS) உரிய நடவடிக்கை எடுக்கதவருகின்றார் என்ற விமர்சனம் சம்பந்தமாக வைத்தியசாலையின் தற்காளிக அத்திகட்சகராக இருக்கும் பொது சத்திர சிகிச்சை நிபுணர் சாகிஸ்வரனிடம் வினவிய போது.. மேற்குறிப்பிட்ட குறைபாடுகள் இருப்பதனை ஏற்றுக் கொண்ட அவர், இதற்கு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் சதுர்முகம் (RDHS) மீது காரணம் கூற முடியாது என மறுத்ததோடு, வைத்தியர் சதுர்முகம் குறித்த வைத்தியசாலையின் குறைகளை மிகக் கூடிய விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் தன்னுடடன் ஒரு கிழமைக்கு முன்பாக ஆக்க பூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டதாக குறிப்பிட்டார்.

இவ்விடயம் சம்பந்தமக குழந்தைகளுக்கான மகப்பேற்று நிபுணராக கடமையாற்றும் வைத்திய வேலுப்பிள்ளை பிரேமினியிடம் வினவிய போது பிராந்திய சுகாதார பணிப்பாளர் சம்பந்தமாக கருத்து தெரிவிக்க மறுத்த அவர், குறித்த வைத்தியசாலையில் இடம்பெற்று வருகின்ற குறைபாடுகளுக்கெள்ளாம் முக்கிய தீர்வாக வைத்திய சாலையினை தேசிய வைத்தியசாலைகளுக்கு கீழ் இணைக்கப்படுமாயின் உடனடி தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என்ற கருத்தினை ஆணித்தரமாக கூறினார்.

இது சம்பந்தமான சரியான தகவலினை பெற்றுகொள்ளும் பொருட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சதுர்முகமினை இன்று புதன்கிழமை (04.03.2015) காலை 8.30 மணிக்கு (0652222863) எனும் தொலை பேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொண்ட போது வைத்தியர் சதுர்முகம்(RDHS) அத்தியவசிய மருந்துகளுக்கான குறைபாடுகள் நிலவுவதை மறுத்ததோடு, அவ்வாறு மருந்துத் தட்டுப்பாடுகள் இருக்குமாயின் மாவட்டத்தில் இருக்கும் களஞ்சிசாலைக்கு தகவல் கிடைத்திருக்கும் என்றும், அவ்வாறு கிடைகப்பெற்றிருந்தால் அது சம்பந்தமான அறிக்கை கிடைத்திருக்கும் ஆனால் தனக்கு எதுவும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும் வைத்தியசலையில் ஆளணிப் பற்றாக்குறை நிலவுதாக ஏற்றுக் கொண்ட வைத்தியர் சதுர்முகம்(ஆ.டி.எச்.எஸ்) இருக்கின்ற வைத்தியர்களை கொண்டு தற்போது முடிந்தளவு நோயாளர்களை சமாளித்துக்கொள்ள முடியும் எனக் கூறியதோடு, வைத்தியர்களின் நியமனங்கள் அரசாங்கத்தின் முடிவின் படியே இடம்பெற்று வருகின்றது எனத் தெரிவித்தார். அத்தோடு தேசிய வைத்தியசாலைகளின் கீழ் குறித்த வைத்தியசாலை இணைக்கப்படுமாயின் அதிக நன்மைகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என்ற கருத்தினையும் கூறினார்.

எது எவ்வாறாக இருந்தாலும் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு முக்கிய தேவையாக கருதப்படுகின்ற வைத்திய சேவையினை குறைபாடுகள் அற்ற நிலையிலும், பூரண திருப்தியுடனும், மிக விரைவில் வழங்கப்பட வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டும், பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வுகள் கிடைக்க வேண்டும் என்ற முடிவினை கடந்த அரசாங்கத்தில் சுகாதாரா அமைச்சராக இருந்து தற்போது நல்லாட்சிக்கான புதிய மாற்றத்துடன் ஜனாதிபதியாக உள்ள அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் கவனத்துக்கும், கெளரவ சுகாதார அமைச்சரின் கவனத்துக்கும் இப்பிரச்சனைகளை இணைய நாளிதல் சார்பாக தெரிவிப்பதலில் நேரடியாகச் சென்று இப்பிரச்சனைகளை கேட்டறிந்தவன் என்ற அடிப்படையில் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

Published by

Leave a comment