கிழக்கு மாகாண சபையில் மீண்டும் அரசியல் நெருக்கடி

Eastern_Province_Flag_(SRI_LANKA)[1]திருகோணமலை: கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கு வழங்கிய ஆதரவை ஒன்பது உறுப்பினர்கள் வாபஸ் பெற்றுக்கொள்வதாக நேற்று அறிவித்துள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த 09 உறுப்பினர்களே தாங்கள் ஆதரவை வாபஸ் பெறுவதாக நேற்று அறிவித்ததோடு, ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோவிடம் வாபஸ் பெறும் கடிதத்தையும் கையளித்துள்ளதாகத் தெரிவித்தனர்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்காக மாகாண சபை உறுப்பினர் 20 பேர் ஆதரவளிப்பதாக எழுத்து மூலம் உறுதியளித்திருந்தனர். இதனையடுத்து கிழக்கு மாகாண முதலமைச்சராக நசீர் அஹமட் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

என்றாலும் 07 ஆசனங்களைக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் தன்னிச்சையாகச் செயற்படுவதாகக் கூறியே ஐ.ம.சு.மு. உறுப்பினர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.எஸ். உதுமாலெவ்வை, விமலவீர திசாநாயக்க, எம்.எல்.ஏ. அமீர், சிவனேசதுரை சந்திரகாந்தன், புஸ்பகுமார் (இனியபாரதி), வீரசிங்க, பிரியந்த பத்திரன, ஜயசேன, ஜயந்த ஆகிய ஒன்பது பேருமே ஆதரவை வாபஸ் பெறுவதாக சத்தியக்கடதாசியைக் கையளித்துள்ளவர்களாவர். ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ இதனை ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

37 பேரைக் கொண்ட கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 11 ஆசனங்களும், முஸ்லிம் காங்கிரஸ¤க்கு 07 ஆசனங்களும், ஐ.ம.சு.முவுக்கு 14 ஆசனங்களும், ஐ.தே.க. 04 ஆசனங்களையும், தேசிய சுதந்திர முன்னணி 01 ஆசனத்தையும் கொண்டுள்ளன.

இதற்கமைய ஐ.ம.சு.மு.வில், தேசிய காங்கிரஸ், தமிழ் மக்கள் விதலைப் புலிகள், அ.இ.மக்கள் காங்கிரஸ், சுதந்திரக் கட்சி ஆகியன அங்கம் வகிக்கின்றன.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

அரசியல் கட்சிகள் இணைந்து செய்து கொள்ளப்படும் ஒப்பந்தங்கள் கெளரவமான முறையில் நிறைவேற்றப்பட வேண்டும். இந்த விடயத்தில் இரட்டை வேடம், கழுத்தறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது நம்பிக்கைத் துரோகமாகும் என முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெவ்வை குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவி விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு கேட்டபோது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்கள் சத்தியக் கடதாசி வழங்கி கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு ஆதரவு வழங்கினோம்.

எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேம ஜெயந்த ஆகியோர் முன்னிலையில் சென்ற 26.01.2015, 05.02.2015 திகதிகளில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் (கொழும்பு) நடைபெற்ற கூட்டங்களில் கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சராக சகோதரர் ஹாபீஸ் நசீர் அவர்களைத் தெரிவு செய்து சத்தியப்பிரமாணம் முடிந்தவுடன் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றி விட்டு வெற்றிடமாகவுள்ள சுகாதார அமைச்சு, விவசாய அமைச்சு தொடர்பாக கொழும்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒன்று கூடி இறுதி தீர்மானம் எடுப்பதாகவும், கல்வி, காணி அமைச்சர், வீதி அபிவிருத்தி அமைச்சர், சபையின் தவிசாளர் ஆகியோர் தங்கள் பதவிகளில் தொடர்ந்து கடமை புரிவார்கள் எனவும் தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் 14 உறுப்பினர்கள் இணைந்து சத்தியக் கடதாசி வழங்கியதன் ஊடாகவே கிழக்கு மாகாண புதிய முதலமைச்சராக ஹாபீஸ் நkர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

சென்ற 09.02.2015 ஆம் திகதி புதிய முதலமைச்சர் தலைமையில் திருகோணமலை சாயபுலூ ஹோட்டலில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபையின் 01வது ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய புதிய முதலமைச்சர், அமைச்சரவையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 01 அமைச்சர் பதவியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 03 அமைச்சும், சபை தவிசாளர் பதவியும், பிரதி தவிசாளர் பதவியும் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

புதிய அமைச்சரவையில் உதுமாலெவ்வை அமைச்சருக்கு பதவி வழங்கக் கூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல். நசீர், ஏ.எல்.எம். தவம் போன்றோர் வேண்டுகோள் விடுப்பதாகவும், அதனை மீறி உதுமாலெவ்வை அமைச்சருக்கு அமைச்சுப்பதவி வழங்கினால் முதலமைச்சருக்கு தாங்கள் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம் எனத் தெரிவித்துள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

புதிய முதலமைச்சர் 05 அமைச்சுக்களின் வரவு செலவுத் திட்டத்தினை தானே சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்தார். நாங்களும் தாமதிக்காது வரவு – செலவுத் திட்டத்தினை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு உடன்பட்டோம்.

வரவு செலவுத் திட்டம் சென்ற 10.01.2015 ஆம் திகதி கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளின் ஆதரவுடன் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஏற்கனவே ஒப்பந்தம் செய்தபடி புதிய முதலமைச்சர் பதவி ஏற்று வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டும் அமைச்சரவை நியமனம் தொடர்பாக எந்த விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களின் சத்தியக் கடதாசி ஊடாக முதலமைச்சர் பதவியைப் பெற்றுக்கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு மாறாக நயவஞ்சகத் தன்மையான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வந்தது.

கிழக்கு மாகாணத்தில் உறுப்பினர்களாக எங்களை மக்கள் நியமித்திருப்பது அவர்களுக்கு சேவை செய்வதற்கே. அதனை விடுத்து எனக்கு அமைச்சுப் பதவி வேண்டும். அவருக்கு அமைச்சுப் பதவி வேண்டும் என்று கேட்பதில் நியாயம் இருப்பதாக எனக்கு தெரிய வில்லை.

அத்துடன் கிழக்கு முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளவரிடம் எதுவித பிழையும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என கிழக்கு மாகாண கல்வி மற்றும் காணி தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஆரியவதி கலபத்தி தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சருக்கு வழங்கியிருந்த ஆதரவை வாபஸ்பெறுவதாக அறிவித்துள்ளமை தொடர்பாக கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறிப்பிட்ட 6 பேர் தமது ஆதரவை விலக்கிக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ள விடயம் தமக்கு தெரியாது என்று கூறிய அமைச்சர் ஆரியவதி கலப்பத்தி மக்கள் என்னை தெரிவு செய்தது அவர்களுக்கு சேவை செய்வதற்கே. எனக்கு கிடைத்துள்ள அமைச்சுப் பொறுப்புகளைக் கொண்டு அவர்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதே எனது நோக்கம் என்றும் கூறினார்.

திருகோணமலையிலுள்ள அமைச்சு அலுவலகத்தில் தமது அமைச்சுப் பொறுப்புக்களை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Published by

Leave a comment