கண்டி: சமூகத்தில் உள்ள சிக்கலான பிரச்சினைகளை தீர்ப்பதில் இளைஞர்களை உள்வாங்குவது இன்றியமையாததாகும். சமூக மாற்றத்தை துரிதப்படுத்தும் கலைத்துவமிக்க ஆற்றல் இளைஞர்களிடமே அதிகம் உள்ளது என பேராதனைப் பல்கலைக்கழக தொடர்பாடல்துரை பேராசிரியர் டப்ளிவ் வணிகசுந்தர தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்கள் அரங்கச் செயற்றிட்டத்தின் பிராந்திய பங்காளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை மக்கள் அரங்கச் செயற்றிட்டத்தை அபிவிருத்திக்கான ஊடகநிலையம் கிழக்கு, வடமத்திய, மத்திய மாகாண கல்வியமைச்சுகள் மற்றும் மாகாணக் கல்வித் திணைக்களங்கள் என்பனவற்றுடன் இணைந்து அமுல்படுத்துகின்றது.
மக்கள் அரங்கத்தின் வாயிலாக அகிம்சை, சகிப்புத்தன்மை, உரையாடல், பன்மைத்துவம், பல்வகைமை மற்றும் சமூகப் பிரச்சினைகளை தீர்த்தல் ஆகிய விழுமியங்களைச் சமூகமயப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும் கருத்துத் தெரிவித்த பேராசிரியர் வணிகசுந்தர ‘சமூக மாற்றம் என்பது மிகவும் மந்தமாக இடம்பெறும் ஒன்றாகும். அதனை துரிதப்படுத்துவற்கு விஞ்ஞான பூர்வமான அணுகுமுறைகள் தேவை. கலை மற்றும் ஊடக வடிவங்களை சமூக மாற்றத்தில் பயன்படுத்தும் போது, அவற்றின் விஞ்ஞானத் தன்மை பற்றிய பற்றிய பிரக்ஞை படைப்பாளர்களிடம் இருப்பது கட்டாயமாகும். இலங்கையில் வாழும் மக்கள் மிகவும் புரிந்துணர்வுடனும் ஒற்றுமையாகவும் வாழ்வதாக கூறுகின்றனர். ஆனாலும் அதனை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில், ஒற்றுமையும் சகவாழ்வும் ஒருவருடைய வித்தியாசத்தை ஆழமாகப் புரிந்துகொள்ளாதவரை ஏற்படுவதில்லை.
வித்தியாசங்கள் பற்றிய பரஸ்பரம் மிகக் குறைந்த அறிவு மக்களிடம் காணப்படுகின்றது. கலையோ, ஆக்க இலக்கிய படைப்போ இத்தகைய பண்பாட்டு வரட்சியை ஏற்படுத்த வேண்டும். இலங்கை மக்கள் அரசாங்க செயற்றிட்டத்திற்கு இத்தகைய இலக்கும் ஆற்றலும் உள்ளது என்றார்.
இலங்கை மக்கள் அரசாங்கச் செயற்றிட்டத்திற்காக 36 இளைஞர் யுவதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த தலா 12 பேர் அடங்குவர்.
செயற்றிட்டத்தின் ஆரம்ப கட்டப் பயிற்சிகள் யாவும் அண்மையில் நிறைவுபெற்றுள்ளன. பயிற்சிகள் முடிவில், 20 மக்கள் அரங்கப் பிரதிகள் தயாரிக்கப்பட்டு 30 பாடசாலைகளில் அரங்கேற்றம் தற்போது இடம்பெற்று வருகின்றது. கண்டி, திருகோணமலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் அரங்கேற்றம் இடம் பெற்று வரகின்றன.
இலங்கை மக்கள் அரங்கச் செயற்றிட்டம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிஸாம் ‘பாடசாலை செயற்பாடுகளுடன் விழுமியங்களை நாடகங்கள் மற்றும் கலைகள் வாயிலாக வழங்கும் போது அவை இலகுவில் சமூகத்தைச் சென்றடைகின்றன. வித்தியாசத்தை அறிந்துகொள்ளுதல், அவற்றுக்கு மதிப்பளித்தல், சகிப்புத்தன்மை என்பனவற்றை போதித்து, வன்முறையின் தீமையை தெளிவுபடுத்துவது ஒரு சமூகக் கடமையாகும். இத்தகைய குணாம்சங்களை மக்களிடம் கொண்டு செல்லும் ஆற்றல் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் உண்டு என்றார். இதே கருத்தினை கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் விஜயானந்த மூர்த்தி அவர்களும் வலியுறுத்தினார்.
அரங்கேற்றமானது ஜனவரி 19ம் திகதி முதல பெப்ரவரி 26 ஆம் திகதி வரை கண்டி, பொலன்னறுவை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றது.
மக்கள் அரங்கச் செயற்றிட்டம் தொடர்பான வதிவிடப் பயிற்சிகளில் கலந்துகொண்ட மூவின இளைஞர் யுவதிகள் ஏனைய இனம் மற்றும் மதத்தை சார்ந்தவர்களைப் பற்றி பரஸ்பரம் மிக குறைவான புரிதல் இருப்பதை ஏற்றுக் கொண்டனர். சிலர் தமது கல்விச் சூழல், சமூகம், குடும்பம் ஆகியவற்றிலிருந்து ஏனைய சமயம், இனத்தை சேர்ந்தவர்களைப் பற்றி மிகவும் தவறான புரிதல்கள் புகட்டப்படுவதாக சுட்டிக்காட்டினார். வித்தியாசமான சமூகங்களைச் சேர்ந்தவர்களுடன் தகராறுகள் இல்லாவிட்டாலும் அவர்களுடன் எத்தகைய தொடர்புகளும் இல்லாதிருப்பது ஒரு பிரச்சினையாக இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
கந்தளாயை சேர்ந்த தரிந்து பிரசாத் என்பவர் ‘முஸ்லிம்களை எனக்கு சற்றும் பிடிக்காது. எங்கு கண்டாலும் அவர்கள் மீது எனது வெறுப்பை வெளிப்படுத்தத் தவறுவதில்லை. நான் ஒரு நூறு வீதம் சுவேசியாகவே வாழ்ந்தேன். இப்போது அது எத்தகைய ஆபத்தானது தவறானது என்பதை உணர்ந்து கொள்கின்றேன் என்றார்.
மட்டக்களப்பைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் பிரச்சினைகளுக்கு தீர்வு வன்முறை என்றுதான் எனக்குத் தெரியும். நான் வன்முறையின் வாயிலாகவே பிரச்சினைகளுக்கு தீர்வும் காண்பேன். சகிப்புத்தன்மை, மற்றும் அகிம்சை ஆகிய நற்பண்புகளால் உலகில் எத்தகைய முரண்பாட்டையும் வெற்றிகொள்ள முடியும் என்பதை இப்போது தெளிவாக உணர்கின்றேன் என்றார்.
சம்மாந்துறையைச் சேர்ந்த இஹ்சான் என்பவர் ‘நான் அதிகம் வன்முறையை பயன்படுத்தும் ஒருவன். இப்போது வழக்கு பொலிஸ் என்று செல்கின்றேன். என் கையால் ஒருவருடைய உயிரையும் பறித்துள்ளேன். புலரை அடித்து காயப்படுத்தியுள்ளேன். மக்கள் அரங்கச் செயற்றிட்டம் எனக்குள் ஒரு புதிய உலகத்தை உருவாக்கியுள்ளது என்றார்.
Published by



Leave a comment