கெய்ரோ: பலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பை தீவிரவாதக் குழுவாக எகிப்து நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது. வடக்கு சினாயில் ஆயுதக் குழுக்களுக்கு உதவுவதாக குற்றம் சாட்டியே கடந்த சனிக்கிழமை கெய்ரோ நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவையும் ஒரு மாதத்திற்கு முன் எகிப்தின் மற்றுமொரு நீதிமன்றம் தீவிரவாதக் குழுவாக அறிவித்திருந்தது. எகிப்து முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் கிளையாக இயங்கும் ஹமாஸ் அமைப்பு, காசா பகுதியில் ஆட்சியில் உள்ளது. முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த ஜனாதிபதி மொஹமட் முர்சி கடந்த 2013 ஆம் ஆண்டு இராணுவ சதிப்புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்டதன் பின்னர் அந்த அமைப்பும் எகிப்தில் தீவிரவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
“இந்த அமைப்பு எகிப்து பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்தது மற்றும் நாசவேலையில் ஈடுபட்டது எந்த ஐயமும் இன்றி தெளிவாகிறது” என்று நீதிபதி முஹமது அல் சயித் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்ப்புக்கு கண்டனம் வெளியிட்டிருக்கும் ஹமாஸ் தலைமை, இது இஸ்ரேல் ஆக்கிரமிப்பை பாதுகாப்பதாக விமர்சித்துள்ளார். இந்த தீர்ப்பு அதிர்ச்சியையும் ஆபத்தையும் கொண்டது என்று குறிப்பிட்டிருக்கும் ஹமாஸ், “இது ஹமாஸூக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என்று தெரிவித்துள்ளது.
“இது ஆக்கிரமிப்பாளர்கள் நண்பர்கள் என்றும் பலஸ்தீனர்கள் எதிரிகள் என்றும் சமன்பாட்டை மாற்றி அமைக்கிறது” என்று ஹமாஸ் பேச்சாளர் சமி அபூ சுஹ்ரி உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். எகிப்து நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக காசாவில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இஸ்ரேல்-ஹமாஸ் பிரச்சினைகளில் எகிப்து மத்தியஸ்தம் வகிக்கும் பிரதான நாடாகும். அத்துடன் இஸ்ரேல்-பலஸ்தீன அமைதி மற்றும் பாதுகாப்பு முயற்சிகளிலும் எகிப்து பிரதான பங்கு வகித்து வருகிறது. சினாய் தீபகற்பத்தில் எகிப்து பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களுடன் தொடர்புபடுத்தி ஹமாஸ் அமைப்பு மீது நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட இரு வழக்குகள் மீதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாக அந்நாட்டு நீதித்துறை வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு முர்சி பதவி கவிழ்க்கப்பட்டது தொடக்கம் சினாய் பகுதியில் பொலிஸார் மற்றும் படையினரை இலக்குவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
காசாவில் ஆதிக்கம் செலுத்தும் ஹமாஸ் கடந்த ஆண்டு இஸ்ரேலுடன் 50 நாள் யுத்தத்தில் ஈடுபட்டது. இஸ்ரேலை நிராகரிக்கும் ஹமாஸ் அதனை அழிப்பதை கொள்கையாகக் கொண்டுள்ளது.
ஏற்கனவே ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் தீவிரவாதக் குழுவாக அறிவித்துள்ள நிலையில் எகிப்து அந்தப் பட்டியலில் நான்காவது நாடாக இடம்பிடித்துள்ளது.
1987 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஹமாஸ் அமைப்பு 2006 ஆம் ஆண்டு இடம் பெற்ற பலஸ்தீன பாராளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டியது. போட்டி அமைப்பான பத்தாஹ்வுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து 2007 ஆம் ஆண்டில் காசாவில் அதிகாரத்தை கைப்பற்றியது.
Published by
![Hamas6[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/07/hamas61.png?w=147&h=150)
Leave a comment