பிரிஸ்பேன்: சிம்பாப்வே அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில், இன்று நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில், சிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகள் மோதின.
இதில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா, துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு நசிர் அகமது (1), அகமது ஷசாத் (0) மோசமான தொடக்கம் கொடுத்தனர்.
பின் இணைந்த ஹாரிஸ் சோகைல், அணித்தலைவர் மிஸ்பா ஜோடி நிதானமாக ஓட்டங்கள் சேர்த்தது. 3வது விக்கெட்டுக்கு 54 ஓட்டங்கள் சேர்த்த போது ஹரிஸ் சோகைல் (27) ஆட்டமிழந்தார்.
பின்னர் நிதானமாக ஆடிய மிஸ்பா அரைசதம் கடந்தார். இவருடன் கைகோர்த்த உமர் அக்மல் (33) நிதானமாக விளையாடி வந்த நிலையில் வில்லியம்ஸ் பந்தில் பவுல்ட் ஆனார். இவரை தொடர்ந்து களமிறங்கிய அணியின் மூத்த வீரரான அப்ரிடி தான் சந்தித்த 2வது பந்திலே வில்லியம்ஸ் பந்தில் டக்-அவுட் ஆக நடையை கட்டினார்.
அடுத்து வந்த சோஹிப் மக்சூட் (21) நிலைக்கவில்லை. 155 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டை இழந்த பாகிஸ்தான் அணி இக்கட்டான நிலையில் இருந்தது.
பின்னர் மிஸ்பாவுடன் கைகோர்ந்தார் வஹாப் ரியாஸ். இருவரும் அணியின் ஓட்டங்களை உயர்த்த போராடினர். ஒரு வழியாக பாகிஸ்தான் அணி 200 ஓட்டங்களை தொட்டது.
அணி 202 ஓட்டங்கள் எடுத்த போது அணித்தலைவர் மிஸ்பா (73) ஆட்டமிழந்தார். சொஹாலி கானுடன் ஜோடி சேர்ந்து விளையாடிய வஹாப் ரியாஸ் அணியின் ஓட்டங்களை கடைசி நேரத்தில் சற்று உயர்த்த போராடினார்.
இதனால் பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 235 ஓட்டங்களை குவித்தது. வஹாப் ரியாஸ் (54) அரைசதத்துடனும், சொஹாலி கான் 6 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
ஜிம்பாப்வே சார்பில் டென்டாய் சட்டாரா 3 விக்கெட்டுகளையும், வில்லியம்சன் 2 விக்கெட்டுகளையும், தவண்டா, சிக்கந்தர் ராஜா, தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் 236 ஓட்டங்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய சிம்பாப்வே அணி கடைசி வரை வெற்றி பெற போராடியது. 215 ஓட்டங்கள் எடுத்த நிலையில் 49.4 ஓவர்களில் ஜிம்பாப்வே அனைத்து விக்கெட்டையும் இழந்து சுருண்டது.
இதனால் பாகிஸ்தான் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்களான சிபாபா (9), சிக்கந்தர் ராஜா (8) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தாலும், மாசாகாட்சா (29), டெய்லர் (50), வில்லியம்ஸ் (33), சிக்கும்புரா (35) ஆகியோர் ஜிம்பாப்வே அணியை வெற்றி பெற வைக்க போராடினர்.
பாகிஸ்தான் தரப்பில், மொகமட் இப்ரான், வஹாப் ரியாஸ் தலா 4 விக்கெட்டுகளையும், ரொஹட் அலி 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். வஹாப் ரியாஸ் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான கடந்த போட்டிகளில் பாகிஸ்தான் படு தோல்விகளைச் சந்தித்திருந்ததால், பாகிஸ்தானில் தற்போதய பாகிஸ்தான் அணிக்கு எதிராக பல புரட்சிகளை இரசிகர்கள் மேற்கொண்டிருந்தனர். கிரிக்கட் அணிக்கும், அதன் நிர்வாகத்திற்கும் மக்களால் அழுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில், 2015 உலகக் கிண்ண போட்டிகளில் சிம்பாப்வேயிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தனது முதல் வெற்றியை பதிவுசெய்கிறது.
Published by


Leave a comment