சு.கவை பிளவுபடுத்தும் ஐ.தே.கவின் திட்டம் ஒருபோதும் பலிக்காது

121209175039_slfp_sri_lanka_304x171_bbc_nocredit[1]கொழும்பு: பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.மு.வின் வெற்றிக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரசாரம் மேற்கொள்வது உறுதி. சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் பெற ஐ.தே.க. பொய்யான பிரசாரங்கள் செய்வதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாகாண சபை இளம் உறுப்பினர்கள் நேற்று தெரிவித்தனர்.

பிரதமர் பதவியோ அமைச்சு பதவிகளையோ விட கட்சியின் வெற்றியே பிரதானமானது என்று குறிப்பிட்ட அவர்கள், தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர் தகுதியானவர்களை உயர் பதவிகளுக்கு நியமிக்க முடியும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபை இளம் உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று கோட்டை சோலிஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த மாகாண சபை சு.க. உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிகா குமாரதுங்க ஆகியோரும் ஒரே மேடையில் பிரசாரம் செய்து சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐ.ம.சு.மு. அரசாங்கமொன்றை உருவாக்க இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த தென் மாகாண சபை உறுப்பினர் பசந்த யாப்பா அபேவர்தன,

சு.கவை துண்டாக்க சிலர் முயற்சி செய்கின்றனர். நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் சு.காவை விரும்புகின்றனர். இதனால் எமது கட்சியினருக்கிடையில் பிளவு ஏற்படுத்த முயற்சி நடைபெறுகிறது. சகல சிரேஷ்ட தலைவர்களையும் ஒன்றிணைந்து பொதுத் தேர்தலில் எமது அர்சாங்கமொன்றை உருவாக்க வேண்டும். எதிர்வரும் பொதுத் தேர்தலில் தோல்வியடைவதை உணர்ந்துள்ளதால் எமது கட்சியில் பிளவு ஏற்படுத்த முயல்கின்றனர் என்றார்.

சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் பிரபாதி அல்விஸ், மக்கள் வாக்களித்த நோக்கத்தை இந்த அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளது. முறையான திட்டமின்மையே அதற்குக் காரணம். நல்லது நடந்தால் ஐ.தே.க. ஆட்சி தவறு நடந்தால் அதற்குப் பொறுப்பு ஜனாதிபதி இத்தகைய நிலையே காணப்படுகிறது என்றார்.

வடமேல் மாகாண சபை உறுப்பினர் பியுமால் ஹேரத், ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன பெற்ற வெற்றி தமது வெற்றி என ஐ.தே.க கருதுகிறது. ஆனால், பாராளுமன்றம், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைகளின் கூடுதல் அதிகாரம் எமக்கே இருக்கிறது. 100 நாள் திட்டத்திற்கு நாம் ஒத்துழைப்பு வழங்கினாலும் அது பூரணமடையவில்லை. அடுத்த தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம் என்றார். இந்த ஊடக மாநாட்டில் மேலும் பல மாகாண சபை உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

Published by

Leave a comment