காத்தான்குடி: காத்தான்குடி ஊர்வீதி வீதி அபிவிருத்திக்காக உடைக்கப்பட்ட வீட்டுச் சுவர்கள் உடனடியாக அமைத்துத் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) மற்றும் ஐக்கிய தேசிய கட்சி (UNP) ஏற்பாட்டில் காத்தான்குடி – 6 மஸ்ஜிதுல் ஹுதா சின்னப்பள்ளிவாயல் முன்றலில் நேற்று (24.02.2015) நடைபெற்றது. இதன்போதே வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர் பத்மராஜா அவர்களினால் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலின்போது மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர் பத்மராஜா, மேற்படி வீதி அமைப்பிற்குப் பொறுப்பான பொறியியலாளர் லிங்கேஸ்வரன் மற்றும் இவ்வீதி அமைப்பைப் பொறுப்பேற்றுள்ள முக்கிய ஒப்பந்தக்கார நிறுவனத்தின் பொறுப்பாளர் ஆகியோருடன் NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான், அதன் தேசிய அமைப்பாளர் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் MAHM. மிஹ்ழார், NFGGயின் தலைமைத்துவசபை உறுப்பினர் MACM. ஜவாஹிர், UNPயின் காத்தான்குடி அமைப்பாளர் HMM.முஸ்தபா, அதன் உறுப்பினர் KM. அலியார் உட்பட சுவர்கள் உடைக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
ஊர்வீதியை புதிதாக அமைக்கின்றபோது அதனை அகலப்படுத்தும் முகமாக பெரும் எண்ணிக்கையான வீட்டு சுவர்கள் உடைத்து அகற்றப்படுத்தப்பட்டிருந்தன. இதுபோன்ற வீதி அபிவிருத்தியின்போது சுவர்கள் உடைக்கப்பட்ட கடந்தகால சந்தர்ப்பங்களில் அவை அரசாங்க நிதி மூலம் மீளவும் அமைத்துக் கொடுக்கப்படவில்லை என்பது பொதுமக்கள் மீது திணிக்கப்படும் பெரும் சுமையாக இருந்தது. அது போலவே ஊர்வீதி அபிவிருத்திப் பணிகளுக்கு உடைக்கப்பட்ட சுவர்களும் கூட மீளவும் அமைத்துக் கொடுக்கப்படும் என்ற விடயம் உறுதியளிக்கப்பட்டிருக்கவில்லை.
இதனைக் கருத்திற்கொண்டு NFGG-UNP பிரதிநிதிகள் கடந்த 23.02.2015 அன்று RDAயின் உயர் அதிகாரிகளுடன் விஷேட சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இந்த சந்திப்பின்போது இது தொடர்பில் NFGG – UNP பிரதிநிதிகள் வலியுறுத்தியதற்கு அமைவாக தற்போது இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஊர்வீதியில் உடைக்கப்பட்ட சுவர்கள் எதுவித தாமதமும் இன்றி உடனடியாக அமைத்துக் கொடுக்கவேண்டும் என்ற விடயத்தினை NFGG – UNP பிரதிநிதிகள் வலியுறுத்தியதன் விளைவாக அதற்கான உத்தரவாதம் இப்போது கிடைத்துள்ளது.
காத்தான்குடியில் தற்போது நடைபெறும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளில் NFGG – UNP கூட்டாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment