காத்தான்குடி: புதிய காத்தான்குடி அப்ரார் பகுதியில் இயங்கிவரும் உமர் சனசமூக நிலையத்தின் பாலர் பாடசாலையின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) மேற்கொண்டுள்ளது.
இப்பிரதேச வறிய மாணவர்களின் நலன்கருதி உமர் சனசமூக நிலையத்தினால் நடத்தப்பட்டுவரும் இப்பாலர் பாடசாலை கடந்த சில வருடங்களாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் அமைக்கப்பட்ட இக் கல்வி மையத்திலேயே இயங்கி வருகின்றது.
மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவுமின்றி மிகவும் கஷ்டமான நிலையில் இயங்கிவரும் இந்தப் பாலர் பாடசாலைக்கான வசதிகளைச் செய்துதர வேண்டும் என்ற கோரிக்கையினை உமர் சனசமூக நிலையத்தின் நிருவாகிகள் NNFGGயிடம் முன்வைத்திருந்தனர்.
இதன் அடிப்படையில் இப்பாலர் பாடசாலையின் நிலையினை நேரில் கண்டறியுமுகமாக NFGGயின் பிரதநிதிகள் நேற்றும் இன்றும் அங்கு விஜயம் செய்தனர்.
NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான், அதன் தேசிய அமைப்பாளர் MBM. பிர்தௌஸ் நளீமி, காத்தான்குடி நகரசாபை உறுப்பினர் MAHM. மிஹ்ழார், PMGGயின் சூறாசபை உறுப்பினர் ULM. ரபீக் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட இவ்விஜயத்தின்போது இப்பாலர் பாடசாலைக்கு உடனடியாக மின் இணைப்பையும், மின் விசிறிகளையும் மற்றும் பாலர்களுக்கு விளையாட்டு, கற்றல் உபகரணங்களையும் பெற்றுத் தருவதாக உறுதியளிக்கப்பட்டது.
அத்தோடு எதிர்வரும் காலங்களில் இப்பாடசாலைக்கு மலசல கூட வசதி உள்ளிட்ட ஏனைய வசதிகளையும் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.
கல்வி உள்ளிட்ட பல விடயங்களிலும் மிகவும் பின்தங்கிய பிரதேசமான அப்ரார் பிரதேசத்தினை மையப்படுத்தி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் மேற்கொண்டிருந்த பல்வேறு வேலைத்திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த கல்வி மையம் பல வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டது. இப்பிரதேச மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக சில நடவடிக்கைகளையும் இக்கல்வி மையத்தினைத் தளமாகக் கொண்டு PMGG மேற்கொண்டு வந்தது.
கடந்த 2011 நகரசபைத் தேர்தல் காலத்தின்போது சில அரசியல் தீய சக்திகளினால் இக்கல்வி மையம் சேதப்பட்டுத்தப்பட்டிருந்ததும் இங்கு நினைவுபடுத்தத்தக்கது.
Published by

Leave a comment