கண்டி: அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டம் மூலம் பொதுமக்களின் நலன் கருதி விலை குறைக்கப்பட்ட 13 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்காமல் பழைய விலைகளுக்கு விற்பனை செய்த சுமார் 50 வர்த்தகர்களுக்கு எதிராக கண்டி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரி எம்.என்.பி. மதாராகான தெரிவித்துள்ளார்.
கண்டி நகரிலும் சுற்றுப்புற பகுதிகளிலும் அரசினால் விலை குறைக்கப்பட்ட பால் மா, சீனி, உழுந்து, பயறு, மீன்டின், மாசி, நெத்தலி உட்பட 13 பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்ட விலைகளிலின்றி பழைய விலைகளில் விற்கப்படுவது தொடர்பில் கண்டி மாவட்ட பிரதான செயலாளர் காமினி செனவிரட்னவுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றது.
இதனையடுத்து செயலாளரின் ஆலோசனைக்கமைய கண்டி செயலகத்தில் இயங்கும் கண்டி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சபை அதிகாரிகள் கண்டி, வத்துகாமம், கெலிஒயா, பேராதனை உட்பட பல இடங்களில் தீடீர் சோதனைகளை நடத்திய போது பல வர்த்தக நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலைப் பட்டியல்களை பொதுமக்களின் பார்வைக்கு வைக்காமல் பழைய விலைகளில் விற்பனை செய்த பல வர்த்தக நிலையங்களை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.
இதன்போது வர்த்தக நிலைய உரிமையாளர்களை எச்சரிக்கை செய்த அதிகாரிகள் அவர்களுக்கு எதிராக பன்வில கண்டி தெல்தெனிய நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
Published by

Leave a comment