காத்தான்குடி: செலிங்கோ இலாப பகிர்வு வங்கியில் வைப்பிலிடப்பட்ட பணத்தை மீட்டுத்தருமாறு கோரி லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் ஆணையாளருக்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த 2002ஆம் ஆண்டு இலங்கையில் பல பாகங்களிலும் செலிங்கோ இலாப பகிர்வு என்ற நிதி நிறுவனம் தங்களது கிளைகளை நிறுவி வாடிக்கையாளர்களிடம் சேமிப்புகளையும் நிலையான முதலீடுகளையும் பெற்றுக்கொண்டதை தாங்கள் அறிவீர்கள். இதனடிப்படையில் காத்தான்குடியிலும் இதன்கிளை 28.11.2003 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
இந்நிதி நிறுவனத்தின் ஆரம்ப நிகழ்வில் மேற்படி நிறுவனமானது இலங்கை மத்திய வங்கியின் கீழ் பதிவு செய்யப்பட்டது என்றும், முற்றுமுழுதாக இஸ்லாமிய வங்கிச் சேவையினை வழங்குமெனவும் மக்களிடத்தில் கூறியே தங்களுடைய வைப்புகளைப் பெற்றுக்கொண்டனர். மேற்படி கூற்றை நம்பிய மக்கள் இலட்சக்கணக்கான தங்களது நிலையான வைப்புகளையும் முதலீடுகளையும் வைப்பிலிட்டனர்.
ஆனால், குறிப்பிட்ட காலம் மாத்திரம் இயங்கிய இந்நிதி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித அறிவுறுத்தல்களையும் வழங்காமல் தனது நிதி நடவடிக்கைகளை இடைநிறுத்திக் கொண்டது. சுமார் 128 மில்லியன் ரூபாய்கள் இந்நிதி நிறுவனத்தில் காத்தான்குடி கிளையில் மாத்திரம் வைப்பிலிடப்பட்டுள்ளன. மேற்படி வைப்பானது, அங்கவீனர் நிலையத்தினதும், அநாதை இல்லத்தினதும், பாரிய நோய்களுக்காக நிதி வழங்கும் நிறுவனங்களினதும், பொதுச்சேவை செய்யும் நிறுவனங்களினதும் மற்றும் மிக வறிய ஏழை மக்களினதும் சேமிப்பாகும்.
கடந்த காலங்களில் இந்நிதியை மீளப்பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் எவ்வித பயனும் கிடைக்கவில்லை. எனவேதான் தற்போது இந்நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் என நாம் பெரிதும் நம்புகின்றோம்.
எனவே, இது சம்பந்தமாக தாங்கள் உரிய அதிகாரிகளை விசாரித்து, இவ்வங்கியினால் ஏமாற்றப்பட்ட ஏழை மக்கள் வைப்புச் செய்த பணத்தினை மீளப்பெறுவதற்கு ஆவன செய்யுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இப்படிக்கு
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர்,
எம்.ஐ.எம்.சுபைர்
செயலாளர் ஏ.எல்.ஏ.சபீல்
என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Published by

Leave a comment