மு.கா தலைவரால் மறக்கப்பட்ட கல்முனைக்கு அடுத்த தேர்தலிலாவது அரசியல் அதிகாரம் கிடைக்குமா?

Kalmunai-Municipal-Council[1]எஸ்.ரீ.எம்.குதைப்

கல்முனை: நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அதிகூடிய 89.91 வீதமான வாக்குகளை வாரி வழங்கிய கல்முனைத் தொகுதிக்கு ஒரு அரசியல் அதிகாரம் வழங்கப்படாமை குறித்து கவலையடைந்துள்ளோம். இந்தப்  புறக்கணிப்பு கல்முனை வாக்காளர்களையும் கட்சியின் போராளிகளையும் சோர்வடையச்  செய்துள்ளது. தோ்தலில் அதிக ஆர்வத்தோடு வாக்களித்த மக்கள் இன்று ஏமாற்றமடைந்துள்ளனர்.

சென்ற பாராளுமன்றத் தேர்தலில்  சம்மாந்துறைத் தொகுதியும் பொத்துவில் தொகுதியும் தோல்வியடைந்த நிலையில் கல்முனைத் தொகுதி மாத்திரம் அதிகூடிய வாக்குகளால் வெற்றி ஈட்டிய காரணத்தால் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களைப் மு.கா பெறமுடிந்தது. இதற்கு முழுக்காரணமாக இருந்தவர்கள் கல்முனைத் தொகுதி மக்களும் எச்.எம்.எம். ஹரீஸ் எம்.பியின் சூறாவளிப் பிரச்சாரமுமாகும் என்பதை கட்சியின் தலைமை இன்று மறந்து விட்டது. தேர்தல் காலத்தில் வாக்குகளைப் பெறுவதற்காக எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளும் கொடுக்கப்படுகின்ற  வாக்குறுதிகளும் தேர்தல் முடிந்தவுடன் பழைய குருடி கதவைத் திறடி என்ற பழமொழி போல் ஆகிவிடுகிறது.  

அதுமட்டுமல்லாமல் தொகுதிவாரியானாலும் விகிதாசாரத் தேர்தலானாலும் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசுக்கு 100 வீதம் வெற்றி பெறக்கூடிய தொகுதி என்றால் அது கல்முனைத் தொகுதி என்பதை யாராலும் மறுக்க முடியாது.

மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் காலம் தொட்டு இன்று வரைக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தோல்வி அடையாத தொகுதி என்பது மட்டுமல்லாமல் முஸ்லிம் காங்கிரஸின் தன்மானத்தைப் பாதுகாத்த தொகுதி என்பதையும் மறந்து விடமுடியாது.

இன்று மக்கள் செல்வாக்கு உள்ளவர்கள் ஒதுக்கப்படுவதையும் மக்கள் செல்வாக்கு இல்லாதவர்கள் பதவி பெற்றுக் கொள்வதையும் முஸ்லிம் காங்கிரஸில் தான் பார்க்க முடிகிறது. அதற்கு முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் செயலாளரும் உதாரணமாகும். மக்களால் தெரிவு செய்யப்படுவதற்கு முடியாதவர்கள் பதவியைப் பெறுவதற்கு முன்னிற்பதைப் பார்க்க முடிகிறது. இவர்கள் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு முடிந்தால் வெற்றி பெற்றுக்காட்டட்டும்.

கல்முனைக்கு அமைச்சுப் பதவி வழங்குவதற்கு மாகாண சபை உறுப்பினா் ஜெமீல் மற்றும் கல்முனை முதல்வா் நிசாம் காரியப்பர் ஆகியோரின் சூழ்ச்சித்தனம் அதிகமாக உள்ளது அவர்களின் விடாப்பிடியே முக்கியமான காரணமாகும். இவற்றை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஜெமீல், நிசாம் காரியப்பர் போன்றவர்களினால் நடாத்தப்பட்ட விழாக்கள் கூட்டங்கள் இவற்றுக்கு சான்றாகும். எனவே இவர்களுக்கு தீர்ப்பு வழங்குகின்ற உரிமை மக்களாகிய உங்களுக்கே இருக்கிறது. இவர்கள் உங்கள் முன்வருகின்ற போது நீங்கள் உங்கள் வாக்குகளின் மூலம் நிச்சயம் தீர்ப்பு வழங்குவீர்கள் என நம்புகிறேன் .

எனவே அன்பார்ந்த கல்முனை வாக்காளப் பெருமக்களே! எமது முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளே!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில்  அதிகூடிய விருப்பு வாக்குகளை ஹரீஸ் எம்.பிக்கு அளிப்பதன் மூலம் ஏமாற்றப்பட்ட எமது அரசியல் அதிகாரத்தை மீளப் பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே நடந்தவற்றை மறந்து எதிர்வரும் தேர்தலில் சோர்வடையாமல் மீண்டும் எமது வாக்குப் பலத்தை நிரூபித்துக் காட்டுவோம்.

எஸ்.ரீ.எம்.குதைப்

தலைவா், அல்-மீஸான் சமூக நலன்புரி அமைப்பு,

கட்டார்.

Published by

Leave a comment