லண்டன்: நூறு வருடங்களைக் கடந்த கிரிக்கட் வரலாற்றில், கிரிக்கட் ஆட்டங்களில் இன்றுவரைக்கும் பற்பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. 6 நாட்கள் விளையாடப்பட்ட டெஸ்ட் போட்டிகள் தற்பொழுது 5 நாட்களாக விளையாடப்பட்டு வருகிறது. இதைவிட, டெஸ்ட் போட்டிகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை.
ஆனால், ஒருநாள் போட்டிகளைப் பொருத்தமட்டடில் ஆரம்பம் முதல் இன்றுவரைக்கும் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
1970 களின் வரலாற்றைக்கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 1980களில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. அதன் பின்னர் 1989-90 காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவில் பிரபல்யமாக இடம்பெற்று வந்த ‘பென்ஸன் ஹெட்ஜஸ்’ முக்கோணத் தொடரில் மேலும் புதிய மாற்றங்கள் ஏற்பட்டன.
எதிர்வரும் (அப்போது) 1992 உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலியாவும் நியுசிலாந்தும் இணைந்து நடாத்த இருந்ததால், 1992 உலகக் கிண்ணப்போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட பல மாற்றங்களை வெள்ளோட்டமாக அவுஸ்திரேலியா அன்று, குறித்த முக்கோணத் தொடர்போட்டிகளில் பரீட்சித்திருந்தன.
1992 உலகக் கிண்ணப் போட்டிகளை பிரமாண்டமான அளவில் நடாத்தி கிரிக்கட் விதிகளிலும், தொழிநுட்பத்திலும் பாரிய மாற்றங்களைக் கொண்டுவந்த அவுஸ்திரேலியாவையும், நியுசிலாந்தையும் கிரிக்கட் என்றும் உலகம் மறக்க முடியாது.
இதனால்தான் 11வது உலகக் கிண்ணப்போட்டிகள் இன்னும் சில மணி நேரங்களில் இடம்பெற இருக்கின்ற நிலையிலும், விளையாட்டு ஊடகங்கள் 1992 உலகக் கிண்ண நிகழ்வுகளை தொடர்ந்தும் ஞாபகப்படுத்திக்கொண்டிருக்கின்றன.
இதன்படி,
1983 உலகக் கிண்ணப் போட்டிகள் வரை 60 ஓவர்களாக இடம்பெற்ற ஒருநாள் போட்டி, 1992 உலகக் கிண்ணத்திலிருந்து 50 ஓவர்களாக மாற்றப்பட்டது.
டெஸ்ட் போட்டிக்கும், ஒருநாள் போட்டிக்கும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைத் தவிர, வேறு எந்த மாற்றங்களும் இல்லாதிருந்த ஒருநாள் போட்டிகளில், முதல் 15 ஓவர்களை 30 யார்ட் உள்ளவட்டம் விதிமுறையை அறிமுகப்படுத்தி, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள், விரைவான துடுப்பாட்டத்தை மேற்கொண்டு, டெஸ்ட் போட்டிக்கு மாற்றமாக ஒருநாள் போட்டிகளை மாற்றவேண்டும் என்ற நோக்கில் முதல் 15 ஓவர்கள் உள்வட்டம் கடைப்பிடிக்கப்பட்டது.
அணி வீரர்களுக்கு வர்ண நிற ஆடை 1992 உலகக் கிண்ணப் போட்டிகளிலேயே முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. இன்றும்கூட இந்த ஆடைகளுக்கு அதிக வரவேற்பு கிரிக்கட் உலகில் இருக்கின்றன. 1992 உலகக் கிண்ண ஜேர்சியை அணிந்துகொண்டு போட்டியைக் காணும் இரசிகர்களை, இன்றும்கூட ‘கமெராமென்’ தங்களது கமெராவுக்குள் படம் பிடித்துக் கொள்ளத் தவறுவதில்லை.
வெள்ளை நிறப்பந்து இதே உலகக் கிண்ணப்போட்டியில்தான் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்து.
மின்னொளியில் ஆடப்படும் பகல்-இரவுப் போட்டி முதன்முதலாக 1992 உலகக் கிண்ணத்தில் விளையாடப்பட்டது.
1970-1991 வரை அதாவது 21 வருடங்கள் நிறவெறி சிக்கல்கள் காரணமாக கிரிக்கட்டில் தடுக்கப்பட்டிருந்த தென் ஆபிரிக்கா அணி, தனது முதலாவது உலகக் கிண்ணப்போட்டியில் கலந்துகொண்டு, அரைஇறுதியில் இங்கிலாந்துடன் ஓட்டவிகிதத்தால் பரிதாபமாகத் தோல்வியைத் தழுவியது.
‘ஸ்டம்ஸ்’ எனப்படும் விக்கட்டிற்குள் சிறு கமெராக்களையும், ஒலிவாங்கிகளையும் பொருத்தி, அதன்மூலமாக துல்லியமான காட்சிகளையும், ஒலிகளையும் பெற்றுக்கொள்வதற்கும் பல கோணங்களில் போட்டியை ஒளிபரப்புவதற்கும் இத்தகைய தொழிநுட்பம் முதன் முதலில் 1992 அறிமுகப்படுத்தியிருந்தது.
அதிகமாக 4-6 வரையிலான கமெராக்களின் கோணங்களில் மாத்திரமே கிரிக்கட்டை இரசித்துவந்த பார்வையாளர்கள், 10க்கும் அதிகமான கோணங்களில் போட்டியைக் கண்டு இரசிக்கும் தொழிநுட்பம் அறிமுகமானது.
டிஜிட்டல் ஸ்கோர் போர்ட் அறிமுகமானது. இதன் மூலமாக போட்டியின் உடனடித் தரவுகளை துல்லியமாக வீரர்களுக்கும், இரசிகர்களுக்கும் வழங்க வழி வகுத்தது.
டக்வேர்த் லுவிஸ் விதிமுறை:
1992 உலகக் கிண்ணப் போட்டியில் ஓட்ட விகிதம் எனப்படும் (Run Rate) கடைப்பிடிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டி 10 நிமிட மழை காரணமாக இடை நிறுத்தப்பட்டிருந்தது.
வெற்றியை நோக்கி துடுப்பெடுத்தாடி வந்த தென்னாபிரிக்காவுக்கு, போட்டி மீண்டும் ஆரம்பமான போது, 1 பந்தில் 21 ஓட்டங்கள் வெற்றி பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டது.
எந்த வகையிலும் சாதகமில்லாத இந்நடை முறையை அன்று கிரிக்கட் வல்லுனர்கள் விமர்சித்திருந்தனர். இதன் பின்னரே டி.எல். மெதட் அறிமுகப்படுத்தப்பட்டது.
டி.எல். முதன் முதலாக 1996-97, சிம்பாப்வே-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டு, இன்றுவரைக்கும் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதன் பின்னர் அடுத்துவந்த 1996 உலகக் கிண்ணப் போட்டிகளில் முதல் 15 ஓவர்கள் சுற்றுவட்டம் கட்டாயப்படுத்தப்பட்டிருந்தது. குறித்த 15 ஓவர்களிலும் 2 வீரர்களே உள்வட்டத்திற்கு வெளியில் களத்தடுப்பில் ஈடுபடுத்தப்பட முடியும்.
3ம் நடுவர் விதி முறை 1996 உலகக் கிண்ணத்துக்கு முன்னரே நடைமுறையிலிருந்தாலும், 1996 உலகக் கிண்ணப் போட்டிகளில் இருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதன் பின்னர் ‘சுப்பர் சப்’ எனப்படும் சகலதுறை வீரர்களுக்கான சந்தர்ப்பம் எனும் விதி முறை 2004-2005 காலப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. எனினும், அறிமுகப்படுத்தப்பட்ட குறித்த சில மாதங்களிலேயே இந்த விதி முறையை ஐ.சி.சி. நீக்கியது.
இதன் பின்னர் ‘ஃபிரி ஹிட்’ அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. ஒக்டோபர் 2007 இல் இந்த விதி அறிமுகப்படுத்தப்பட்டு இன்றும் அமுலில் இருக்கின்றது.
‘சுப்பர் ஓவர்’ எனப்படும் விதி முறை 2008 இல் இடம்பெற்ற T20 போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. நொக்கட் சுற்றில் போட்டி சம நிலையில் நிறைவடைந்தால், சுப்பர் ஓவர் வழங்கப்பட்டு போட்டியின் முடிவு தீர்மானிக்கப்படும். கடந்த 2011 உலகக் கிண்ணப் போட்டியின்போது இந்த சுப்பர் ஓவர் விதி முறை அமுலில் இருந்நது. எனினும் நொக்கவுட் சுற்றில் இடம்பெற்ற எந்த போட்டியும் ‘டை’ யில் நிறைவடையாததால், சுப்பர் ஓவர் உபயோகப்படுத்தப்படவில்லை.
இம்முறை 2015 உலகக் கிண்ணப் இறுதிப் போட்டியில் மாத்திரமே சுப்பர் ஓவருக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
ஏனைய நொக்கவுட் சுற்றுக்கள் சம நிலையில் முடியுமானால், தனது பிரிவில் அதிக புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட அணி, வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும்.
கிரிக்கட்டில் மட்டையும், பந்தும் விளையாடப்பட வேண்டும் என்பதற்காக, பவர் பிளே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அமுலில் இருந்த ‘மெண்டடரி’ 15 ஓவர், 30 யார்ட் சுற்றுவட்ட விதிகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, ‘கிரிக்கட் ஆடப்பட வேண்டும்’ என்ற நோக்கில் துடுப்பாட்ட வீரர்களுக்குச் சாதமாக இந்த பவர் பிளே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2011இல் தற்போதய பவர் பிளே அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, ஆரம்ப 10 ஓவர்கள் மெண்டடரி சுற்றில், இரு வீரர்கள் மாத்திரமே 30 யார்ட்டிற்கு வெளியில் களத்தடுப்பில் ஈடுபட முடியும். இதன் பின்னர், 5 ஓவர்கள் வழங்கப்படும். இந்த 5 ஓவர் பவர் பிளே சுற்றில், 3 வீரர்கள் 30 யார்ட்டிற்கு வெளியில் களத்தடுப்பில் ஈடுபட முடியும்.MJ
எனவே 14 நாடுகள் பங்கு பற்றும் இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகள் அடித்து ஆடும் அணிகளுக்கே வெற்றி வாய்ப்புக்கள் அதிகமா இருக்கும் . அவுஸ்திரேலியாவின் அதிகமான மைதானங்கள் 80-90 மீட்டரைக் கடந்த எல்லைகளை உடையவை.
‘லீக்’ சுற்றில் ஆடப்படும் ஒவ்வொரு ஆட்டமும் ஒவ்வொரு அணிக்கு இன்றியமையாத ஆட்டமாகவே அமையும். ஏனெனில், கால் இறுதி, அரையிறுதியில் போட்டி சமன் நிலையில் முடியுமாயின், ஆரம்பச் சுற்று புள்ளிகள் கவனத்தில் எடுக்கப்படும்.
பற்பல சாதனைகளை நிகழ்த்தக் காத்திருக்கும் 2015 உலகக் கிண்ணம், இன்னும் சில மணி நேரங்களில் எங்களை வந்தடைய விருக்கிறது.
Published by









Leave a comment