கொழும்பு: கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் வங்கிக் கணக்குகள் 60 வீதம் ஆராயப்பட்டுள்ள நிலையில் துமிந்த சில்வா எம்.பி. நேற்று இரகசிய பொலிஸாரினால் சுமார் 6 மணி நேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
நேற்றுக் காலை 8.30 மணியளவில் இரகசிய பொலிஸ் தலைமையகத்துக்கு இரண்டு சட்டத்தரணிகளின் உதவியுடன் வந்த துமிந்த சில்வா மீது வெலே சுதாவுடனான தொடர்பு மற்றும் கொடுக்கல் வாங்கல் குறித்து 6 மணி நேரம் விசாரிக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.‘வெலே சுதா’ என்றழைக்கப்படும் சமந்தகுமார என்பவர் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு விசாரணைக்குட் படுத்தப்பட்டுள்ளார்.
இவரது வாக்கு மூலத்தின் பிரகாரம் இதுவரை அரச ஊழியர்கள், வங்கி அதிகாரிகள் மற்றும் துமிந்த சில்வா உட்பட 75 பேரிடமிருந்து வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய துமிந்த சில்வா எம்.பியின் வங்கிக் கணக்குகள் ஆராயப்பட்டன. குறிப்பாக அரச மற்றும் தனியார் வங்கிகள் உட்பட 82 நிதி நிறுவனங்களின் கணக்குகள் இரகசிய பொலிஸாரினால் ஆராயப்பட்டன. இவற்றில் 60 வீதம் பூர்த்தியடைந்துள்ள நிலையில் இதனூடாக பல தகவல்களும் வெளிவந்துள்ளன.
இந்நிலையில் துமிந்த சில்வா எம்.பியை இரகசிய பொலிஸார் நேற்று விசாரணைக்குட்படுத்தினர்.
‘வெலே சுதா’ என்பவர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் நபராவார். அவருடன் தொடர்பு கொள்வோர் மற்றும் கொடுக்கல் வாங்கல் செய் பவர்கள் சட்டவிரோத பணப்பரிமாற்றல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர். இந்த வகையில் போதைப்பொருள் வர்த்தகருக்கு உதவி செய்தமை, பணம் பெற்றமை அல்லது பணம் வழங்கினார் என்ற குற்றச்சாட்டுகளின் பேரிலும் சட்டவிரோத பணபரிமாற்றல் சட்டத்தின்கீழும் துமிந்த சில்வாவுக்கு எதிராக விசாரணைகள் முடுக்கி விடப் பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
Published by
![duminda-silva_200_135[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/06/duminda-silva_200_1351.jpg?w=150&h=101)
Leave a comment