“மக்களால் பெறப்பட்ட சுதந்திரம் அரசியல்வாதிகளால் களவாடப்படுவதை அனுமதிக்க முடியாது”: NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான்

rahuman– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

காத்தான்குடி: “மக்களால் பெறப்பட்ட இந்த சுதந்திரம் சுய நல அரசியல்வாதிகளால் மீண்டுமொருமுறை களவாடப்படுவதை அனுமதிக்க முடியாது. இந்த சுதந்திரத்தின் சொந்தக்காரர்களாக மக்கள் மாற்றப்பட வேண்டும்” என NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) காத்தான்குடியில் ஏற்பாடு செய்திருந்த இலங்கையின் 67வது சுதந்திர தின நிகழ்வின்போது உரையாற்றிய NFGGயின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,

“இன்று கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் அர்த்தபூர்வமான சுதந்திர தினத்திற்குச் சொந்தக்காரர்களும் அதைக் கொண்டாடுவதற்கு 100% தகுதியானவர்களும் மக்கள் மாத்திரமே. இன்று தலைநகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் பல அரசியல்வாதிகளும் கலந்து கொண்டிருக்கின்றனர். உண்மையில் இந்த சுதந்திர தினத்தினைக் கொண்டாடவும் அதில் பங்குபற்றவும் தகுதியற்றவர்கள் பலர் அதிலிருக்கிறார்கள். ஏனெனில், மக்கள் வேண்டி நின்ற உண்மையான சுதந்திரத்திற்கு எவ்வகையிலும் பங்களிப்புச் செய்யாதவர்கள் அவர்கள். மக்களின் உண்மையான சுதந்திரம் பறிக்கப்பட்டு, அராஜகம் கோலோச்சிய காலத்தில் அவ்வாட்சிக்கு சாமரம் வீசிக்கொண்டும், அதன் மூலம் பெற்றுக்கொண்ட அத்தனை வரப்பிரசாதங்களையும் அனுபவித்துக் கொண்டுமிருந்த இந்த அரசியல்வாதிகள்தான் இன்று இந்த தினத்தை முன்னணியில் நின்று கொண்டாடிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இன்று பெற்றுக்கொள்ளப்பட்ட இந்த அரசியல் சுதந்திரதினத்தை கொண்டாடுவதற்கு மிகப்பொருத்தமானவர்கள் நீங்களும் நாங்களும் பொதுமக்களும் தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

இப்படித்தான் வரலாற்றில் முன்னரும் பல முறை சுதந்திரம் பெறப்பட்டிருக்கிறது. ஆனால் அது மக்களிடம் கொடுக்கப்படவில்லை. ‘சுதந்திரத்தினைப் பெற்றார்கள்… அதை யாரிடம் கொடுத்தார்கள்?’ என ஒர் கவிஞன் எழுதியதைப்போல சுதந்திரம் “பெறப்பட்டது, பெறப்பட்டது” என்று சொல்லப்பட்டு வருகிறதே தவிர அதன் சொந்தக்காரர்களாக மக்கள் மாற்றப்படவில்லை. எனவே இப்பொழுது மக்களால் பெறப்பட்டிருக்கும் இந்த சுதந்திரம் மக்களுக்குரியது. அது மக்களின் சொத்து . எனவே அதனை இறுதி வரை பாதுகாக்கின்ற பொறுப்பு மக்களுக்கிருக்கின்றது என்பதை நாம் இன்று நினைவு படுத்துவது நமது தேசியக் கடமையாக இருக்கின்றது.

நாட்டிற்கும் மக்களுக்கும் ஒர் இக்கட்டான சூழல் வருகிற பொழுது, அவர்களின் சுதந்திரம் பிடுங்கப்படுகிற பொழுது மக்கள் அதற்கெதிராக போராடி, தங்கள் உயிர்களை தியாகம் செய்து சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் காலவோட்டத்தில் சிலர் அதனை களவாடிக்கொண்டு அதனை தங்கள் சொந்த அதிகார இருப்புக்காக, சுயஇலாபங்களுக்காக, தமது குடும்பங்களின் அபிவிருத்திக்காக பயன்படுத்தகிறார்கள். 67 வருடங்களுக்கு முன்னர் சுதந்திரம் பெறப்பட்டபொழுது மக்கள் எவ்வாறு போராடினார்கள் என்பதை நாம் கண்ணால் கண்டது கிடையாது. ஆனால் 2009ம் ஆண்டு பயங்கர வாதத்திலிருந்து இந்த நாடு மீட்கப்பட்டதன் பின்னணியில் மக்களின் பங்களிப்பும் என்ன என்பதனை நாம் அறிவும். ஆனால் அந்த தியாகமும் பங்களிப்பும் முற்றாக மறுதலிக்கப்பட்டு, அந்த வெற்றிக்கு ராஜபக்ஷ குடும்பம் மாத்திரமே பங்களிப்புச் செய்ததாக வரலாறு மாற்றி எழுதப்பட்டது. ஆனால், உண்மையில் அதற்காக உணர்வு பூர்வமான, தியாக பூர்வமான பங்களிப்புச் செய்தவர்கள் பொது மக்களாகும்.

ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் பயங்கரவாத்தை தோற்கடிக்கவும் சுதந்திரத்தினை பெற்றுக்கொடுக்கவும் முஸ்லிம்கள் எவ்வித பங்களிப்புகளையும் செய்யவில்லை எனவும், சிங்கள பொலீஸ், இராணுவ வீரர்கள் மாத்திரமே அதற்காக போராடினார்கள் எனவும் ஒரு பிழையான மனப்பதிவை அவர்கள் தோற்றுவித்திருந்தார்கள். ஆனால், சீருடை இல்லாமலும் சம்பளம் இல்லாமலும் இந்த நாட்டின் ஒருமைப்பாட்டுகாக உணர்வுபூர்வமாக பாடுபட்டவர்கள் முஸ்லிம்களாகும். பிரிவினை வாதத்திற்கு எதிராக நின்றதற்காகவும் இந்த நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் அதிகவிலை கொடுத்தவர்கள் முஸ்லிம்களைப் போல வேறு எவருமில்லை. தங்கள் உயிரை, பிறந்தமண்ணை, சொத்துக்களை, எதிர்கால சந்ததியை என்று அனைத்தையும் பறி கொடுத்து இந்த நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக எந்த சமூகமும் செய்யாத பங்களிப்பை முஸ்லிம் சமூகம் செய்திருக்கிறது.

ஆனால் இதை ராஜபக்ஷ அரசு மறுதலித்த பொழுது, அதனை துணிச்சலுடன் எதிர்த்து இந்த நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக முஸ்லிம்களின் பங்களிப்பினை பேச வேண்டிய சபைகளில் எடுத்துச் சொல்லக்கூடிய திராணி எமது முஸ்லிம் தலைவர்களுக்கு இருக்கவில்லை என்பதுதான் கவலைக்குரிய விடயமாகும். இப்படியானவர்களின் சுயநலவாத, சந்தர்ப்பவாத போக்குகளினால் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமுமே சந்தேகக்கண்ணுடன் நோக்கப்படுகின்ற நிலைமையினையே அவர்கள் தோற்றுவித்திருந்தனர். எனவே ஒவ்வொரு சுதந்திர தின வெற்றியும் இவ்வாறு சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளால் களவாடப்படுவதை இனியும் அனுமதிக்க முடியாது.

மக்களின் தியாகத்தினால் பெறப்பட்ட யுத்த வெற்றி ராஜபக்ஷ குடும்பத்தின் வெற்றியாக மாற்றப்பட்டது போல இப்பொழுதும் இந்த வெற்றியையும் சுயநல அரசியல் வாதிகள் சிலர் களவாடுகின்ற நிலமை தோன்றியிருக்கிறது. இதனை அனுமதிக்க முடியாது. இந்த சுதந்திரம் மக்களின் சொத்தாக மாற்றப்பட வேண்டும்”

Published by

Leave a comment