காத்தான்குடி மத்திய கல்லூரியின் 85வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

unnamed1– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி மத்திய கல்லூரி தேசியப் பாடசாலை கடந்த 85 ஆண்டுகளாக சமூகத்திற்கு கல்விப் பணியை ஆற்றியுள்ளதாகவும் அது தொடர்பான விரிவான விழாவொன்றை இந்த வருடம் 85ம் ஆண்டை மையப்படுத்தி நடாத்துவதற்கு தீர்மாணித்துள்ளதாகவும் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசியப் பாடசாலையின் அதிபர் யூ.எல்.ஏ.முபாறக் தெரிவித்தார்.

காத்தான்குடி மத்திய கல்லூரியின் 85ம் ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு நடாத்தப்படவுள்ள விழா தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ஊடகவியலாளர் மகாநாடு நேற்று 08-02-2015 ஞாயிற்றுக்கிழமை இரவு காத்தான்குடி மத்திய கல்லூரி தேசியப் பாடசாலையின் நூலகத்தில் இடம்பெற்ற போது அதில் கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

எமது பாடசாலையில் 85ம் ஆண்டை மையப்படுத்தி முதலாவது நிகழ்வை தற்போது ஆரம்பித்துள்ளோம். அதில் முதற்கட்டமாக கடந்த ஜனவரியிலிருந்து காத்தான்குடி குட்வின் சந்தியிலும், பாடசாலை முகப்புக்கு முன்னாலும் 85ம் ஆண்டை மையப்படுத்தி நாங்கள் ஒரு விழா ஒன்றை இந்த வருடம் நடாத்த இருக்கின்றோம் என்பதை வெளிப்படுத்துவதற்காக அறிவித்தல் பலகை ஒன்றை நிறுவியுள்ளோம்.

அதிலும் குறிப்பாக எமது பாடசாலையின் பழமைவாய்ந்த சின்னலெவ்வை புலக் என்ற கட்டிடங்களை காட்சிப்படித்தியுள்ளோம். எனவும் கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

எமது பாடசாலையின் 85ம் ஆண்டின் கருப்பொருள் ‘உலகை வெல்லும் கல்வியை நோக்கி’ என்பதே. எங்களுடைய பாடசாலையின் எதிர்கால வேளைத் திட்டங்களும் செயற்பாடுகளும் உலகை வெல்லும் கல்வியை நோக்கியதாக மாணவர்களை தயார்படுத்தக்கூடிய வகையில் செய்வதுதான் எங்களுடைய எதிர்பார்ப்பாகும்.

unnamed

எங்களுடைய பாடசாலையின் 85ம் ஆண்டு செயற்பாட்டில் இரண்டாவதாக, பாடசாலையின் 85ம் ஆண்டை மையப்படுத்தி பாடசாலைக்கு முன்னாலுள்ள பிரதான நுழைவாயிலுக்கு அருகாமையில் ஒரு நினைவுப் படிவத்தை இந்த மாத இறுதியில் நிறுவ திட்டமிட்டுள்ளோம். அத்தோடு மாணவர்களின் அறிவை மேம்படுத்த மார்ச் மாதம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் -முஸ்லிம் பெரிய பாடசாலைகளுக்கிடையிலான விவாதப் போட்டியொன்றையும் நடத்தவுள்ளோம். அதில் பெரிய பாடசாலைகள் கலந்து கொள்ள முடியும்.

ஏப்ரல் மாதம் பெரிய பாடசாலைகளையும் எங்களுடைய பாடசாலையையும் உள்ளடக்கியதாக கிரிக்கட் மற்றும் உதைப்பந்து சுற்றுப்போட்டிகளை நடாத்த திட்டமிட்டுள்ளோம்.

கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் எமது பாடசாலை பழைய மாணவர்கள் பொத்துவில் தொடக்கம் திருகோணாமலை வரை இருக்கின்ற காரணத்தால் மே மாதம் பொத்துவில் தொடக்கம் மூதூர் வரை வாகனத் தொடரணி ஒன்றினையும் நடாத்த திட்டமிட்டுள்ளோம்.

ஜூன் மாதம் எமது பாடசாலையில் இருக்கின்ற மாணவர்களை வைத்து காத்தான்குடியில் மிகத் தேவையாக இருக்கின்ற பள்ளிவாயல் அல்லது மையவாடி போன்ற ஒரு இடத்தை தெரிவு செய்து, அந்த இடத்தை பிரம்மாண்டமான முறையில் சிரமதானம் செய்யத் திட்டமிட்டுள்ளதோடு, எமது பாடசாலை மாணவர்களின் ஆற்றல்களை வெளிக்ககொனரும் வகையில் ஜூலை மாதம் 3 அல்லது 4 தினங்களுக்கு மாபெரும் கண்காட்சி ஒன்றையும் நடாத்த இருக்கின்றோம்.

அத்தோடு அன்றைய தினம் முத்திரை ஒன்றையும் வெளியிட திட்டமிட்டுள்ளோம். அதில் எமது பாடசாலையில் ஸ்தாபகர்களில் ஒருவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் முதலியார் சின்னலெவ்வை ஞாபகார்த்த முத்திரை ஒன்றை வெளியடவுள்ளோம்.
அவருக் இதுவரையில் ஒரு முத்திரையும் வெளிடப்படவில்லை. அவர் எமது சமூகத்தின் ஆரம்பகால அரசியல் வாதிகளில் ஒருவர். அவர்தான் எமது நாட்டின் தேசியக் கொடியை பாராளுமன்றத்தில் பிரேகரித்த ஒருவர்.

காத்தான்குடியின் முக்கியமான பெருமையுடன் சம்மந்தப்பட்ட ஒருவர். அவரை நாம் நினைவு படுத்துவதன் மூலமாக காத்தான்குடி எந்த அளவுக்கு தேசிய அரசியலில் சமந்தப்பட்டு இருக்கின்றது என்பதை வெளிப்படுத்த அதில் சந்தர்ப்பம் இருக்கின்றது.

எனவே அந்த அடிப்படையில் என்னை பொறுத்தவரையில் எங்களுடைய பாடசாலை அவருக்கும் செய்ய கடமைப்பட்டுள்ளது. அந்த காலத்தில் பாடசாலை அமைப்பதற்கு 14 ஏக்கருக்கு மேல் காணியை கொடுத்து பாடசாலையை ஆரம்பித்த ஒருவர். அதனால் அவரையும் ஞாபகப்படுத்தி பாடசாலையையும் ஞாபகப்படுத்தி அந்த முத்திரையை வெளியிடலாம் என யோசித்து இருக்கின்றோம்.

அதே போன்று பிரதானமான பத்திரிகைகளில் பாடசாலையின் முழு விபரம் அடங்கிய அனுபந்தம் ஒன்றை வெளியிடலாம் எனவும் திட்டமிட்டுள்ளோம்.
காத்தான்குடியை முழுமையாக உள்ளடக்கிய சைக்கிளோட்ட பவணி ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளதோடு, எங்களுடைய பழைய மாணவர் சங்கத்தின் ஆலோசனைக்கமைய இந்த சந்தர்ப்பதை பயன்படுத்தி காத்தான்குடியில் ஒரு கல்வி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய வகையில் ஒரு சில கருத்தரங்குகளை நடாத்தவும் திட்டமிட்டுள்ளோம்.’
மேற் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளை ஜூலை மாதத்துடன் நடாத்தி முடிப்பதாகவும் தெரிவித்த காத்தான்குடி மத்திய கல்லூரி தேசியப் பாடசாலையின் அதிபர் யூ.எல்.ஏ.முபாறக் 1930 ஆண்டு ஜனவரி மாதம் 6ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலை இவ்வளவு காலமும் சமூகத்திற்காக நிறைய வேலை செய்துள்ளதாகவும் பல கல்வியலாளர்களையும், பல அரசியல் தலைவர்களையும், பல பிரபல்யமான வர்த்தகர்களையும், எத்தனையோ கலவித் துறைசார்ந்த, ஏனைய துறை சார்ந்தவர்களையும் உருவாக்கியுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசியப் பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் ஆசிரியர் எஸ்;.எம்.எம்.பஷீர், அதன் உறுப்பினர் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.றஹ்மதுல்லாஹ், காத்தான்குடி மத்திய கல்லூரி தேசியப் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் மனித உரிமை ஆணைக்குழு இணைப்பாளர் ஏ.சீ.ஏ.அஸீஸ், அதன் உறுப்பினர் டாக்டர் எஸ்.டி.எம்.மாஹிர் உட்பட காத்தான்குடி மத்திய கல்லூரி தேசியப் பாடசாலை ஆசிரியர் பிர்தௌஸ் உட்பட ஊடவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்;.

Published by

Leave a comment