த.தே.கூவுக்கு மு. காங்கிரஸ் மீண்டும் அழைப்பு

slmc_tna_logo[1]திருகோணமலை: இலங்கையில் கிழக்கு மாகாணசபையில் புதிதாக அமையவுள்ள ஆட்சியில் நிபந்தனையின்றி இணைந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.

கிழக்கு மாகாணசபையில் அமையவுள்ள புதிய ஆட்சி தொடர்பாக செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

இந்த ஊடக சந்திப்பில் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஹாபீஸ் நசீர் அஹமட் மற்றும் கட்சியின் செயலாளரான ஹசன் அலி உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர். கிழக்கு மாகாண முதலமைச்சராக முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த நசீர் அஹமட் பதவியேற்ற பின்னர் முதற்தடவையாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கிழக்கு மாகாண ஆட்சி மாற்றம் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் நடந்த பேச்சுக்கள் தோல்வியில் முடிந்துள்ளன. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து தற்போது ஆட்சி அமைக்க தயாராகியுள்ள நிலையிலே ரவூப் ஹக்கீமினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து புதிய ஆட்சியை அமைக்கவிருப்பதாகக் கூறிய ரவூப் ஹக்கீம், அந்த ஆட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து அமைச்சுக்களை பெற வேண்டும் என்றும் வினயமாக கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சிக்கும் இதற்கான அழைப்பை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Published by

Leave a comment