கட்சிகளில் இருந்து எவர் பிரிந்து வந்தாலும் அவர்களை நாம் எமது கட்சியில் ஒரு போதும் இணைத்துக்கொள்ளப் போவதில்லை: றிசாத் பதியுதீன்

unnamedவவுனியாவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா

வவுனியா: தற்போது எந்தக்கட்சிகளில் இருந்து எவர் பிரிந்து வந்தாலும் அவர்களை நாம் எமது கட்சியில் ஒரு போதும் இணைத்துக்கொள்ளப் போவதில்லை என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன், தேர்தல் ஒன்று வருகின்ற போது அந்த சந்தர்ப்பத்தில், எமது கட்சியில் இணைய விருப்பம் கொண்டு வந்தால் தாம் வகிக்கும் அனைத்து பதவிகளையும் துறந்து அவர்கள் வருவார்கள் எனில் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் கூறினார்.

வவுனியா மாவட்ட மக்களினால்  தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீனை வரவேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு வைபவம் ஒன்று இன்று வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக ஆரம்பமாகி, பட்டானிச் சூர், பாவற்காடு, வேப்பங்குளம் ஊடக மீண்டும் பட்டானிச்சூரை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து பட்டானிச்சூரில் இடம் பெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார்.

unnamed1

இந்த நிகழ்வில் சமூர்த்தி, வீடமைப்பு பிரதி அமைச்சரும், கட்சியின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, வடமாகாண சபை உறுப்பினர்களான ஜயதிலக, றிப்கான் பதியுதீன், முசலி பிரதேச சபை பிரதி தலைவர் பைரூஸ், தர நிர்னய கட்டுப்பாட்டு சபையின் தலைவரும், கொழும்பு பல்கலைக்கழக அரசியல் துறை விரிவுரையாளருமான கலாநிதி எம்.எஸ்.எம்.அனீஸ், வடமாகாண ஆளுநரின் ஆiணாயளர் மொஹதீன் சாஹிப், அமைச்சரின் இணைப்பு செயலாளர் முத்து முஹம்மத், செட்டிக்குளம் பிரதேச சபை உறுப்பினர்களான சரூக், ஹஸன், வவுனியா தமிழ் பிரதேச சபை உறுப்பினர் ஜோர்ஸ், அமைச்சரின் நகர இணைப்பாளர் முன்னாள் வவுனியா நகர சபை உறுப்பினர் அப்துல் பாரி, உட்பட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.

அமைச்சர் றிசாத் பதியுதீன் மேலும் இங்கு உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது –

இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவு தொடர்பில் எமது கட்சிக்கு எதிராக சிலர் பொய் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளனர். கிழக்கில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்பது தான் நியாயமானது. அன்று பொதுஜன ஜக்கிய முன்னணியில் நாம் அங்கத்துவம் கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட முடிவு அடுத்த முதலமைச்சராக முஸ்லிம் காங்கிரஸினை சேர்ந்தவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருந்தோம். சிலர் சுயநலத்திற்காகவும், தமது தனிப்பட்ட தேவைகளுக்காகவும் எமது கட்சிக்கு எதிராக பேசுகின்றனர்.

unnamed

இன்று சிலர் இந்த மண்ணில் இனவாதம் பேசுகின்றனர். அவர்களது எதிர்பார்ப்புக்கள் மீண்டும் எமது மண்ணில் இனங்களை பிரித்து, மக்கள் மத்தியில் குழப்பத்தை தோற்றுவிப்பது என்பதே. அதற்கு எமது வன்னி மாவட்ட மக்கள் ஒரு போதும் இடம் கொடுக்கமாட்டார்கள். அதே போல் இந்த மண்ணில் எந்த சமூகத்தையும், பிரித்து அவர்களை ஒடுக்கும் நடவடிக்கைக்கு எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை. நடை பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன அவர்களை வெற்றி பெறச் செய்யும் போராட்டத்தில் இந்த நாட்டு சிறுபான்மை மக்கள் எவ்வாறு ஒன்றுபட்டு செயற்பாட்hர்களோ, அதே போல் எமது ஒற்றுமையிலும் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

இந்த அரசாங்கத்தில் எமது கட்சி மிகவும் பலமுள்ளதாக இருக்கின்றது என்பதற்கு  போதுமான ஆதாரங்களை நாம் கூறலாம். அதே போல் எமது கட்சியின் பலத்தை அறிந்து கொண்டவர்கள் எமது பாராளுமன்ற உறுப்பினர்களை, மாகாண சபை உறுப்பினர்களுக்கு விலைபேசி. அவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை தருவதாக பொய் கூறி அவர்களை வாங்கும் அளவுக்கு மாறியுள்ளனர். ஆனால் நாங்கள் ஒரு போதும் அவ்வாறான வர்த்தக அரசியலை செய்யப் போவதில்லை. இந்த நாட்டு மக்கள் எம்மீது கொண்ட உண்மையான நம்பிக்கையினை நாம் பாதுகாப்போம். எமது கட்சி இந்த நாட்டு மக்களின் விமோசனத்திற்காக உருவாக்கப்பட்டது. இந்த உருவாக்கத்தின் பின்னணியில் இருப்பவர்கள் ஏழைகளும, தியாகிகளும் என்பதை எம்மால் மறந்துவிட முடியாது. அதே போல் இந்த வன்னி மாவட்டத்தில் வாழும், தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் தியாகமும் இந்த வளர்ச்சிக்கு காரணமாகும். கடந்த அரசாங்கத்தில் இருந்து இந்த மக்களுக்கு செய்த அபிவிருத்திகளை விட மைத்திரிபால சிறிசேன ஜனாதியினுடைய ஆட்சியில் அதை விட ஒரு மடங்கு அதிகமான பணிகளை நாம் செய்வோம்.

unnamed3

இன்று ஒரு சிலர் எமக்கு எதிராக சதி செய்கின்றார்கள், அதற்கு ஊடகங்களையும் பயன்படுத்துகின்றார்கள். இவர்களுக்கு ஒரு செய்தியினை சொல்லி வைக்க விரும்புகின்றேன். நீங்கள் எந்த ஊடகத்தையும் பயன்படுத்துங்கள், அல்லாஹ்வின் ஏற்பாடு இன்றி நீங்கள் எதை செய்தாலும் அது பலிக்காது என்கின்ற ஆழ்ந்த நம்பிக்கையினை நாங்கள் கொண்டவர்கள். மக்களின் வாக்குகளை பெற்றுவிற்று மக்களுக்கு எதிராக செயற்படுபவர்கள் தொடர்பில் அடுத்த தேர்தலில் மக்கள் நல்ல பாடத்தை அவர்களுக்கு புகட்டுவார்கள் என சொல்லி வைக்கவிரும்புகின்றேன்.

இந்த கட்சி எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், வன்னி, குருநாகல், அநுராதபுரம், கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் போட்டியிடவுள்ளது. அல்லாஹ்வை முன்னிறுத்தி இந்த வன்னி மண்ணில் இருந்து பிரகடனத்தை செய்கின்றேன். இந்த தேர்தலில் 10க்கும் மேற்பட்ட பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை பெற்று பாராளுமன்றில் மூன்றாவது சக்தியாக நாம் எம்மை பரினாமித்துக் கொள்ளவுள்ளோம். அதே போல் ஆட்சி அமைக்கும் அரசாங்கத்துடன் பேரம் பேசி வடக்குக்கு மட்டுமல்ல, முழு நாட்டு மக்களுக்கும் எமது பணிகளை தொடர்வோம்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியினை பெற்றுக் கொள்வதற்காக தமிழ் – முஸ்லிம் உறவில் விரிசலையேற்படுத்த சிலர் செயற்பட்டனர். அவர்கள் தொடர்பில் எமது கட்சியும், மக்களும் தெளிவாக இருக்கின்றனர் என்று தெரிவித்த அமைச்சரும், தேசிய தலைவருமான றிசாத் பதியுதீன் இனிமேலும் இனவாதிகளின் வங்குரோத்து தனமான பொய் வார்த்தைகளுக்கு ஒரு போதும் எமது மக்கள் ஏமாறமாட்டார்கள் என்றும் கூறினார்.

unnamed2

Published by

Leave a comment