கொழும்பு: பொதுமக்கள் பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நேற்று நம்பிக்கை இல்லா பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியை சேர்ந்த 114 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ள இந்த நம்பிக்கையில்லா பிரேரணை நேற்று பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டது.
தேர்தலின் பின்னர் இடம்பெறும் தேர்தல் வன்முறைச் சம்பவங் களைத் தடுப்பதற்கு பொறுப்பு வாய்ந்த அமைச்சர் என்ற ரீதியில் அவர் தவறிவிட்டதாகவும் தொடர்ந்தும் அமைச்சுப் பொறுப்பில் அவர் இருப்பது தமக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்குட்பட்ட வகையில் 114 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்தை பெற்று நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்திருப்பதாக அவர் கூறினார்.
அமைச்சர் ஜோன் அமரதுங்க
தேர்தலின் பின்னர் ஐ.ம.சு.மு. ஆதரவாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தாக்கப்படுவதுடன் பல்வேறு பழிவாங்கல்களுக்கு உள்ளாகின்றனர். இதனைத் தடுப்பதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை. குறிப்பாக வத்தளை பிரதேச சபைக்குள் புகுந்து பிரதேச சபைத் தலைவர் மீதும் உறுப்பினர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்படவில்லையென பாராளுமன்றத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கையளிக்கத் தீர்¡மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இங்கு கருத்துத் தெரிவித்த மஹிந்தானந்த அழுத்கமகே, நல்லாட்சியை ஏற்படுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் எமது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது நிறுத்தப்பட வேண்டும் என்றார்.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் புதிய அரசாங்கத்துக்குத் தெளிவான செய்தியொன்றை வழங்கவிருப்பதாக இங்கு கருத்துத் தெரிவித்த விமல் வீரவன்ச கூறினார்.
Leave a comment