“கிழக்கின் முதலமைச்சர் நியமிக்கப்பட்டு விட்டார் அனைவரும் ஒன்று பட்டு மாகாணத்தைக் கட்டியெழுப்புவோம்”: சட்ட முதுமாணி எம்.ஐ.எம் அஸ்வர்
– சட்ட முதுமாணி எம்.ஐ.எம் அஸ்வர்
காத்தான்குடி: இழுபறி நிலையில் இருந்த கிழக்கின் முதலமைச்சர் விவகாரம் தற்பொழுது ஒரு முடிவுக்கு வந்துள்ள நிலையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் முதலமைச்சரைப் பரிந்துரை செய்து அதற்கான நியமணமும் கடந்த 06.02.2015 வழங்கப்பட்டு விட்டது.
எவ்வாறிருப்பினும் ஆட்சியமைப்பது பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய அரசியல் கட்சிகளும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தமையும் யாவரும் அறிந்ததே. இருப்பினும் தற்பொழுது இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வந்திருப்பதையிட்டு நாம் அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டியுள்ளது.
அதே நேரத்தில் கட்சி அரசியலுக்கு அப்பாலும் இன முரண்பாடுகளுக்கு அப்பாலும் செயற்படவேண்டிய தார்மீகப் பொறுப்பு மக்களை வழிநடாத்தும் அரசியல் தலைவர்கள் மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் உள்ளது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
இந்நிலையில் மிகவும் நிதானமாகவும், கட்சி அரசியல் இன முரண்பாடுகளுக்கு அப்பாலும் பாதிக்ப்பட்டிருக்கும் இம்மாகாணத்தை கட்டியெழுப்புவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குவதே அரசியலில் தார்மீகக் கடமையும் பொறுப்புமாகும்.
சட்ட முதுமாணி எம்.ஐ.எம் அஸ்வர்
முதலமைச்சர் பதவி என்பது குறிப்பிட்ட ஒரு ஊருக்கோ அல்லது ஒரு மாவட்டத்திற்கோ அல்லது ஒரு சமூகத்திற்கோ சொந்தமானது அல்ல. மாகாணத்திலிருக்கும் அனைத்து சமூகங்களுக்கும் உரித்தான ஒரு பொதுவான பதவியே இதுவாகும்.
தேசிய ரீதியில் நல்லாட்சி மலர்ந்துள்ள இத்தருணத்தில் முதலமைச்சராகப் பதவியேற்றிருக்கும் ஹாபிஸ் நஸீர் அவர்கள் தற்போதைய ஜனாதிபதியை முன்னுதாரணமாகக் கொண்டு கட்சி அரசியலுக்கு அப்பால் செயற்படுவார் என்ற நம்பிக்கையுடன் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி மாகாணத்தை கட்டியெழுப்புவதற்கு ஒன்று படுவதே தற்போதைய சூழ்நிலையில் பொருத்தமானதாகும்.
Leave a comment