காத்தான்குடி: கடந்த டிசம்பர்-ஜனவரி மாதத்தில் இலங்கையில் பல மாவட்டங்களிலும் ஏற்பட்டிருந்த வெள்ளப்பெருக்கில் காத்தான்குடியின் பல பகுதிகளும் பாதிக்கப்பட்டிருந்ததுடன், பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளில் வசிக்க முடியாமையால் பொது முகாம்களில் வசிந்து வந்தனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கம், பிரதேசம் தோரும் வழங்கியிருந்த வெள்ள நிவாரண கொடுப்பனவுகள், உரிய சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைந்திருக்கவில்லை. தேர்தல் காலமாக இருந்ததாலும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்ததாலும், வெள்ள நிவாரணக் கொடுப்பனவுகள் கொடுபடவில்லை.
இப்போது சுமார் 2000 ரூபாய் பெறுமதிக்கு வெள்ள நிவாரணப் பொருட்களை காத்தான்குடியின் கிராம சேவகர்கள் பிரிவினூடாக வழங்க சில கிராம சேவகர்கள் முன்வந்திருக்கின்றனர்.
எனினும் வெள்ள நிவாரணம் என்ற பேரில் பதியப்பட்டவர்களுள் அதிகமானவர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படாதவர்களாகவும், கிராம சேவகர்களுக்கு விசுவாசமானவர்களாகவுமே காணப்படுகின்றனர்.
இவ்வாறு பதியப்பட்டிருந்தவர்கள் இலங்கையின் 67 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிரமதானம் எனும் பேரில் கிராம சேவகர்களால் அழைக்கப்பட்டிருந்தனர்.
யார் யாரெல்லாம் (பதிவு செய்யப்பட்டவர்கள்) சிரமாதானத்திற்கு வருகிறார்களோ அவர்களுக்கே வெள்ள நிவாரண ‘துண்டு’ வழங்கப்படுவதாக கிராம சேவகர்கள் அறிவித்திருக்கின்றனர்.
கைக்குழந்தைகள் இருந்தாலும் பரவாயில்லை, சிரமதான இடத்திற்கு கண்டிப்பாக வரவேண்டும் எனவும், ஒரு புள்ளைப் பிடிங்கினாலும் போதுமானதே எனவும், குறைந்தது சிரமதானத் திடலுக்கு வரவேண்டும் போன்ற நிபந்தனைகள் கிராம சேவகர்களால் விடுக்கப்பட்டிருந்தன.
இதனால்தான் ஒரிரு புற்களைப் பிடிங்கிவிட்டு பல பெண்கள் சிரமதான திடலைவிட்டு வீட்டுக்குத் திரும்பியிருந்ததையும் காணமுடிந்தது.
சிரமதானம் என்பது கூலி இல்லாமல் செய்யப்படும் ஓர் உயரிய சமூகத் தொண்டாகும். ஆனால் ‘நிவாரணத் துண்டை’ப் பெறுவதற்காக அதிகமான பெண்கள் தங்களது குழந்தைகளையும் சுமந்துகொண்டு சிரமதானத் திடலுக்கு வருகை தந்திருந்ததை காண முடிந்தது.
‘யுவர் காத்தான்குடி’ இணையத்தளத்திலும் ‘சுதந்திர தின சிரமதான நிகழ்வுகள்’ என செய்தி வெளியாகி இருந்ததையும் காண முடிந்தது.
காத்தான்குடியில் வறுமை தலைவிதித்தாடுவதை இந்த ‘துண்டு’க்கான சிரமதானம் தெட்டத்தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
கிராம சேவகர்கள் உரிய பணத்தை, உண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குங்கள். அல்லது, தங்களது பிரிவிலுள்ள அத்தனை குடும்பங்களுக்கும் சமமாக பகிர்ந்தளிங்கள்.
ஊழல் இல்லாத புதிய ஆட்சியின் கீழ் இவ்வாறான வெள்ள நிவாரண மோசடிகள் சிரமதானம் என்ற பேரில் இடம்பெறுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
Published by


Leave a comment