‘கே.பி.’ வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை

KPகொழும்பு: விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் வெளிநாடுசெல்வதை தடைசெய்யும் உத்தரவொன்றை இலங்கையின் மேன்முறையிட்டு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை பிறப்பித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் சமர்ப்பித்த மனுவொன்றை ஆராய்ந்த பின்னரே நீதிபதிகள் இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுனில் வட்டகள பிபிசியிடம் தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அரச தரப்பு வழக்கறிஞர் ‘கே.பி.’ சம்பந்தமாக எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கைகள் குறித்த தீர்மானத்தை எடுப்பதற்கு கால அவகாசம் கோரினார்.

ஆனால் அப்படி கால அவகாசம் வழங்குவதானால் குமரன் பத்மநாதன் வெளிநாடு செல்வதை தடைசெய்து, உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு மக்கள் விடுதலை முன்னணியின் வழக்கறிஞர் கோரினார்.

அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அவர் வெளிநாட்டுக்குச் செல்வதை தடைசெய்து உத்தரவு பிறப்பித்தனர்.

அதேவேளை, கே.பி.க்கு உயிர் அச்சுறுத்தல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதால், அவருக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் கோரப்பட்டது.

கடந்த அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்ட குமரன் பத்மநாதனை இதுவரை நீதிமன்றத்தின் முன்னிறுத்தாத காரணத்தால், அவரை மீண்டும் கைதுசெய்து நீதிமன்றத்துக்கு கொண்டுவர வேண்டும் என்று கோரியே மக்கள் விடுதலை முன்னணி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.

மனு மீதான அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

kp

Published by

Leave a comment