ஓமந்தையில் சோதனை நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தம்

omanthaiயாழ்: வவுனியா ஓமந்தை வீதிச் சோதனை முகாமின் சோதனை நடவடிக்கைகள் யாவும் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் இயல்பாகப் போக்குவரத்து செய்வதற்கு அரசாங்கம் அனுமதித்திருக்கின்றது. பாதுகாப்பு அமைச்சு விடுத்த உத்தரவொன்றுக்கு அமைவாக திங்கட்கிழமை முதல் இது நடைமுறைக்கு வந்துள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான சகல போக்குவரத்துக்களையும் கண்காணித்து கட்டுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த இந்த சோதனைச்சாவடி சர்வதேச அளவில் அறியப்பட்டிருந்தது.

இந்த சோதனைச்சாவடியின் ஊடாக பயணம் செய்பவர்களும் அவர்களின் உடைமைகள், வாகனங்கள், வாகனங்களில் ஏற்றிச் செல்லப்படும் பொருட்கள் என்பன முழுமையாக சோதனையிடப்பட்ட பின்பே தொடர்ந்து பிரயாணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.

omanthai
ஓமந்தை சோதனைச்சாவடி

யுத்தம் நடைபெற்ற காலத்தில் ஓமந்தை சோதனைச்சாவடியில் அரச படையினரும், அதற்கு அப்பால் விடுதலைப்புலிகளும் தமது சோதனைச்சாவடிகளை அமைத்து முழுமையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இரண்டு நாடுகளுக்கிடையிலான ஓர் எல்லைப்புற சோதனைச்சாவடியை நினைவுபடுத்தும் வகையில் இந்த சோதனை நடவடிக்கைகளை இரு தரப்பினரும் அப்போது மேற்கொண்டிருந்தனர்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்தபின்பு விடுதலைப்புலிளின் சோதனைச்சாவடி இருக்கவில்லை. ஆயினும் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியைத் தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி அரசு தொடர்ந்து இயக்கி வந்தது.

Published by

Leave a comment