மெல்போன்: உலகக் கிண்ண தொடருக்காக அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன், நியுசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் என, இரு இடங்களில் ஒரே நேரத்தில் ஆரம்ப விழா நடக்கவுள்ளன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் 11ஆவது உலகக் கிண்ண தொடர் அவுஸ்திரேலியா, நியுசிலாந்தில் வரும்பெப் ரவரி 14இல் ஆரம்பமாகிறது.
மார்ச் 29ஆம் திகதி வரையிலான இத் தொடரில் 44 நாட்களில் 49 போட்டிகள் நடக்கவுள்ளன. இதற்கான ஆரம்ப விழா இரண்டு நாள் முன்னதாக வரும் பெப்ரவரி 12ஆம் திகதி மெல்போர்ன், கிறைஸ்ட்சேர்ச் என இரு இடங்களில் நடக்கவுள்ளன. இலங்கை நேரப்படி காலை 11.00 மணிக்கு ஆரம்பமாகி 3.30 மணிக்கு முடியும்.
மெல்போர்னில் உள்ள சிட்னி மையர் மியுசிக் பவுல் என்ற திறந்தவெளி மைதானத்தில் நடக்கும் விழாவில், உலகக் கிண்ண தொடரில் பங்கேற்கும் வீரர்கள், முன்னாள் கிரிக்கட் பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.பின் அவுஸ்திரேலிய கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இறுதியில், வாணவேடிக்கையுடன் ஆரம்ப விழா முடிகிறது.
இதுகுறித்து விக்டோரியா மாகாணத்தின் சுற்றுலா, விளையாட்டுத் துறை அமைச்சர் ஜோன் எரென் கூறுகையில்,
“உலகக் கிண்ண தொடரின் ஆரம்ப விழா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் போட்டி மற்றும் இறுதி (மார்ச் 29) என, அனைத்தும் மெல்போர்னில் நடக்கவுள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள், மெல்போர்னை சேர்ந்தவர்கள் இந்த விழாவைக் காண, சிட்னி மையர் மியுசிக் பவு லில் திரளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
மொத்தம் 30 ஆயிரம் பேர் அமரும் வகையிலான இம் மைதானத்தில் ஆரம்ப விழாவைக் காணவரும் ரசிகர்களுக்கு கட்டணம் எதுவும் இல்லை. அவுஸ்திரேலியாவில் நடக்கும் அதே மாலை நேரத்தில் நியுசிலாந்தின் கிறைஸ்ட் சேர்ச் நகரில் நோர்த் ஹாக்லே பார்க்கில், ஆரம்ப விழா நடத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.
கடந்த 2011இல் ஏற்பட்ட பூகம்பத்தால் சீரழிந்த இந்த நகரத்துக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் இங்கு நடக்கவுள்ள விழாவில், நியுசிலாந்தின் முன்னாள் வீரர் ரிச்சர்ட் ஹெட்லீ, ஸ்டீபன் பிளமிங் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். தவிர, நியுசிலாந்தின் முன்னணி கலைஞர்கள் பங்கேற்கும் பல நிகழ்ச்சிகளும் நடக்கவுள்ளன.
Published by


Leave a comment