மிதக்கும் ஆயுதக் களஞ்சிய நிறுவனத்திடம் விசாரணை

gotaகொழும்பு: இலங்கையில் தெற்கு கடலில் பெருந்தொகை ஆயுதங்களுடன் தடுத்துவைக்கப்பட்ட கப்பலை நிர்வகித்துவந்த கடல்சார் பாதுகாப்பு நிறுவனத்திடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஜனாதிபதித் தேர்தல் முடிந்து 10 நாட்களில் தெற்கே, காலி துறைமுகத்தில் பெருந்தொகை ஆயுதங்களுடன் கப்பலொன்று தடுத்துவைக்கப்பட்டிருந்தது.

மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் என்று வர்ணிக்கப்படுகின்ற இந்தக் கப்பலில் 12 பெரிய கொள்கலன்களில் பெருந்தொகை ஆயுதங்கள் இருந்ததாக அப்போது பொலிஸார் அறிவித்திருந்தனர். ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருந்தபோது, ஆட்சியை ஒப்படைக்காமல் தொடர்ந்தும் பதவியில் இருப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தரப்பினர், ஆயுதப் படைகளைக் கொண்டு சதித்திட்டம் புரிந்ததாக புதிய அரசாங்கத் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுக்கள் வெளியாகியிருந்த நிலையில் இந்தக் கப்பலும் பிடிபட்டிருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதேநேரம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்குகின்ற, இலங்கை அரசாங்கத்துக்கு சொந்தமான ரக்னா லங்கா எனப்படுகின்ற, நாட்டின் வணிக நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழங்குகின்ற நிறுவனத்துக்குச் சொந்தமான ஆயுத களஞ்சியசாலையிலும் அப்போது சோதனை நடத்தப்பட்டிருந்தது.

ரக்னா லங்கா நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தத் தொழில் ஒன்றை நடத்திவைக்கின்ற அவான்ட் கார்ட்(Avant Garde Maritime Security Services Limited) என்ற கடல்சார் பாதுகாப்புக்கான தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஆயுதக் கப்பலே காலி துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது.

ஆயுதக் கப்பல் குறித்து நாட்டின் புதிய பாதுகாப்பு அமைச்சின் உத்தரவில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இப்போது, அவான்ட் கார்ட் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகள் நடந்துவருகின்றன. அவான்ட் கார்ட் நிறுவனம் தனியார் இராணுவம் ஒன்றை நடத்திவந்ததாகவும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை வெல்லவைப்பதற்கான தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் உள்ளூர் ஊடகங்களில் குற்றச்சாட்டுக்கள் வெளியாகியுள்ளன.

இப்படியாக, பல்வேறு கோணங்களிலும் விசாரணையில் ஈடுபட்டுள்ள இலங்கை ரகசியப் பொலிஸார், அவான்ட் கார்ட் நிறுவனத்தின் உரிமையாளரான ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதியிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு 2011-ம் ஆண்டு தங்களின் நிறுவனம் உருவாக்கப்பட்டதாகவும் இலங்கையில் கடல்பாதுகாப்பு தொடர்பாக இயங்குகின்ற 23 நிறுவனங்களில் தங்களின் நிறுவனமும் ஒன்று என்றும் நிஸ்ஸங்க கூறினார்.

‘முப்படைகளிலும் அனுபவம் பெற்றிருந்த மூத்த ஓய்வுபெற்ற அதிகாரிகள் தான் எங்கள் நிறுவனத்தில் இருக்கின்றார்கள். எனது நிறுவனத்தில் தமிழர்கள் 200 பேர்வரையிலும் முஸ்லிம்கள் 600 பேர்வரையிலும் இருக்கின்றார்கள். எல்லாக் கட்சிகளை சேர்ந்தவர்களும் இருக்கின்றார்கள். இங்கு எந்தவிதமான அரசியல்வேலைத்திட்டங்களும் இல்லை’ என்றார் மேஜர் நிஸ்ஸங்க.

Published by

Leave a comment