கொழும்பு: முஸ்லிம் சமூகத்திற்கு பல வழிகளிலும் துன்பமிழைவித்து வந்த பலம் பொருந்திய மஹிந்த அரசாங்கத்தை காலம் பார்த்து கவிழ்த்துள்ளோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான ரிஷாத் பதியுதீன்தெரிவித்தார்.
முஸ்லிம் சமூகத்திற்கு கடந்த அரசாங்கம் பல்வேறு வழிகளிலும் அச்சுறுத்தல்களையும் துரோகங்களையும் செய்து வந்த போதிலும் அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு சமூகத்திற்கான பல போராட்டங்களையும் அழுத்தங்களையும் செய்ய வேண்டிய அபிவிருத்தி வேலைகளையும் மேற்கொண்டே வந்தோம்.
கடந்த அரசாங்கம் பலம் பொருந்தியதொரு நிலையிலேயே இருந்து வந்தது. இதனால் அரசைவிட்டு வெளியேறி மக்கள் உரிமைகளை வெல்வதற்கோ அல்லது அரசாங்கத்தை கவிழ்க்கவோ அக்கால சூழ்நிலைகள் பொருத்தமானதாக அமையவில்லை.
ஆதலால் தான் அரசாங்கத்தில் இருந்து கொண்டு மக்களுக்கு செய்ய வேண்டிய உச்சக்கட்ட அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வந்ததுடன் சமூகத்திற்கான அச்சுறுத்தல்கள் ஏற்பட்ட வேளைகளில் உரிமைக்குரலாகவும் எமது கட்சியின் தலைமைத்துவம் இருந்து வந்துள்ளது.
ஆனால் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காக உருவாக்கப்பட்ட ஏனைய பழைமை வாய்ந்ததும் அதிகடிப்படியான முஸ்லிம்களின் வாக்குப் பலத்தைப் பெற்ற பலம் பொருந்திய அரசியல் கட்சிகள் சமூகத்திற்கான எந்தவித அபிவிருத்திகளையோ அல்லது சமூகத்தின் உரிமைக்குரல் தகவோ இருக்கவில்லை.
கடந்த அரசாங்கத்தின் போது தம்புள்ள பள்ளிவாசல் கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் அளுத்கம மற்றம் வர்த்தக நிலையங்கள் போன்றவற்றில் திட்டமிட்ட முறையில் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது உள்ளிருந்து கொண்டு பல வழிகளிலும் அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் கொடுத்து வந்தோம். பொலிஸ்மா அதிபரை பதவி விலகக் கோரினால் மட்டுமல்லாமல் பொது பல சேனா என்ற அந்த இனவாதிகளுக்கெதிராக ஐந்து வழக்குகளை நீதிமன்றங்களுக்கு கொண்டு சென்றுள்ளோம். 1983 ஆம் ஆண்டிற்குப் பிறகு முஸ்லிம் சமூகத்திற்கெதிரான பாரிய வன்செயல்கள் உங்களது ஆட்சியிலேதான் இடம்பெற்றுள்ளது என அமைச்சரவையில் கலந்து கொண்ட ஜனாதிபதியிடம் தைரியமாக எடுத்துரைத்த போது ஜனாதிபதி ஆத்திரமடைந்து வெளியேறி விட்டார்.
ஆனால் சமூகத்தின் விடுதலைக்காய் உருவாக்கப்பட்ட அந்தக் கட்சியினால் ஒன்றுமே செய்து கொள்ள முடியவில்லை. ஜனாதிபதித் தேர்தல் வந்த போதும் கூட பல நூற்றுக்கணக்கான கட்சிக் கூட்டங்களை நடாத்தி காலத்தை இழுத்தடித்து விட்டு கடைசி நேரத்தில் வந்து இணைந்து கொண்டார்கள்.
அரசாங்கத்தை விட்டு நான் விலகிய போது கடந்த அரசாங்கம் என்னிடம் கெஞ்சியது மட்டுமல்லாமல் உங்களுக்குத் தேவையான அனைத்து தேவைகளையும் நிறைவு செய்து தருகிறோம் என்றார்கள். ஆனால் எனது முடிவில் மாற்றமில்லை. சமூகத்தின் நலனுக்கே முதன்மை இடம் என்றேன். இதன் பின்னர் எனக்கும் எனது குடும்பத்திற்கும் மரண அச்சுறுத்தல் கொடுத்தார்கள். அதற்கும் நான் பயப்படவில்லை.
மிகக் குறுகியதொரு காலத்தினுள் எமது கட்சி பாரிய பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது. இதனால் சமூகத்திற்கான முடியுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். எமது சமூகப்பணியினை ஏற்றுக் கொண்டு இன்று நாட்டின் நாலா திசைகளிலும் மக்கள் எமது கட்சியின் பக்கம் வந்து இணைந்து கொண்டிருக்கின்றனர்.
Published by

Leave a comment