கொழும்பு: இன்னும் 48 மணித்தியாலங் களுக்குள் கிழக்கு மாகாண முதலமைச்சரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நியமிக்கும். இதற்கான இணக்கப்பாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டுள்ளார், என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும், நகர அபிவிருத்தி மற்றும் தேசிய நீர்வழங்கல் அமைச்சருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற் குழுக்கூட்டம் நேற்று முன் தினம் (30) மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் றவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார். கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும், கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வருமான ஏ. எல். அப்துல் மஜீட் தலைமையில் இந்த செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இங்கு அமைச்சர் றவூப் ஹக்கீம் மேலும் உரையாற்றுகையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாணத்தில் அமைக்கப் போகின்ற ஆட்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த பிரதிநிதிகளையும் இணைத்து ஒரு நல்லாட்சியை ஏற்படுத்த முயற்சிக்கின்றோம்.
மக்களுக்கான இந்த நல்லாட்சியில் எல்லாக் கட்சிகளும் சார்ந்த பிரதிநிதிகளும் பூரண ஒத்துழைப்பை வழங்க முன்வரவேண்டும். நடக்கின்ற 100 நாள் வேலைத்திட்டத்தில் எல்லா விடயங்களையும் 100 நாட்களுக்குள் செய்துவிட முடியாது. நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முகம் கொடுக்கக் கூடிய வகையில் எமது கட்சிப் பணிகளை துரிதப்படுத்தி கட்சிக் கிளைகளைப் புனரமைத்து நமக்குள் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார். TK
Published by

Leave a comment