காத்தான்குடி: காத்தான்குடி நகரசபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் சோலை வரி அறவீடு தொடர்பில் இடம்பெற்ற நிதி நிர்வாக மோசடி தொடர்பில் ‘வார உரைகல்’ அம்பலப்படுத்திய முறைப்பாடு குறித்து நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் நகர சபை உறுப்பினர் SHM. பிர்தௌஸ் ஆசிரியர் இன்று மட்டக்களப்பு குற்றப்புலனாய்வுப் பொலிசாரிடம் முறைப்பாடு செய்தார்.
காத்தான்குடி நகரசபையானது தமது நிர்வாக எல்லையில் வசிக்கும் வரி இறுப்பாளர்கள் கடந்த 31.01.2015ம் திகதிக்கு முன்பாக தமது ஆதன வரியினைச் செலுத்தி முடிக்க வேண்டும் என்றும், அவ்வாறு செலுத்தப்படும் வரித் தொகைகளுக்கு 10மூ கழிவு வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது.
இதனைக் கருத்திற்கொண்டு பெருந்தொகையான வரி இறுப்பாளர்கள் தமது ஆதனங்களுக்கான வரித் தொகைகளை கடந்த 30.01.2015ம் திகதி வெள்ளிக்கிழமையன்றும் காத்தான்குடி நகரசபைக்குச் சென்று செலுத்தி இருந்தார்கள்.
இருப்பினும் இந்தக் கொடுப்பனவுகளுக்கான பற்றுச் சீட்டினை வழங்கும்போது அவற்றில் பெப்ரவரி 2ம் திகதி என பின் திகதியிடப்பட்ட மோசடி ஒன்று பரவலாக இடம்பெற்றது. இது தொடர்பான பொதுமக்களின் முறைப்பாடு ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, அதனை PMGGயின் கவனத்திற்கு அவர் நேற்று சனிக்கிழமை சமர்ப்பித்திருந்தார்.
அத்தோடு இந்த மோசடியினை நிரூபிக்கும் பற்றுச் சீட்டின் பிரதிகளையும் PMGGயின் நகரசபைப் பிரதிநிதிகளிடம் அவர் கையளித்திருந்தார்.
பொதுமக்களின் இந்த மோசடி தொடர்பான முறைப்பாடு மற்றும் அவர்களால் வழங்கப்பட்ட பற்றுச்சீட்டு ஆதாரங்கள் என்பனவற்றினைப் பரிசீலித்த PMGGயின் காத்தான்குடி பிரதேச உயர் மட்டக் குழு, இது தொடர்பில் உடனடியாகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என நேற்றைய தினம் கூடிய கூட்டத்தில் தீர்மானித்ததற்கமைய இன்று நகர சபை உறுப்பினர் SHM. பிர்தௌஸ் ஆசிரியர் மட்டக்களப்பு குற்றப்புலனாய்வுப் பொலிசாரிடம் இது தொடர்பான முறைப்பாட்டைப் பதிவு செய்தார்.
இதையடுத்து இன்று காலை ‘வார உரைகல்’ அலுவலகத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு குற்றப்புலனாய்வுப் பொலீசார், ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியரின் வாக்கு மூலதத்தை பதிவு செய்ததுடன் இதுதொடர்பான விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
Published by

Leave a comment