காத்தான்குடி: காத்தான்குடி நகர சபையினால் 2015ம் ஆண்டிற்கான சோலை வரி அறவிடும் நடவடிக்கைகள் தொடர்பாக காத்தன்குடியிலுள்ள சகல பள்ளிவாசல்களினதும் ஒலிபெருக்கிகள் வாயிலாக இம்மாத ஆரம்பத்தில் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது.
அவ்வறிப்பில், 2015 – ஜனவரி, அதாவது இம்மாத மாத இறுதிக்குள் சோலை வரிகளைச் செலுத்துபவர்களுக்கு 10 வீதம் கழிவு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதுடன், இவ்வரி அறிவீட்டை மேற்கொள்வதற்காக விசேட நடமாடும் சேவைகளும் நகர சபை நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வறிவித்தல் மற்றும் வரி அறவிடும் நடமாடும் சேவை நடவடிக்கைகள் காரணமாக பிரதேச வரியிறுப்பாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலும் தமது 2015ம் ஆண்டுக்கான சோலை வரியைச் செலுத்தி வந்தனர்.
இவ்வாறு (30.01.2015) வெள்ளிக்கிழமையும் பல வரியிறுப்பாளர்கள் நகர சபை அலுவலகத்திற்குச் சென்று தமது வரிப்பணத்தினைச் செலுத்திப் பற்றுச் சீட்டைப் பெற்றனர்.
எனினும், நேற்றைய தினம் செலுத்தப்பட்ட சோலை வரிக்கு, 02.02.2015ம் திகதியிட்டே நகர சபையினால் பற்றுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக பலரும் எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
நகர சபையில் 30.01.2015 அன்று செலுத்தப்பட்ட பணத்திற்கு, 02.02.2015ம் திகதியிட்டு உத்தியோகபூர்வ பற்றுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டிருப்பதானது, உண்மையிலேயே ஒரு பகிரங்கமான மோசடியாகும்.
நேற்றைய தினம் செலுத்தப்பட்ட இவ்வாறான வரிப்பணத் தொகை எதிர்வரும் 02.02.2015 திங்கட்கிழமை வரை யாருடைய பொறுப்பில் இருக்கும்? என்பது இங்கு எழுகின்ற ஒரு கேள்வியாகும்.
அடுத்ததாக, 30.01.2015ல் அறவிடப்பட்டு 02.02.2015ம் திகதியிட்டு பற்றுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ள அன்றைய நாளின் சோலை வரி வரவுகள், நகர சபையின் 2015 ஜனவரி மாதத்திற்கான மாதாந்த வரவு செலவுக் கணக்கறிக்கையில் உள்வாங்கப்படுமா? அல்லது பெப்ரவரி மாதக் கணக்கறிக்கையில் உள்வாங்கப்படுமா? என்பதும் மற்றொரு கேள்வியாகும்.
காத்தான்குடி நகர சபையில் பல்வேறு வகையான ஊழல் மோசடிகள், அதிகாரத்துஷ்பிரயோகங்கள் இடம்பெற்று வருவதாக தொடர்ந்தேச்சையாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது.
எனினும், இவற்றை மறுக்கும் வகையில் அண்மையில் நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், ‘நகர சபையில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருக்குமாயின் அவற்றை இம்மாத இறுதிக்குள் இலஞ்ச ஊழல் மோசடி ஒழிப்புப் பிரிவில் முறையிடுமாறும், அவ்வாறு முறையிடத் தவறும் பட்சத்தில் குறித்த குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியவர்கள் அவற்றை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும்’ எனவும் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
இம்மாதம் முடிவதற்கு ஒரு நாள் இருக்கையிலேயே நகர சபையில் இடம்பெற்றுள்ள இந்த சோலை வரி அறவீட்டிற்கு பின் திகதியிட்டு பற்றுச் சீட்டு வழங்கப்பட்டுள்ள மோசடிக் குற்றச்சாட்டை நான் ஊடகங்களின் வாயிலாக பகிரங்கமாக முன்வைக்கின்றேன்.
அத்துடன் இன்று நண்பகல் 02:30 மணியளவில் இந்த மோசடி தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு சபையின் எதிர்க்கட்சி உறுப்பினரான ஜனாப். எஸ்.எச்.எம். பிர்தௌஸ் ஆசிரியர் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான் ஆகியோரிடமும் நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
இணைக்கப்பட்டுள்ள பற்றுச்சீட்டில் வரியிறுப்பாளரின் பெயர், ஆதன இலக்கம், செலுத்தப்பட்ட தொகை என்பவை வரியிறுப்பாளரின் பாதுகாப்பைக் கருதி என்னால் மறைக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை எனது இணையதளம் மூலமும், ஏனைய இணையதள ஊடகங்கள் மூலமும் வெளிக்கொணரப்படும் இந்த மோசடிக் குற்றச்சாட்டுக்கு, 02.02.2015ம் திகதியிடப்பட்டும், அதே திகதியிலான நகர சபையின் உத்தியோகபூர்வ முத்திரை பதிக்கப்பட்டும் காணப்படும் இப்பற்றுச்சீட்டே பலமான ஆதாரமாகும்.
இந்த மோசடிச் செயற்பாடு குறித்து நகர சபையின் ஆளுந்தரப்பு நிர்வாகம் என்ன பதிலளிக்கப் போகின்றது?
மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர், உள்ளுராட்சி பொது நிர்வாக அமைச்சு என்பனவும், நல்லாட்சி’ குறித்து நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அக்கறை கொண்டு அரும்பாடுகள்பட்டு ‘மைத்ரீ’ ஆட்சியைக் கொண்டு வந்த அரசியல் கட்சிகளின் தலைவர்களும் என்ன நடவடிக்கைகள் எடுக்கப் போகின்றனர்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Published by


Leave a comment