கொழும்பு: நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க வினால் இன்று சமர்ப்பிக்கப் பட்டுள்ள வரவு செலவுத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வின் ஆலோசனைகளுக்கு அமைய எமது அரசின் முதலாவது வரவு செலவுத்திட்டமாக அமைகிறது. என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். பட்ஜட் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கும் போது கூறியதாவது,
இந்த வரவுசெலவுத்திட்டம் முழுக்க முழுக்க மக்கள் நல வரவுசெலவுத்திட்டமாகவே கருதுகிறேன். மக்கள் சற்றும் எதிர்பார்க்காத விதத்தில் நிவாரணங்களை அள்ளி வழங்குகின்ற வரவுசெலவுத்திட்டம் என்பதுடன், வரவுசெலவுத்திட்டம் ஒன்று சமர்ப்பிக்கப்படும்போது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அதேவேளை, ஒருபுறம் வரிச்சுமை களை சுமத்தும் முன்மொழி வுகளும் வைக்கப்படுவது வழக்கம். ஆனால் இது அப்படி அமைய வில்லை. சிகரட் ஒன்றின் விலைகூட அதிகரிக்கப் படவில்லை.
இன்றைய வரவுசெலவுத்திட்டத்தில் சுமத்தப்பட்ட வரிகள் அனைத்துமே உயர்மேல்மட்ட செல்வந்தர்களுக்கானதே. மேல்மட்டத்தினருக்குக் கூட வரி சுமத்தப்படவில்லை. எனவே கடந்த காலத்தில் எமது இடதுசாரி தலைவர்கள் கூட எம்மோடு இணைவதற்கு தயங்கினர்.
ஏனெனில் எமது அரசு ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய லிபரல் கொள்கையை கடைப்பிடிக்கிறது என்று குற்றஞ்சுமத்தி னார்கள். ஆனால் இன்று நாங்கள் அப்படியானவர்கள் இல்லையென்பதை இந்த வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் நாங்கள் அவர்களுக்குக் காண்பித்திருக்கிறோம்.
இன்று அவர்களுக்கு சமூக பொருளாதாரம் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறோம். புதிய லிபரல் பொருளாதாரக் கொள்கை மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில்தான் இருந்தது என்பதை அவர்கள் நினைவுகூறவேண்டும். உயர்மேல்மட்ட வர்த்தகர்கள் அத்தனைபேருமே அன்று மஹிந்த ராஜபக்ஷவின் அருகிலேயே இருந்தனர்.
எனவே நான் இடதுசாரித் தலைவர்களுக்குக் கூறுகிறேன், எமது அரசியல் நடவடிக்கை குறித்து சற்றுக் கவனம் செலுத்துங்கள் என்று கூற விரும்புகிறேன். எனது நண்பர் வாசுதேவ நாணயக்கார கூட நாங்கள் இன்று சமர்ப்பித்த வரவுசெலவுத்திட்டம் அவர்களின் எண்ணக்கரு என்று கூறினார். எனவே இது முழுக்க முழுக்க மக்கள் நலன் வரவுசெலவுத்திட்டம் என்பதைக் கூற விரும்புகிறேன்.
இதேபோல, ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அத்தனைபேரையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம். அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்போம். ஏனென்றால் எமது தரப்பினர் கூட இந்தத் தவறுகளை செய்யக்கூடாது என்பதை வலிறுத்துவதற்கே.
நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு இரவுபகலின்றி அயராது உழைப்போம் என்பதை கூறுவதுடன், எம்மிடமுள்ளது எல்லாம் மக்கள் பலம் மட்டுமே. ஏனைய அனைத்து பலமும் மற்றவர்களிடமே இருந்தது. அப்பாவி எல்லோரும் சேர்ந்து எங்களுடன் உழைத்தனர். அவர்களை ஒருபோதும் மறக்க மாட்டோம்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம்
இந்த வரவுசெலவுத்திட்டம் மக்கள் எதிர்பார்த்ததைவிடவும் கூடுதலான அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு, அதேநேரம், மக்களுக்கு தக்களுடைய வாழ்க்கைச் செலவைக் சமாளிப்பதற்கு ஏதுவாக சம்பள அதிகரிப்பு தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள உத்தரவாதம் உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில் இருப்பது மகிழ்ச்சிகுரிய விடயமாகும்.
கடந்த தேர்தல் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகள் முற்றாக நிறைவேற்றப்படுகின்ற இந்த விடயம் மக்களுக்கு மிக ஆறுதலைத் தரும் என்றே நம்புகிறேன். பாராளுமன்ற உறுப்பினர்களைப் பொறுத்த வரையில் அவர்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு 50 இலட்சம் ரூபாவிலிருந்து ஒரு கோடி ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருப்பது ஒரு வரவேற்கத்தக்க விடயம்.
ஆளும்தரப்பு உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இது ஒதுக்கப்பட்டிருப்பது இந்த தேசிய அரசியலில் எல்லோரையும் அழைத்துச் செல்லும் ஒரு நடவடிக்கையாகவே கருதுகிறேன். இதுவொரு மகிழ்ச்சிக்குரிய விடயம்.
எவருடைய தயவும் இல்லாமல் இந்த நிதி எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் வழங்கத் தீர்மானித்திருப்பது வரவேற்கத்தக்கது.
உரமானியம் வழங்கும் விடயத்திலும் எந்தவித மாற்றமும் இல்லாமல் இறக்குமதி செய்யப்படும் உரத்தின் தரத்தை கருத்தில்கொண்டு பெற்றுக்கொடுக்க முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. நெல்லுக்கான உத்தரவாத விலையை அறிவித்து விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் விதத்தில் வரவுசெலவுத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த வரவுசெலவுத்திட்டம் எதிர்பார்த்ததைவிட அதிகூடிய மக்களின் ஆதரவைப் பெறுகின்ற ஒரு வரவுசெலவுத்திட்டமாகவே கருதுகிறேன்.
அமைச்சர் அர்ஜுன ரணதுங்க
‘கசினோ’வை நிறுத்துவதற்கு எடுத்துள்ள நடவடிக்கையை நான் வெகுவாகப் பாராட்டுகின்றேன். தனிப்பட்ட விதத்தில் எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த நாட்டுக்கு ஏற்படவிருந்த பெரும் அழிவைத் தடுத்துநிறுத்துவதற்கு எடுத்த முயற்சியாக கருதுகிறேன் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், மக்களுக்கு நிவாரணங்களை அள்ளி வழங்குவதால் அரசுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. என்றாலும் மக்களை பற்றி சிந்திக்கும் அரசு என்ற வகையில் மக்களுக்கு நிவாரணம் வழங்கவிருக்கிறோம்.
மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்க மக்கள் அணிதிரண்டனர். இதேபோன்று ரணில் விக்ரமசிங்வை பிரதமராக்க மக்கள் அணி திரண்டனர். இவற்றின் பிரதிபலனாக மக்களுக்கு வழங்க மக்களுக்காக தயாரிக்கப்பட்ட வரவுசெலவுத்திட்டம் கடந்த வரவுசெலவுத்திட்டத்துடன் ஒப்பிடும் போது அத்தியாவசிய பொருட்களின் விலைகள் வெகுவாகக் குறைந்துள்ளன என்றும் கூறினார்.
அமைச்சர் ரிசாட் பதியுதீன்
இந்த வரவுசெலவுத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தலின்போது மைத்திரி நிர்வாகம் என்பதை அறிமுகப்படுத்தி முன்வைத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரவுசெலவுத்திட்டமாக இதனைப் பார்க்கிறோம்.
குறிப்பாக கைத்தொழில்துறையை மேம்படுத்துவதற்காக அதேபோல இந்த நாட்டில் வாழுகின்ற வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைத்து அவர்களை மகிழ்ச்சியடைய வைக்கக் கூடிய பல விடயங்களை உள்ளடக்கியதாக இந்த வரவுசெலவுத்திட்டம் அமைந்துள்ளது.
ஏற்றுமதித்துறையை மேம்படுத்துவதற்காக பல ஆக்கபூர்வமான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே இதனூடாக எதிர்காலத்திலே மைத்திரி ஆட்சியை இந்த நாட்டில் நிலைநாட்டுவதற்கு தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவரும் வழங்கிய அந்த ஆதரவை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு ஆரம்பமாக இந்த வரவுசெலவுத்திட்டம் அமைந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
அமைச்சர் அகிலவிராஜ்
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்விக்காக படிப்படியாக ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெயின் விலைகள் குறைக்கப்பட்டன. இப்போது மண்ணெண்ணெயின் விலை மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
முன்னர் ஜனாதிபதி கடந்த காலத்தில் பெருந்தொகை பணத்தை கோடிக்கணக்கான பணத்தை ஒதுக்கியிருந்தார். ஆனால் இன்றைய எமது ஜனாதிபதி தேர்தலுக்காக சிறுதொகையை மட்டுமே ஒதுக்கியுள்ளார்.
இந்த தெளிவான மாற்றத்தை மக்கள் இன்று உணர்ந்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன். எனவே இந்த மாற்றத்தை மக்கள் நன்றாக புரிந்துகொண்டு தொடர்ந்தும் எமக்கு ஆதரவு நல்குவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.
இதேவேளை மக்கள் ஏற்படுத்திய இந்த மாற்றத்தின் பிரதிபலனை நேரடியாக கண்கூடாக மக்களுக்குக் காணக்கூடியதாக இருக்கின்றது.
Published by


Leave a comment