கொழும்பு: இலங்கையின் புதிய அரசாங்கம் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால – பிரதமர் ரணில் தலைமையிலான புதிய அரசாங்கம் இந்த இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில், மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான வாக்குறுதிகளையும் அரசாங்கத்தின் செலவுகளைக் குறைப்பதற்கான திட்டங்களையும் முன்வைத்துள்ளது.
ஏற்கனவே தேர்தல் வாக்குறுதியில் உறுதியளித்திருந்ததன்படி, அரச ஊழியர்களுக்கு அடுத்த மாதம் முதல் 5000 ரூபா சம்பளம் உயர்த்துவதாக புதிய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மேலும் 5000 ரூபா உயர்த்தி அரச ஊழியர்களின் சம்பளத்தை மொத்தமாக 10000 ரூபாவால் அதிகரிப்பதாக கருணாநாயக்க கூறினார்.
தனியார் துறை ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்குமாறும் நிதியமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஓய்வூதியக் கொடுப்பனவை 1000 ரூபாவால் அதிகரிப்பதாகவும் சமுர்த்தி வறுமை நிவாரணக் கொடுப்பவை 200 வீதத்தால் அதிகரிப்பதாகவும் இம்முறை பட்ஜெட்டில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணித் தாய்மாருக்கு 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கவும் புதிய அரசாங்கம் முன்வந்துள்ளது.
விலைகள் குறைப்பு
இதுதவிர, அடித்தட்டு மக்களை நேரடியாகப் பாதிக்கும் 13 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீனி வரி 28 ரூபாயிலிருந்து 10 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான பால்மா 400 கிராம் 61 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
கோதுமை மா உள்ளிட்ட மற்றபல உணவுப் பொருட்களின் விலைகளும் கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையின் விலைகளுக்கு ஏற்ப, புதிய அரசாங்கம் எரிபொருட்களின் விலைகளை அண்மையில் கணிசமான அளவு குறைத்திருந்தது.
இப்போது சமையல் எரிவாயு 12.5 கிலோ சிலிண்டருக்கு 300 ரூபா குறைக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் விலை லீட்டருக்கு 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு 50 வீத கடன் தள்ளுபடி
இரண்டு லட்சம் ரூபாவுக்கும் குறைந்த தொகைக்கு வங்கிகளில் அடகு வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளின் வட்டியை ரத்துசெய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களின் நெல், பால் போன்ற உற்பத்திகளின் கொள்வனவு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
விவசாயிகளின் கடன்களில் 50 வீதத்தை தள்ளுபடி செய்வதாகவும் புதிய அரசாங்கம் அறிவித்துள்ளது. வயோதிபர்களின் போக்குவரத்து செலவை 50 வீதம் குறைப்பதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுதவிர, பல்வேறு வரிக்குறைப்பு நடவடிக்கைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
1000 சிசிக்கு குறைவான இயந்திரங்களைக் கொண்டுள்ள வாகனங்களுக்கான வரியில் 15 வீதம் குறைக்கப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. கைத்தொலைபேசிகளுக்கு முன்கூட்டிய கட்டணம் செலுத்தும்போது அறவிடப்பட்ட 25 வீத வரியையும் அரசாங்கம் தள்ளுபடி செய்துள்ளது. வயோதிபர்கள் ஒரு மில்லியன் ரூபாவுக்கு அதிக பணத்தை வங்கியில் வைத்திருந்தால் 15 வீதம் வட்டி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செலவுகள் குறைப்பு
முன்னைய அரசாங்கம் இந்த ஆண்டில் ஜனாதிபதிக்காக செலவிட இருந்த தொகை 9000 கோடி ரூபாவுக்கும் அதிகம் என்றும் அதனை புதிய ஜனாதிபதி 290 கோடி ரூபாவுக்கும் குறைந்த தொகைக்கு குறைத்துவிட்டதாக நிதியமைச்சர் கூறினார்.
இம்முறை புதிய அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைத்ததன் மூலம் இரண்டரை பில்லியன் ரூபா பணம் சேமிக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர்கள் தங்களின் வேலைத்திட்டங்களுக்காக செலவிடுவதற்கு வழங்கப்படும் பன்முகப்படுத்தப்பட்ட நிதியை 50 லட்சம் முதல் ஒரு கோடி ரூபா வரை உயர்த்துவதாகவும் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்பி பிளஸ் ஏற்றுமதிச் சலுகை இழக்கப்பட்டதால், கடந்த 7 ஆண்டுகளாக இலங்கையின் பொருளதாரத்துக்கு 5000 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ரவி கருணாநாயக்க கூறினார்.
2014-ம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின்படி, இலங்கை அரசாங்கம் பட்டுள்ள கடன்தொகை 8800 பில்லியன் ரூபாவை எட்டுகின்றது.
மொத்தத் தேசிய உற்பத்தியில் 84.9 வீதம் கடனாக இருக்கின்ற நிலையில், பெருந்தொகை வெளிநாட்டுக் கடனை தங்களின் அரசாங்கம் திரும்பச் செலுத்த வேண்டியிருப்பதாகவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a comment